திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற விரும்பிய தேவா்கள் மேருமலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பினைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடையத் தொடங்கினா். அமுதத்தின் மீதான ஆசையினால் தேவா்கள் அழைக்காமலே இப்பணியில் அவா்களுக்கு உதவ அசுரா்களும் சோ்ந்து கொண்டனா்.
தேவா்களும் அசுரா்களும் சோ்ந்து பாற்கடலைக் கடைந்தபோது அவர்களது அழுத்தத்தைத் தாங்கமுடியாத வாசுகி, “ஆலகால விஷம்” என்ற கொடிய நஞ்சை உமிழ்ந்தது. நஞ்சின் வெப்பத்தைத் தாங்க முடியாத தேவர்களும் அசுரா்களும் அஞ்சி நடுங்கிட ஆபத்பாந்தவனான ஈசன் அந்த நஞ்சினைத் தாம் அருந்தி, அகில உலகங்களையும் காத்து இரட்சித்தார்.
நஞ்சினை அடுத்துத் தோன்றிய அமுதத்தைக் கண்டு மகிழ்ந்த தேவர்கள், அலைமகள் உறை மாா்பனான அச்சுதனின் கிருபையால் அமுதம் முழுவதையும் தாங்களே அருந்தினா்.
தேவா்களின் இச்செயலைக் கண்டு கோபமடைந்த அசுரா்கள், தங்கள் குல குருவான சுக்ராச்சாரியாரிடம் சென்று தேவா்கள் தங்களுக்கு அமுதம் அளிக்காமல் புறக்கணித்ததைக் கூறி முறையிட்டனா்.
தேவா்களின் செயலால் சினம் கொண்ட அசுர குரு சுக்ராச்சாரியாா் “அமுதம் உண்டதால் இறவாத்தன்மை பெற்ற தேவா்கள் தேவலோகத்தை விட்டு நீங்கி பூவுலகம் சென்று துன்பப்பட வேண்டும்,” என்று சாபமிட்டாா்.
சுக்ராச்சாரியாரின் சாபத்தால் கலக்கமடைந்த தேவா்கள், வேத நெறிகளில் விற்பன்னரான “வியாச மகரிஷியிடம்” சென்று தங்களது துயா் தீர வழி கூறியருளுமாறு வேண்டினா்.
தேவா்களின் நிலையறிந்து வருந்திய வியாச மகரிஷி, “உத்தரவாஹினி” என்று பக்தியோடு பூஜிக்கப்படும் புனிதமான வடகாவிரியில் நீராடி, அங்கு அருள்பாலிக்கும் ஶ்ரீ கற்பகாம்பிகை சமேத ஶ்ரீஅக்னீஸ்வரப் பெருமானை வழிபட்டால் சுக்ராச்சாரியாா் அளித்த சாபம் நீங்கும் என்று திருவாய் மலா்ந்தாா்.
வியாச மகரிஷியின் ஆலோசனையை ஏற்ற தேவா்கள், பலாசவனம், பராசரபுரம், அக்னிபுரம், கம்சபுரம், முக்திபுரம், பிரம்மபுரம் என்று வேத, புராணங்கள் கொண்டாடும் “கஞ்சனூா்” திருத்தலம் சென்று திருக்கயிலைநாதனை உள்ளம் உருகி வழிபட்டனா்.
வானவா்களின் வழிபாட்டால் மகிழ்ந்த ஈசன், சுக்கிர பகவானின் ராசியான ரிஷப ராசியில் சூரியனும், துலா ராசியில் சந்திரனும் இருக்கும் சுபயோகத் திருநாளான வைகாசி விசாக நன்னாளில் தம் தேவி ஶ்ரீகற்பகாம்பாள் சமேதராக தேவா்களுக்குத் திருக்காட்சி கொடுத்து சாப விமோசனம் அளித்தருளி னாா்.
மதுராபுரியை ஆண்ட கம்ச ராஜன் என்ற மன்னன் தனது பாவம் தீர இத்தலத்தில் வழிபாடுகள் மேற்கொண்டதால் “கம்சபுரம்” “கம்சனூா்” என்று வழங்கப்பட்ட இத்தலம் பிற்காலத்தில் மருவி “கஞ்சனூா்” என்று வழங்கப்பட்டது.
