Breaking News :

Thursday, April 10
.

திருகண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்


ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் {ஸ்ரீ கமலநாதப் பெருமாள்} கோவில், திருக்கண்டியூர் திவ்யதேசம், தஞ்சாவூர் மாவட்டம்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோயிலாக கருதப்படுகிறது இந்த ஹரசாப விமோசன பெருமாள் கோயில். இக்கோயிலின் இறைவனான திருமால் ஹரசாப விமோசன பெருமாள் எனவும் மூலவர் கமலநாதன் என்ற பெயரிலும், தாயார் கமலவல்லி நாச்சியார் என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். இக்கோயிலின் தீர்த்தம் கபால மோட்ச புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. புராண காலத்தில் இந்த ஊர் கண்டன சேத்திரம், பஞ்ச கமல சேத்திரம் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டது.

பிண்டியார் மண்டையேந்தி பிறர்மனை திரிதந்துண்ணும்
உண்டியான் சாபந்தீர்த்த ஒருவனூர் உலகமேத்தும்
கண்டியூர ரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை யென்று
மண்டினார் குயலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த 108 வைணவ திவ்ய தேச கோயில்களில் ஏழாவதாக இக்கோயில் இருக்கிறது. தல புராணங்களின் படி உலகை காக்கும் சர்வேஸ்வரனாகிய சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்கிற ஐந்து திருமுகங்கள் இருந்தன. இதே போன்று படைப்பு கடவுளான பிரம்ம தேவனுக்கும் ஐந்து முகங்கள் இருந்தன. இதனால் சற்று கர்வம் அடைந்த பிரம்ம தேவன் சிவனை விட தான் உயர்ந்தவன் என கருதி சிவபெருமானை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டார். பிரம்மாவின் இத்தகைய செயல்களால் கோபமுற்ற சிவபெருமான் பிரம்ம தேவனின் ஐந்து தலைகளில் ஒன்றை கிள்ளியெறிந்தார். இதனால் சிவபெருமானுக்கு மனிதர்களை கொன்றால் ஏற்படும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு, பிரம்மாவின் வெட்டப்பட்ட கபாலம் சிவனின் கைகளிலேயே ஒட்டிக்கொண்டது. இதனை போக்க சிவன் யாத்திரை கிளம்பினார். அப்போது விஷ்ணு கோயில் கொண்ட இத்தலத்திற்கு வந்த போது சிவனின் கையிலிருந்த கபாலம் நீங்கியது. ஹரன் எனப்படும் சிவனின் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில் சிறப்புக்கள் சிவனின் பிரம்மஹத்தி சாப தோஷத்தை நீக்கியதால் இத்தல பெருமாள் ஹரசாப விமோசன பெருமாள் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலை மகாபலி சக்கரவத்தி கட்டியதாக கூறப்படுகிறது.

இந்த ஊரில் கண்டீஸ்வரர் என்கிற பெயரில் சிவபெருமானும் கோயில் கொண்டுள்ளார். இந்த தலம் ஒரு மும்மூர்த்தி தலமாகும். பிரம்மனுக்கு தனி கோயில் இல்லை என்பதால் அவர் கண்டீஸ்வரர் சிவப்பெருமான் கோயிலில் சரஸ்வதி சமேதமாக அருள்பாலிக்கிறார்.

புகழ் பெற்ற “ஸ்ரீ கிருஷ்ண தரங்கிணி” எனும் நூலை எழுதிய நாராயண தீர்த்தர் இப்பகுதியில் கண்டியூர் அருகே இருக்கும் திருப்பூந்துருத்தியை சேர்ந்தவர். இத்தல இறைவன் மீது அளவு கடந்த பக்தி செலுத்தியவராவார். திருமங்கையாழ்வார் இத்தல பெருமாளை ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், கோயிலடி ஆகிய ஊர்களில் இருக்கும் பெருமாளுடன் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார். சிவனின் தோஷத்தையே போக்கிய தலம் என்பதால் உங்களுக்கு மற்றும் உங்கள் குலத்திற்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய தோஷங்களும் இங்கு வழிபட அவை நீங்கி நன்மையுண்டாகும் என்று அனுபவம் பெற்றவர்கள் கூறுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

கோயில் அமைவிடம் அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கண்டியூர் எனும் ஊரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு: காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி:
அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில் கண்டியூர் தஞ்சாவூர் மாவட்டம் – 613202 தொலைபேசி எண் 9344608150.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.