Breaking News :

Friday, April 04
.

பாகவதத்தை உரைத்த சுகப்பிரம்மரின் கதை!


சுகப்பிரம்ம மகரிஷி அவர்கள் ஞானத்தை இழந்து திரும்ப பெற்ற கதை.
மனிதனுக்கு எத்தனை வகை குணங்கள் இருந்தாலும் தற்பெருமை மட்டும் கூடவே கூடாது. அது மனிதனை அழித்து விடும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

வியாசரின் மகன் சுகபிரம்மர். சுகம் என்றால் கிளி. சுகப்பிரம்மர் என்றால் கிளி முகம் கொண்டவர் .பிறந்த உடனேயே இவருக்கு ஞானம் வந்து விட்டது . எள் முனையளவு கூட களங்கமில்லாத மனதுடையவர் ஆக இருந்தார்.

ஒருநாள் வியாசர் சுகப்பிம்மா இங்கே வா என்றார். வருகிறேன் என்று சுகப்பிரம்மர் மட்டுமல்ல அங்கே நின்ற மரம் மட்டை செடி கொடி எல்லாம் வருகிறேன் என்றது .இதைக்கண்டு சுகப்பிரம்மருக்கு பெருமை பிடிபடவில்லை .ஆஹா நான் வருகிறேன் என்று சொன்னால் ஊரில் உள்ள மரம் மட்டை செடி கொடிகள் எல்லாம் கூட நான் வருகிறேன் என்று கூறுகிறது. அப்படி என்றால்  அனைத்திலும் நான் இருக்கிறேனா அப்படி என்றால் நான் எவ்வளவு பெரிய ஆள் என்று நினைத்தாரோ இல்லையோ அவருடைய ஞானம் அக்கணமே அவரை விட்டுப் போய்விட்டது.
உடனே வியாசர் மகனிடம் சுகா தற்பெருமையால் உனது ஞானம் அனைத்தையும் இழந்தாய் .நீ உடனே சென்று ஜனகரை பார்த்து உபதேசம் பெற்று வா என்று கூறினார். சுகரும் உடனே தந்தை சொல் கேட்டு ஜனகரை பார்க்க மிதிலைக்கு சென்றார்.

மகாராஜாவாக இருந்தும் ஜனகர் தாமரை இலைத் தண்ணீர் போல் ராஜாங்கத்தில் குடும்ப வாழ்வில் பட்டும் படாமல் இருந்தார். அவரை சந்திப்பதற்காக வாயிற்காப்போனிடம் அனுமதி கேட்டார் .அதற்கு அவன் சுவாமி இங்கே நில்லுங்கள் நான் போய் அரசரிடம் அனுமதி பெற்று வருகிறேன். நீங்கள் யார் என்று கேட்டால் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டான்.

அதற்கு உடனே சுகப்பிரம்ம மகரிஷி அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று உன் மன்னனிடம் சொல் என்று கூறினார் .உடனே சென்று மன்னனிடம் அவர் கூறியபடியே கூறினான். உடனே மன்னர்  ஜனகர் அவர் நாலைந்து பேர்களுடன் வந்து இருக்கிறார் .அவரை மட்டும் தனியாக வரச்சொல் என்று கூறினார் .அது கேட்டு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

தனியாகத்தானே வந்திருக்கிறார் .பின் ஏன் மன்னர் இவ்வாறு கூறினார் என்று குழம்பிப்போய் எதிர்த்து கேள்வி கேட்க முடியாத காரணத்தினால் மன்னர் கூறியதை வந்து அப்படியே சுகப்பிரம்மரிடம் கூறினான்.

அவர் உடனே சரி சுகப்பிரம்மம் வந்திருக்கிறது என்று சொல் என்று கூற காவலனும் மன்னனிடம் அவ்வாறே சொல்ல  இன்னும் ஒரு ஆள் கூட இருக்கிறார் .அவரையும் விட்டுவிட்டு வரச்சொல் என்று கூறினார்.காவலனுக்கு மேலும் குழப்பம் .இருந்தும் அவரிடம் சுவாமி இன்னுமொருவர் தங்களுடன் உள்ளாராம். அவரையும் விட்டு விட்டு வர சொன்னார் மன்னர் என்று கூறினார்.

சரியப்பா சுகப்பிரம்மன் வந்திருக்கிறான் என்று சொல் என்று சொன்னதும் அவனும் அவ்வாறு சொல்ல அவரை உடனே உள்ளே வரச் சொல் என்று ஜனக மகாராஜா அனுமதி கொடுத்தார்.அவரைக் கண்டதும் ஜனக மகாராஜா அவரிடம் பேசவில்லை. எழுந்து அவருக்கு ஆசனம் வழங்கவில்லை .அதற்கு பதிலாக அங்குள்ள மொட்டை அடித்த தலையுடன் உள்ள ஒருவனை அழைத்து அவனை அமர வைத்து அவன் தலையில் ஒரு தட்டை வைத்து தட்டில் நிறைய எண்ணையை ஊற்றினார்.
டேய் நீ உடனே புறப்பட்டு கீழரத வீதி மேல ரதவீதி என்று அனைத்தையும் சுற்றிவிட்டு இங்குவா.

தட்டு கீழே விழக்கூடாது .மேலும் தட்டிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட கீழே சிந்தக் கூடாது. அவ்வாறு சிந்தினால் உன் தலையை வாங்கி விடுவேன் என்று எச்சரித்தார். அவன் கிளம்பினான். செல்லும் வழியெல்லாம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் வானவேடிக்கை கச்சேரி முதலியன நடந்துகொண்டிருந்தது .ஆனால் அவன் எதிலும் கவனம் செலுத்தவில்லை. தட்டிலும் எண்ணெயிலேயேயுமே  கவனம் செலுத்தி அனைத்து வீதிகளையும் சுற்றி விட்டு மன்னனிடம் வந்தான். மன்னனும் ஒரு சொட்டு கூட சிந்தாமல் இருப்பதைக் கண்டு  அவனை மன்னித்து போகும்படி கூறினார். அவனும் உயிர் தப்பியது என்று மிகுந்த மகிழ்ச்சியோடு ஓடி ஒளிந்தான்.

அப்போதும் அவர் சுகரிடம் பேசவில்லை .ஆனால் இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சுகர் அதிலிருந்து அவர் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொண்டார். அதாவது ஒரு மனிதனுக்கு உயிர் போய்விடும் என்ற நிலை ஏற்பட்டால் சுற்றுப்புறத்தில் என்ன நடந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் கருத்தை தட்டின் மீது மட்டும் செலுத்தி மீண்டுவந்தான் .அதுபோல நாமும் மனதை அடக்கி கடவுளின் மீது மட்டும் பக்தியை செலுத்தினால் அகங்காரம் தானே அடங்கும். மீண்டும் ஞானம் பிறக்கும் என்ற உபதேசத்தை ஜனகர் உபதேசிக்காமல் அவரிடம் பெற்று அங்கிருந்து மிக மகிழ்ச்சியுடன் கிளம்பினார்.

இதிலிருந்து நாம் உணர்வது என்னவென்றால் தற்பெருமை மட்டும் ஒருவனுக்கு ஏற்பட்டு விட்டால் அவன் பக்தி ஞானம் அனைத்தையும் இழந்து விடுவான் என்பது திண்ணம் .ஆகவே எக்காரணம் கொண்டும் ஒருவனுக்கு தற்பெருமை மற்றும் ஏற்படக்கூடாது.

இதுவே சுகருக்கு மீண்டும் ஞானம் திரும்பி வந்த கதை.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.