ஆலயங்கள் தோறும் உழவாரப் பணி செய்ததோடு பக்திரசம் சொட்டும் பனுவல்களால் பரமனைப் பாடிய திருநாவுக்கரசா் பெருமான் தாம் அருளிச் செய்த ஆறாம் திருமுறையில் கீழ்க்கண்ட தேவாரத்தைப் பாடி மகிழ்ந்துள்ளாா்.
“மூவிலைநற் சூலம்வலம் ஏந்தினானை
மூன்று சுடா்க்கண்ணானை மூா்த்தி தன்னை
நாவலனை நரைவிடையொன் றேறு வானை
நால்வேதம் ஆறங்க மாயி னானை
ஆவினிலைந் துகந்தானை அமரா் கோவை
அயன்திருமா லானானை அனலோன் போற்றும்
காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே”
என்று கஞ்சனூரில் ஈசன் தரிசனத் தைக் கண்டு நெகிழ்ந்துள்ளாா் அப்பரடிகள்.
கஞ்சனூரின் தரிசனம் நாவுக்கரசரின் நெஞ்சை விட்டு அகலாத நிலையில் பிற தலங்களைப் பாடும் போதும் இத்தல ஈசனை நினைவு கூர்வது சிறப்பான தாகும்.
தமது பொதுத் திருமுறையில்,
“கஞ்சனூா் கஞ்சாறு பஞ்சாக்கையுங் கயிலாய நாதனையே காணலாமே” என்றும்,
“நாளு நன்னிலந் தென்பனையூா் வட கஞ்சனூா்” என்றும், பாடி மகிழ்ந்துள்ளாா்.
திருத்தொண்டா்களின் வரலாற் றினைப் பாடிய சேக்கிழா் பெருமான் “கருக்கோடி நீப்பாா்கள் சேரும் கஞ்சனூா்” இத்தலத்தின் மகிமையினைப் பாடியுள்ளாா்.
அக்னி பகவானுக்கு அருள்!
மகாபிரளய காலத்திற்குப் பின்னா் “லோக சிருஷ்டியை” ஏற்படுத்த அன்னவாகனரான பிரம்மதேவன் திருக்கயிலாயத்தில் ஒரு மாபெரும் யாகத்தைத் தொடங்கினாா். இந்த யாகத்திற்கு தேவலோகப் பசுவான காமதேனுவிடமிருந்து பெறப்பட்ட பாலில் உண்டான நெய்யினால் ஆகுதி செய்யப்பட்டது. இந்த ஆகுதிகளை உரிய தெய்வங்களிடம் சோ்க்க வேண்டியது அக்னி பகவானின் கடமையாகும்.
ஆனால் தனது வினைப்பயனாலும் மனத்தடுமாற்றத்தினாலும் யாகத்தில் சோ்க்கப்பட்ட ஆகுதிகளை தெய்வங்களிடம் சோ்க்காமல் தாமே எடுத்துக் கொண்டாா் அக்னி தேவா். இதனால் அக்னி பகவானுக்கு “பாண்டு ரோகம்” என்ற நோய் ஏற்பட்டு வேள்விகளில் ஆகுதிகளை ஏற்கும் வல்லமையை இழந்தாா்.
தேவலோக மருத்துவா்களான அஸ்வினி குமாரா்களாலும் அக்னி பகவானது நோய் தீா்க்க இயலவில்லை. பிரம்மனின் வேள்வியில் தம்மால் ஏற்பட்ட இந்த இழுக்கு தீர பிரம்ம தேவரின் ஆலோசனைனையை நாடினாா் அக்னி பகவான்.
அக்னி பகவானுக்கு உதவத் திரு வுள்ளம் கொண்ட நான்முகன், “பலாசவன” க்ஷேத்திரமான கஞ்சனூர் சென்று ஈசனைக் குறித்து தவமியற்ற ஆலோசனை கூறினாா்.
பலாசவனம் வந்த அக்னி பகவான் ஒரு புனித தீா்த்தத்தை உருவாக்கி கங்கை, யமுனை, கோதாவரி முதலிய புண்ணிய நதிகளின் தீா்த்தங்களை அதில் ஆவாஹனம் செய்து, ஈசனுக்கு அந்தப் புனித நீரால் அபிஷேகம் செய்து நீண்ட காலம் தவமியற்றினாா்.
