Breaking News :

Thursday, November 21
.

ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு ஏன்?


சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.

ஸ்ரீ வாராஹி தாயே சரணம்!

அவளுக்கு சதுரங்க சேனா நாயிகா என்றொரு திருநாமம் உண்டு. அதாவது அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள் என்று அர்த்தம். இவளை, தண்டினி என்றும் சொல்வர். சப்த மாதர்களில் ஒருவரான இவள்...ஸ்ரீவாராஹி! சிறந்த வரப்பிரசாதி.

நம் மனத்துள் எண்ணங்கள் தோன்றினால் மட்டும் போதாது. அது காரியமாக, செயலாக மாறவேண்டும் அல்லவா? அப்படி எண்ணத்தைக் காரியமாக மாற்றும் சக்திதான், ஸ்ரீவாராஹி தேவி. ஒட்டுமொத்த பிரபஞ்ச சக்தியைக் குறிப்பவளுக்கு நம் மனத்தை அறிந்துகொள்வதெல்லாம் எம்மாத்திரம்?

ஆடி மாதத்தில் ஸ்ரீவாராஹியை வழிபடுவது சிறப்பு. இந்த மாதத்தில், ஆஷாட நவராத்திரி நாட்களிலும் ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஸ்ரீவாராஹிதேவிக்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து சாதம், வடை, தயிர்சாதம் என இவற்றில் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்து (பால் சாதம், திலா அன்னம், எள்ளுருண்டை நைவேத்தியமும் செய்யலாம்), மல்லி, முல்லை, நீலசங்கு புஷ்பம், கருந்துளசி, வில்வம், மருக்கொழுந்து, செந்தாமரை, வெண்தாமரை ஆகிய பூக்களால் அர்ச்சித்து வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் பெறலாம்.

ஸ்ரீவாராஹிக்கு உகந்த சிவப்பு, நீலம் மற்றும் பச்சை புடவையைச் சார்த்தி வழிபடுவது, கூடுதல் பலனைத் தரும்.


மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள்.


1. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோயில் உள்ளது. இக்கோயில் உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாகக் கருதப்படுகிறது.
2. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் கோயில் வராகி வழிபட்ட தலமாக அறியப்படுகிறது.

3. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் எனும் பெயரில்) கோவில் உள்ளது. இங்கு வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும்.

4. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள என்.சுப்புலாபுரம் (எ) நரிப்பட்டி என்ற ஊரில் வாரஹி அம்மன் கோவில் உள்ளது

தமிழகத்தில் சிவாலயங்கள் பலவற்றிலும் சப்தமாதர்களுக்கு சந்நிதிகள் உள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் பெரியகோயில் முதலான சில ஆலயங்களில், ஸ்ரீவாராஹி தேவிக்கு தனியே சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை! பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும்; அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள்.

கூப்பிட்ட குரலுக்கு வருவாள். ஆக வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராகியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்.எதிரிகளால் பாதிப் படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.

இந்த பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராகி. சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி. சிவாலயங்களில் கன்னி மூலையில் இவர்களை காணலாம் ..

“ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்
களிக்கும் இச் சிந்தையில் காரணமாம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே ! ”
– திருமூலர்

உலகையே ஒளிர்விக்கும் பராசக்தி என்ற அம்பிகை நம் மனதில் எழுந்தருளினால், உண்மைப் பொருள் விளங்கும் ; மனம் தெளிவு பெறும் . அவளை அறிந்து கொள்பவருக்கு அனைத்துச் செல்வங்களும் வாய்க்கும் என்று திருமூலர் கூறுகிறார். அருள்மிகு முத்தவடுகநாத சித்தர், அம்பிகையின் மறுவடிவமான வராஹி அம்மனிடம் சரணடைந்து சித்தி பெற்றார். அதுவும் தமது ஐந்தாம் வயதில்.

அபிராமி அந்தாதி :
நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”
“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’
என அபிராமிபட்டர் துணையாகக் கொண்டாடிய அம்பிகையின் வடிவம் வாராஹி.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.