காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் – சங்காரண்யேஸ்வரர்
உற்சவர் – சோமாஸ்கந்தர்
அம்மன் – சவுந்தர நாயகி
தல விருட்சம் – புரசு
தீர்த்தம் – சங்கு தீர்த்தம்
ஆகமம் – காரண ஆகமம்
பழமை – 2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – திருத்தலைச்சங்காடு
ஊர் – தலைச்சங்காடு
மாவட்டம் – நாகப்பட்டினம்
மாநிலம் – தமிழ்நாடு
பாடியவர் – திருஞானசம்பந்தர்
மகாவிஷ்ணு இவ்வுலக உயிர்களை காப்பதற்காக, சங்காரண்யேஸ்வரரை பூஜை செய்து தனது ஆயுதமாக சங்கை பெற்றுள்ளார். இதனால் இத்தலத்தில் மகாவிஷ்ணுவுக்கு தனி சன்னதி உண்டு. கோயில் அமைப்பே சங்கு வடிவில் அமைந்துள்ளது. ஒரே சிவாலயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் தரிசனம் கிடைக்கிறது. மூலவர் தனியாகவும் பிரதோஷ நாயகர் தனியாகவும் அருள்பாலிக்கின்றனர்.
சங்கநிதி, பதுமநிதி இருவரும் கோயில் நுழைவு வாயிலிலேயே நம்மை வரவேற்கிறார்கள்.
கோயில் அமைப்பே சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது கோயிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் சிவன் சன்னதி. நடுவில் முருகன் சன்னதி. வலது பக்கம் அம்மன் சன்னதி என அமைக்கப்பட்டிருக்கும்.
திருத்தலைச்சங்காடு, திருவெண்காடு, திருச்சாய்க்காடு, திருமறைக்காடு, திருத்தலையாலங்காடு என்ற வரிசையில் திருத்தலைச்சங்காடு எனச்சிறப்பு பெற்றது.
இத்தலம் சங்காரண்யம், சுவேதாரண்யம், வேதாரண்யம், வில்வாரண்யம், வடவாரண்யம் என்ற ஐந்து ஆரண்யங்களிலும் வைத்தும் போற்றப்படுகிறது.
பழந்தமிழர்கள் இயற்கை தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும், அதனைச் சார்ந்த ஊருக்கும் பெயர் வைத்திருக்கின்றனர். எனவே தலைச்சங்காடு தலை+சங்கு+காடு எனப் பிரித்து பார்த்தால் பொருள் விளங்கும்.
சங்குப் பூக்கள் தோட்டங்களில் மிகுதியாகப் பயிரிடப்பட்டு, இவ்வூர் கோயில்களுக்கும் இதனை சுற்றியுள்ள கோயில்களுக்கும் மிகுதியாக அனுப்பப்பட்டன. இந்த பூந்தோட்டத்தை ஒட்டியே தலைச்சங்காடு என்ற பெயர் உருவாகி இருக்க வேண்டும் என கல்வெட்டு செய்தி கூறுகிறது.
இத்தலத்து இறைவன் 3 அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரான சங்காரண்யேஸ்வரர் மீது நல்லெண்ணை ஊற்றி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் இலிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும்.
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். கிழக்கு நோக்கிய கோயில், ராஜகோபுரம் தளத்துடன் நிற்கிறது. எதிரில் சங்கு தீர்த்தமுள்ளது. வெளிப்பிரகாரத்தில் தல வினாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய்ப் பெருமாள், சுப்பிரமணியர் ஆகியோருடைய சன்னிதிகள் உள்ளன. அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கியது. நடராஜர், சோமாஸ்கந்தர் சன்னிதிகள் சிறப்பானவை.
உள்பிரகாரத்தில் நால்வர், திருமால், ஜுரகுரேஸ்வரர், காவிரி, பட்டினத்தார், அகத்தியர் முதலானோருடைய சன்னிதிகள் உள்ளன. மூலவர் சங்கு போன்ற உருண்டையான வடிவில் காட்சியளிக்கிறார். கருவறை மிகவும் பெரியது.
கோயில் ஆங்காங்கு முட்புதர்களுடன் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது . வெளவ்வால்களின் நாற்றமும் நடமாட்டமும் மிகவும் அதிகம். கண்டிப்பாக திருப்பணி செய்யவேண்டிய தலம்.
தேவாரப்பதிகம்:
சீர்கொண்ட பாடலீர் செங்கண் வெள்ளேறு ஊர்தியீர் நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத் தொண்டர் நின்றேத்தத் தார்கொண்ட நூல்மார்பர் தக்கோர்வாழும் தலைச்சங்கை ஏர்கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே.
–திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 45வது தலம்.
திருவிழா:
வைகாசி விசாகம் 5 நாள்திருவிழா சிறப்பாக நடக்கிறது. கந்த சஷ்டியின் போது ஒரு நாள் லட்சார்ச்சனை நடக்கிறது.
பிரார்த்தனை:
குழந்தைப்பேறுக்காக பெண்கள் வருகிறார்கள். அப்படி வரும் பெண்கள் பவுர்ணமி விரதம் இருந்து அம்மனுக்கு செய்யப்பட்ட சந்தனக்காப்பில் இருந்து சிறிதளவு சந்தனம் எடுத்து சாப்பிட்டு குழந்தை பிறக்க வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
குழந்தை பிறந்தவுடன் அம்மனுக்கு சந்தனக்காப்பு செய்து அலங்கரித்து பார்க்கிறார்கள்.
வழிகாட்டி:
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில், பூம்புகாருக்கு முன்பே ஆக்கூர் செல்லும் சாலையில் திரும்பி 4 கீ மீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.
சீர்காழி – ஆக்கூர் சாலையில் இத்தலம் உள்ளது.
அருள்மிகு தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயில்,
தலைச்சங்காடு,
ஆக்கூர் போஸ்ட்,
தரங்கம்பாடி தாலுகா,
நாகப்பட்டினம் மாவட்டம்.