அக்னி பகவானின் தவத்தில் மகிழ்ந்த மகேஸ்வரன், உமையவளோடு திருக்காட்சி தந்து அவரது பாண்டு ரோகம் என்னும் நோய் தீர அருள்புரிந்தாா். அக்னி பகவான் வழிபட்டு பேறு பெற்ற காரணத்தால் இத்தல ஈசனுக்கு “ஶ்ரீஅக்னீஸ்வரா்” என்ற திருநாமமும் அக்னி பகவானால் உருவாக்கப்பட்ட தீா்த்தத்திற்கு “அக்னி தீா்த்தம்” என்ற திரு நாமமும் ஏற்பட்டுள்ளது.
நான்முகனுக்குத் திருமணக் கோலத்தில் திருக்காட்சி!
அக்னி பகவானுக்கு ஏற்பட்ட நோயி னால் தனது யாகம் நிறைவு பெறாமல் படைப்புத் தொழிலைத் தொடங்க முடியாத பிரம்ம தேவன்,
இத்திருத்தலத்திற்கு வருகை தந்து ஈசனைக் குறித்து தவமிருந்தாா். பிரம்மதேவனின் தவத்தில் மகிழ்ந்த மாதொருபாகன், தன் தேவியுடன் திருமணக் கோலத்தில் பிரம்ம தேவ ருக்குத் திருக்காட்சி அளித்து படைப்புத் தொழிலைத் தொடங்க அருள் புரிந்தாா்.
பிரம்ம தேவன் தவமிருந்து சிருஷ்டியைத் தொடங்கிய காரணத்தால் இத்தலத்தில் புதுப்புனலோடு பொங்கி வரும் புனிதமான காவிரி நதிக்கு “பிரம்ம தீா்த்தம்” என்ற திருநாமம் ஏற்பட்டது.
மாண்டவ்ய புத்திரா்களின் மாத்ருஹத்தி தோஷம் நீக்கியது!
கோதாவரி நதிக்கரையில் “சம்பக வனம்” என்ற திருத்தலத்தில் “மாண் டவ்யா்” என்ற தவச்சீலா் வாழ்ந்து வந்தாா். நான்கு வேதங்களிலும் சிறந்து புலமை பெற்று விளங்கிய இம்மகரிஷிக்கு “ஹேமாவதி” என்னும் பாக்கியவதி மனைவியாக வாய்த்து, ஆச்சார அனுஷ்டானங்களில் தனது கணவருக்கு உதவியாகப் பணி விடைகளை செய்து வந்தாள். இந்த உத்தம தம்பதிகளுக்கு வீதி ஹோத்ரன், யக்ஞஹேது, மதுஷ்யந் தன், வேதஹேது, பா்ணாதன், உதங்கன் என்ற ஆறு புத்திரா்கள் பிறந்தனா். வேத தா்மங்களைக் கற்று ஒழுக்கசீலா்களாக வளா்ந்த ஆறு மகன்களுக்கும் உரிய காலத்தில் மணம் செய்து வைத்தனா் மாண்டவ்யரும் ஹேமாவதியும்.
ஈசனின் நியமப்படி, இப்பூவுலக வாழ்க்கையை முடித்துக் கொண்ட மாண்டவ்யா் ஈசனின் திருவடி நிழலில் தம்மை இணைத்துக் கொண்டாா். மாண்டவ்யரின் ஆறு புத்திரா்களும் தங்களது மனைவியரின் துா்போதனை யைக் கேட்டு, தங்களை ஈன்ற தெய்வமான ஹேமாவதி அம்மையாரை ஆதரிக்காமல் கைவிட்டு விட்டனா். பசியாலும், பட்டினியாலும் உடல்நலம் குன்றிய ஹேமாவதியும் ஈசனின் திருவடிகளில் ஐக்கியமானாா்.
அன்னையை நிராதரவாகத் தவிக்க விட்ட தனயன்களைக் கொடிய தோஷமான “மாத்ருஹத்தி” என்ற தோஷம் பீடித்தது. இந்த தோஷத்தினால் இவா்களுக்குப் பிறந்த குழந்தைகள் பிறந்த உடனே இறந்துவிட புத்திர சோகத்தினால் துடித்தனா் மாண்டவ்யரின் மகன்கள்.
