அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில்...!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் என்னும் ஊரில் அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திருச்சியில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் ஸ்ரீரங்கம் உள்ளது. ஸ்ரீரங்கத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தலத்தில் ரங்கநாதர் பாற்கடலில் பள்ளி கொண்டு சயன கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார்.
மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. இத்தலத்து விமானம் பிரணவாக்ருதி எனப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் இத்தலத்தில் சுவாமி முத்தங்கி சேவை சாதிக்கிறார்.
இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ராஜகோபுரங்களில் ஒன்றாகும்.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 1வது திவ்ய தேசமாகும்.
ஸ்ரீரங்கம் கோயிலில் வருடத்திற்கு 7 முறை பெருமாள் திருக்கோயிலை விட்டு வெளியே வந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார்.
வேறென்ன சிறப்பு?
ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில், அஷ்ட நாகாபரணம் அணிந்து, இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர்.
பொதுவாக ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில், தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூதேவி என இருவரும் காட்சி தருகின்றனர்.
இது மோட்சம் தரும் தலம் என்பதால் இத்தலத்து பெருமாளை வணங்குவது பிறவிப் பயனாகும்.
வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசிக்கு முன்புள்ள 10 நாட்கள் பகல் பத்து என்றும், வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் 10 நாட்கள் இராபத்து என்றும் அழைக்கப்படுகிறது.
ஜனவரி 1ஆம் தேதியான இன்று மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறார்.
வைகுண்ட ஏகாதசியன்று வழக்கமான பூஜைகளுக்கு பிறகு காலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, நம்பெருமாள் திருக்காட்சி தர உள்ளார்.
இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம் அடைந்தார். இவருக்கு இங்கு தனிச்சன்னதி உள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம், மாசி மாத தெப்பத்திருவிழா ஆகியவை இக்கோயிலில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பு, சனிக்கிழமை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வி ஞானம் பெருக, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, விவசாயம் செழிக்க இத்தலத்து பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சுவாமிக்கு வெண்ணெய் பூசுதல், குங்குமப்பொடி சாற்றுதல், மார்பிலும் பாதங்களிலும் சந்தன குழம்பு அணிவித்தல், தூய உலர்ந்த ஆடை சாற்றுதல் போன்ற நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
கு பண்பரசு