கலியுக வரதனாம் கண்கண்ட தெய்வம் திருமலை வேங்கடவனே இனி நம் ஒவ்வொருவரின் வறுமையை விரட்டி செல்வத்தை அருள வேண்டும். அதனால், இயன்ற போதெல்லாம் இத்தலங்களை தரிசித்து வாருங்கள்.
கும்பகோணம் குமரன் தெருவிலுள்ள திருக்குடந்தை திருப்பதி என்கிற ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயில் 600 வருடங்கள் பழமையானது. இங்கு மூலவராகவே வெங்கடாஜலபதியும், தனிச் சந்நதியில் பத்மாவதித் தாயார் அருள்கிறார். பஞ்சமுக ஆஞ்சநேயர், மகாவிஷ்ணுவின் பத்து தசாவதாரப் பெருமாள்களின் சந்நதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
குணசீலம்
திருச்சிக்கு அருகே குணசீலம் எனும் தலத்தில் மூலவராகவே பிரசன்ன வெங்கடாஜலபதி அருள்கிறார். இங்கும் சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சந்நதி இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோயிலாகும். உற்சவரின் திருநாம ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆகும். ஒவ்வொரு கோயிலிலும் விழாவின்போது மட்டுமே கருட சேவை சாதிப்பார்கள். ஆனால், இங்கு பிரதி திருவோண நட்சத்திரத்தன்று கருட சேவை சாதிக்கும் நிகழ்வு நடைபெறும். பக்தர்களின் மனக்குறை மட்டுமல்லாது மன நோயாளிகள் பூரணமாக நிவர்த்தி பெற இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர். திருச்சி-சேலம் பாதையில் 24 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.