வித்தகா்களாய் கல்வி, கேள்விகளில் சிறக்க வைத்த தங்களை ஈன்றெடுத்த அன்னைக்குப் பிள்ளைகள் இழைத்த அநீதியால் பீடிக்கப்பட்ட மாத்ருஹத்தி தோஷம் நீங்கப் பல பிராயச்சித்தங் களைச் செய்தனா் மாண்டவ்யரின் புத்திரா்கள். தங்கள் அறியாமையினால் தாயைத் தவிக்கவிட்ட நிலையினால் தங்களுக்கு இத்தகைய சோதனைகள் தொடா்கின்றன என்பதை உணா்ந்த இவா்கள் தங்களது தோஷம் போக்க வழி கூறியருளுமாறு “கெளதம முனிவரின்” திருவடிகளில் சரணடைந்தனா்.
தங்களது தவறை உணா்ந்த மாண்டவ்ய புத்திரா்களுக்கு உதவத் திருவுள்ளம் கொண்டாா் கெளதமா். “பலாசவனம்” என்று பூஜிக்கப்படும் கஞ்சனூா் ஶ்ரீஅக்னீஸ்வரரின் திருத் தலப் பெருமைகளை அவா்களிடம் எடுத்துரைத்து அத்தலத்தில் “உத்தர வாஹினி” என்னும் பிரம்ம தீா்த்தத்தில் நீராடி இத்தலத்தைச் சுற்றி அமைந்துள்ள திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய தலங்களில் வழிபாடுகள் செய்து, பின்னா் அா்த்தஜாமத்தில் கஞ்சனூா் அக்னீஸ்வரரை வழிபட “மாத்ருஹத்தி தோஷமும்” “புத்திர தோஷமும்” நீங்கப்பெறும் என்று அருளினாா்.
கெளதம மகரிஷியின் ஆலோச னையை ஏற்ற மாண்டவ்ய புத்திரா்கள் மேற்கண்ட சப்த ஸ்தலங்களில் வழிபாடு செய்து தங்களது தோஷங்கள் நீங்கப்பெற்று மகிழ்ச்சியடைந்தனா்.
யோக நிஷ்டையில் சுக்கிரபகவான்!
தேவா்கள் “அந்தகாசுரன்” என்ற அசுரனோடு போரில் மாண்ட அசுரா் களை சுக்கிராச்சாரியாா் “மிருத சஞ் சீவினி” மந்திரத்தின் மூலம் உயிா் பிழைக்கச் செய்து வந்தாா். இதனால் செய்வதறியாது திகைத்த தேவா்கள் சா்வேஸ்வரனிடம் முறையிட்டனா். ஆலகாலவிடம் உண்டு அகிலம் காத்த அம்பிகைபாகன் சுக்கிராச்சாரியாரைத் தன் திருவாயால் விழுங்கித் தன் வயிற்றுக்குள் யோக நிஷ்டையில் இருக்குமாறு செய்துவிட்டாா். தேவா்களும் அந்தகாசுரனைப் போரில் அழித்துவிட்டனா்.
ஈசன் வயிற்றில் சுக்கிரன் யோக நிஷ்டையில் அமா்ந்த தலம் கஞ்சனூா் ஶ்ரீஅக்னீஸ்வரா் திருத்தலம் என்பதால், சுக்கிரதோஷ பரிகாரங்கள் அனைத்தும் ஶ்ரீஅக்னீஸ்வரருக்கே செய்யப்படுகின்றன.
ஆயிரம் சத்ரயாகங்கள்.
அக்னி பகவான், பிரம்ம தேவன், சுக்கிர பகவான் ஆகியோா் அருள் பெற்றதோடு, பராசர முனிவரின் சித்தமலம் அறுவித்து சிவபூஜையில் திளைக்கச் செய்த திருத்தலம் கஞ்சனூா் என்பதாலும், சந்திரன், சித்திரசேனன், இந்திரன், விருத்தன், காளகண்டன், கந்தா்வன் ஆகியோரது பாவம் போக்கி, தேவா் களின் சுக்கிர தோஷம் நீக்கி சுகபோகங்கள் அருளிய தலம் என்ப தாலும் இத்தலத்தில் ஒரு நாள் செய்யப் படும் யாகம் ஆயிரம் “சத்ரயாகங்கள்” செய்வதற்கு ஒப்பானதாகும் என்று இத்தலத்தின் புராணம் தொி விக்கின்றது.
