சேலத்தில் இருந்து அரூர் செல்லும் வழியில் சுக்கம்பட்டி தேவகிரி மலை இருக்கிறது. சிறிய குன்று போல் அமைந்திருக்கும் இந்த மலை மீது மேற்கு நோக்கி உதயதேவரீஸ்வரி சமேத உதய தேவரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
திருமணிமுத்தாறு பாயத்தொடங்கும் இடத்தில் அமைந்துள்ள முதல் சிவாலயம் என்ற சிறப்பும் இந்த கோயிலுக்கு உண்டு. மூலவரின் மீது தினமும் மாலை வேளையில் சூரிய ஒளி விழுவது இன்றுவரை தொடரும் அபூர்வம். இந்த கோயிலின் தலவரலாறு குறித்த ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை.
குறிப்பாக, 1131ம் ஆண்டு விக்கிரம சோழன் காலத்தில் பஞ்சந்தாங்கி திருச்சிற்றம்பல வேலைக்காரர் என்பவரால், கோயிலில்கதவு நிலை கொடையாக அளிக்க பெற்றதாக கல்வெட்டு தகவல் உள்ளது.
மேலும், இந்தகோயில் 1818ல் புதுப்பிக்கப்பட்டதற்கான கல்வெட்டு அடையாளங்களும் காணப்படுகின்றன.ஆரம்ப காலத்தில் இங்கு உதயதேவரீஸ்வரர், விநாயகர், சண்டிகேஸ்வரர், நந்தி சிலைகள் மட்டுமே இருந்தது. அதே நேரத்தில் ஊருக்குள் மாரியம்மன் திருத்தலம் ஒன்றும் உள்ளது.
சிவனுக்கு வலதுபுறமாக கிழக்கு நோக்கி உதயதேவரீஸ்வரி அம்மன் சிலையை அமைத்துள்ளார்கள். உதய தேவரீஸ்வரர் ஆலயத்தில் பவுர்ணமி இரவு பூஜை வழிபாடு நடைபெற்று வந்த நிலையில், பிரதோஷ வழிபாடு தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் நினைத்தனர்.
எனவே சிவனுக்கு வலதுபுறமாக கிழக்கு நோக்கி உதயதேவரீஸ்வரி அம்மன் சிலையை அமைத்துள்ளனர். பிரதோஷம் மற்றும் பவுர்ணமி பூஜைகள், கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பவுர்ணமி அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெறுகிறது.
இங்குதொடர்ச்சியாக நடக்கும் 3 பவுர்ணமிபூஜையில் கலந்து கொண்டால், திருமணத் தடை, நவக்கிரக தோஷம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும், நினைத்தகாரியம் கைகூடும்.
உதயதேவரீஸ்வரி அம்மன் எதிரில் உள்ள வேப்ப மரத்தில், பிரார்த்தனை செய்து மஞ்சள் கட்டி வந்தால் மூன்று மாதத்தில் நினைத்த காரியங்கள் கை கூடும் என்பது பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கை.
கோயிலில் பவுர்ணமி இரவு, சிறப்பு பூஜை நடைபெறும்போது விபூதி, மாங்காய் மற்றும் தாழம்பூ வாசம் வீசுவதை பக்தர்கள் இன்றளவும் உணர்ந்து வருகிறார்கள்.
காலாங்கி சித்தர் உள்பட
3 சித்தர்கள் அந்தக்கோயிலுக்கு சிவனை வழிபட வருவதாகவும், அதன் காரணமாகவே தாழம்பூ, விபூதி, மாங்காய் மணம் அங்கு கமழ்வதாகவும் சிவனடியார்கள் கூறுகின்றனர்.
இதனால் இது, சித்தர்கள் நடமாடும் சிவத்தலமாகவும் போற்றப்படுகிறது.500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த தலத்திற்கு, குன்றின் மேல் பாதி தூரம் வரை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதி தூரத்திற்கு மண் பாதையில் தான் செல்ல வேண்டும்.
கோயில் முன்பு பக்தர்கள் அமர மேற்கூரை இருக்கிறது. சிறிய ஆலயமாக இருந்தாலும் சித்தர்கள் வாசம் செய்யும் இந்த திருத்தலம், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பெருந்தலமாகவே உள்ளது *எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்.