Breaking News :

Thursday, November 21
.

சுதர்சன சக்கரத்தின் மகிமைகள்!


சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம்.

சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும். மகாவிஷ்ணுவோ, தன் ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார்.

யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். எதிரிகளை, அசுரக்கூட்டத்தை அழித்த பின்னர், சுதர்சனச் சக்கரமானது மீண்டும் அந்த இடத்துக்கே திரும்ப வந்துவிடுகிறது.

அதாவது, சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகு ஏவிய பகவானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவரின் திருக்கரங்களுக்கே வந்துவிடுகிறது.

எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம்.

மேலும் மகாவிஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து சுதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது, எதிரிகளை அழித்ததும் தெரியாது, மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்துகொள்வதும் தெரியாது. எல்லாமே கணப்பொழுதில் அரங்கேறிவிடும்.

ஒருவேளை, எதிரியானவன் மிகுந்த பராக்கிரமம் மிக்கவனாக இருந்தால், சுதர்சனச் சக்கரத்தின் வேகத்தில் தடையேதும் ஏற்பட்டால்... அப்போது, சக்கரத்தின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் கூடுமாம்! இதை ‘ரன்ஸகதி’ என்பர்.

சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது.

நம் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்வார் சக்கரத்தாழ்வார் என்கிறார்கள்.

ஏகாதசி, புதன்கிழமை, திருவோணம், சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில், சக்கரத்தாழ்வாருக்கு துளசி சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் இன்னல்கள் யாவும் பறந்தோடும். இல்லத்தில் நிம்மதியும் ஆனந்தமும் குடிகொள்ளும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.