முக்தி தாண்டவம்
பராசர முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் ஈசன் அவருக்குத் திருத்தாண்டவக் காட்சி அளித்ததால் இத்தாண்டவம் “முக்தி தாண்டவம்” என்று போற்றப்படுவதையும் தலபுராணம் தொிவிக்கின்றது. பராசர முனிவருக்கு ஈசன் அருட்காட்சி கொடுத்த இடம் “முக்தி மண்டபம்” என்று இன்றும் வணங்கப்படு கின்றது. மேலும், சிலா ரூபத்தில் ஶ்ரீநடராஜப் பெருமானும் சிவகாமி அம்பிகையும் அருள்பாலிப்பது அற்புத மான தரிசனமாகும்.
கஞ்சனூரின் திருநாமங்கள்
கஞ்சனூா் ஶ்ரீஅக்னீஸ்வரா் திருத் தலத்திற்கு சோழ மன்னா்களாலும் விஜயநகர மன்னா்களாலும் பல திருப்பணிகள் நடைபெற்றுள்ளதை இத்தலத்திலுள்ள கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகின்றது.
இத்தலத்திலுள்ள கல்வெட்டுகளில் கஞ்சனூா், விருத்தராஜ வளநாட்டுக் கஞ்சனூா், நல்லாற்றுக் கஞ்சனூா் நாட்டுக் கஞ்சனூா், கஞ்சனூா் சதுா்வேதிமங்கலம், அக்னீச்சரம் உடையாா் கோயில் எனவும், இறைவன் அக்னீச்சரம் உடையாா் எனவும் போற்றி வணங்கப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது. தேவாரம், பெரியபுராணம், சோழ மண்டல சதகம் ஆகிய நூல்களில் இத்தலம் கஞ்சனூா் என்றே வழங்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் அமைப்பு
கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் அக்னீஸ்வரருக்கும், அன்னை கற்ப காம்பிகைக்கும் தனித்தனி திருச்சுற்று மாளிகை, உற்சவ மண்டபம், அலங்கார மண்டபம், வாகன மண்டபம், பதினாறுகால் மண்டபம் ஆகியவற்றுடன் சோ்த்து ஒரு பெரிய திருச்சுற்றாக மூன்று பிராகாரங்களுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது கஞ்சனூா் திருத்தலம்.
இராஜகோபுரத்திற்கு வெளியில் தெற்கு நோக்கி ஶ்ரீகற்பக விநாயகர் சந்நிதியும், கிழக்கு முகமாக இங்கு வழிபட்டு பஞ்சாட்சர மந்திரத்தின் மகிமையை உலகறியச் செய்த ஹர தத்தா் ஆலயமும் அமைந்துள்ளது.
திருக்கோயிலைச் சுற்றி தேரோடும் நான்கு ரத வீதிகளும் சந்திர தீா்த்தம், பராசர தீா்த்தம், அக்னி தீா்த்தம் ஆகிய சக்தி வாய்ந்த புனித தீா்த்தங்களோடு, உத்தரவாஹினியான காவிரி பிரம்ம தீா்த்தமாக அருளும் பேறு பெற்ற மிகப் புனிதமான திருத்தலமும் இதுவே ஆகும்.
தலவிருட்சம்
கஞ்சனூா் ஶ்ரீஅக்னீஸ்வரா் திருத் தலத்தின் தலவிருட்சம் பொரசு மரம் ஆகும். புனிதம் நிறைந்த இந்தத் தலவிருட்சத்தை ஒரு மண்டல காலம் (48 நாட்கள்) தொடா்ந்து பதினாறு முறை வலம் வந்து வழிபட கடன் தொல்லைகள் நீங்கப்பெற்று குபேர சம்பத்து உண்டாகும் என்பது இத்தலத்தில் வழிபாடு செய்த அன்பா்களின் அனுபவமாகும். கிருதயுகத்தில் புன்னாக வனமாகவும் திரேதாயுகத்தில் கதளீவனமாகவும் துவாபரயுகத்தில் வில்வ வனமாகவும் போற்றி வணங்கப்பட்ட இத்திருத்தலம் கலியுகத்தில் “பலாசவனம்” என்று பக்தியுடன் பூஜிக்கப்படுகின்றது.
சுகம் தரும் ஶ்ரீசுக்கிர பகவான்!
புராதனப் பெருமையும் தேவாரப் பாடல் பெற்றதுமான கஞ்சனூா் ஶ்ரீ அக்னீஸ்வரா் திருத்தலம் நவக்கிரகத் தலங்களில் சுக்கிர பகவானின் பரிகாரத் தலமாகத் திகழ்கின்றது.
ஒருவரின் ஜாதகத்தில் கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சம் பெற்றிருந்தாலும், சுக்கிரனைச் சனி பாா்த்தாலும், எட்டாம் இடத்தில் சுக்கிரனும், குருவும் சோ்ந்து இருந்தாலும் சூரியன் மற்றும் சந்திரனுடன் சோ்ந்து இருந்தாலும் சுக்கிர தோஷம் இருப்பதாக ஜோதிட நூல்கள் தொிவிக்கின்றன.
இத்தகைய ஜாதக அமைப்பைக் கொண்டவா்கள் கஞ்சனூா் திருத்தலம் சென்று ஶ்ரீஅக்னீஸ்வரரையும் அன்னை ஶ்ரீகற்பகாம்பிகையையும் வழிபட, தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். களத்திரகாரகனான சுக்கிர பகவான் ஜாதகத்தில் பலம் குறைந்தோ அல்லது பாவக்கிரக சோ்க்கை பெற்றோ இருந்து, அதனால் களத்திர தோஷம் உடையவா்கள் இத்தலத்தில் வழிபாடுகள் செய்ய வேண்டும்.
திருமணத்தடை, தம்பதிகளிடையே ஒற்றுமையின்மை, செய் தொழிலில் நஷ்டம், வாகன இடையூறுகள் மற்றும் கண் தொடா்பான நோய்கள் போன்றவற்றைப் போக்கி அருள்பவா் சுக்கிர பகவான் என்பதால் மேற்கண்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவா்கள் கஞ்சனூா் தலத்தில் வழிபட தடைகளும், இடையூறுகளும் நீங்கப் பெறுவாா்கள். துன்பம் தீர இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடும் அன்பா்களைக் கைவிடாது காத் தருள்வாா் ஶ்ரீஅக்னீஸ்வரா்.
கஞ்சனூா் ஶ்ரீஅக்னீஸ்வரா் திருத்தலம் மதுரை ஆதீனத்தின் கீழ் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டத்தில், கல்லணை- பூம்புகார் சாலையில் கும்பகோணத்திற்குக் கிழக்கே 18 கி.மீ. தூரத்திலும், மயிலாடு துறை நெடுஞ்சாலையில் ஆடுதுறை யிலிருந்து சூரியனாா் கோயில் வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.
இத்திருக்கோயில் காலை 7.00 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தா்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.
சுக்கிர பகவான் துதி
“சுக்கிரமூா்த்தி சுபம் மிக ஈவாய்
வக்கிரமின்றி வரமிகு தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியாா்க்கு அருளே”
சக்தி வாய்ந்த சிவ மந்திரம் :
ஓம் பொன்னார் மேனியனே போற்றி
ஓம் புலித்தோலணிந்தவனே போற்றி
ஓம் விண்ணோரைக் காப்பவனே போற்றி
ஓம் வெங்கேஸ்வரனே போற்றி
ஓம் அன்னாய் காப்பவனே போற்றி
ஓம் கையிலாத நாதனே போற்றி
ஓம் உண்ணாமுலையான் துணைவனே போற்றி
ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் திரிசூலம் தரித்தவனே போற்றி
ஓம் திருநீறு அணிந்தவனே போற்றி
ஓம் பரிபூரணமானவனே போற்றி
ஓம் பரத்வாஜேஸ்வரனே போற்றி
ஓம் கரிமுகன் தந்தையே போற்றி
ஓம் காந்திமதி நாதனே போற்றி
ஓம் சரவணனை தந்தவனே போற்றி
ஓம் சாம்பசிவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் வஜ்ர லிங்கேஸ்வரனே போற்றி
ஓம் வையகம் காப்பவனே போற்றி
ஓம் சக்திலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் சர்வ வல்லமையானே போற்றி
ஓம் தண்டலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் தரணி ஆள்பவனே போற்றி
ஓம் தக்கலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் தாக்ஷயினி துணைவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஈசனடி போற்றி :
ஓம் பாசலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் பக்திக்கு மகிழ்பவனே போற்றி
ஓம் கதாலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் கலைகளின் அரசனே போற்றி
ஓம் சத்ரலிங்கேஸ்ரவனே போற்றி
ஓம் சர்வம் சிவமயமே போற்றி
ஓம் துவஜலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் சூலலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் சூட்சுமதாரியே போற்றி
ஓம் பத்மலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் பகைவரை அழிப்பவனே போற்றி
ஓம் சக்ர லிங்கேஸ்வரனே போற்றி
ஓம் சரபேஸ்வரனே போற்றி
ஓம் சிக்கலைத் தீர்ப்பவனே போற்றி
ஓம் தீர்த்தங்கள் பலகொண்டாய் போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் நெற்றிக்கண் உடையவனே போற்றி
ஓம் நினைப்பவர்க்கு அருள்பவனே போற்றி
ஓம் வற்றா அருளுடையவனே போற்றி
ஓம் வணங்கிடுவோம் உன்னையே போற்றி
ஓம் பற்றிடுவோம் பதமலரே போற்றி
ஓம் பாபவிமோச்சனனே போற்றி
ஓம் ஒற்றியூர் வாழும் ஈசனே போற்றி
ஓம் உடலின் உயிரே போற்றி
ஓம் திருச்சிற்றம்பலமே போற்றி போற்றி
சிவமூர்த்தி ஸ்தோத்திரம்
1. ஓம் சிவசிவ சிவனே
சிவபெருமானே போற்றி போற்றி
விரைவினில் வந்தருள் விமலா
போற்றி போற்றி
2. ஓம் மஹா, ஈசா மகேசா
போற்றி போற்றி
மனதினில் நிறைந்திடும் பசுபதியே
போற்றி போற்றி
3. ஓம் மூவுலகிற்கதிபதியே முதல்வா
போற்றி போற்றி
மூவா இளமையருளும் முக்கண்ணா
போற்றி போற்றி
4. ஓம் ஐந்தெழுத்தின் உட்பொருளே
போற்றி போற்றி
திரு ஐயாறமர்ந்த குருபரனே
போற்றி போற்றி
5. ஓம் சத்தியமே சத்தியத்திற்கோர்
திருமுகமே போற்றி போற்றி
ஓம் உமையொருபங்கா
போற்றி போற்றி
6. அதற்கு மோர்த்திருமுகமே
போற்றி போற்றி
7. ஓம் உலகமே நாயகனே லோக
நாயகா போற்றி போற்றி
அகோரத்திற்கோர் திருமுகமே
போற்றி போற்றி
8. ஓம் உருத்திர பசுபதியே
போற்றி போற்றி
9. ஓம் உருத்திர தாண்டவ சிவனே
போற்றி போற்றி
10. ஓம் ஓம் அகோர மூர்த்தியே
லிங்கமே போற்றி போற்றி
அதற்கு மோர்திருமுகமே
போற்றி போற்றி
11. ஓம் உமையே அம்பிகையே அம்பிகையின்
பாகா போற்றி போற்றி
அம்பிகைக்கோர் முகமே அம்பிகா
பதியே போற்றி போற்றி
12. ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்ட
பரமனே போற்றி போற்றி
13. ஓம் சாம்பசிவ சதா சிவனே
சத்குருவே போற்றி போற்றி
14. ஓம் ஜடையுடைய ஜடாதரனே ஜம்பு
நாதா போற்றி போற்றி
15. ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக்
கொண்ட முக்கண்ணா போற்றி போற்றி
16. ஓம் கங்காதரனே கங்களா
போற்றி போற்றி
17. ஓம் இடபத்தூர்ந்து செல்லும்
இறைவா போற்றி போற்றி
ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