"மையாடிய கண்டன்மலை
மகள்பாகம துடையான்
கையாடிய கேடில்கரி
யுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர்
நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம்
நெய்த்தானமெ னீரே"
என தேவாரத்தில் சம்பந்தரால் பாடபட்ட ஆலயம் இது, தேவார தலங்களில் 52ம் தலமாக அறியபடும் இத்தலம், திருவையாறிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் அமைந்துள்ளது, இது தில்லைஸ்தானம் என்றும் அறியபடுகின்றது.
இந்த ஆலயத்தின் வரலாறு பன்னெடுங்காலத்துக்கு முன்பு தொடங்குகின்றது, அப்போது மேய்சலுக்கு செல்லும் பசுக்களில் ஒன்று அடிக்கடி தனியே சென்று ஓரிடத்தில் பால் சொரிந்து வந்தது, இதனை சந்தேகித்த மாடுமேய்ப்பவன் அந்த இடத்தில் கலயம் ஒன்றை வைத்து நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான்
ஒருநாள் பசு வழக்கம் போல் சென்று பால் சொரிந்தது, இடையன் வேகமாக சென்று அந்த பாலை எடுக்க சென்றான், அங்கே சென்று பாலை கண்டவன் அதிசயித்து போனான், அது முழுக்க நெய்யாக இருந்தது.
அதே நேரம் அந்த பசு மறைந்தும் போனது, இடையன் கண்முன்னே மறைந்தது.
அச்சமுற்ற இடையன் நடந்ததை ஊருக்குள் வந்து சொன்னன், வியந்துபோன மக்கள் அந்த இடத்தை காண சென்றார்கள் , பசு தினமும் பால் சொரிவதாக சொன்ன இடத்தில் தோண்டிபார்த்தார்கள்.
விஷயமறிந்து அக்கால சோழமன்னும் விரைந்து வந்தான், தோண்டிய இடத்தில் ஒரு சுயம்பு லிங்க்ம் இருந்தது, விழுந்து வணங்கிய மக்கள் அந்த நெய்யாலே அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தார்கள், வந்த பசு காமதேனு என அறிந்து கொண்டார்கள், மன்னன் ஆலயம் கட்டி கொடுத்தான் இதிலிருந்து இந்த ஆலய வரலாறு தொடங்குகின்றது.
இந்த ஆலயத்தில் இருந்துதான் திருவையாறு நந்தி திருமணத்துக்கு நெய் குடம் குடமாய் அனுப்பபட்டது, யாகத்துக்கும் இதர விஷயங்களுக்கு நெய் இங்கிருந்தே சென்றது.
அதனாலே இந்த இடம் தெய்தானம் என்றானது , திருநெய்தானம் என பக்தியாய் மாறிபோனது, காமதேனுவே வந்து நெய்கொடுத்து சென்ற சிவன் என்பதால் அவர் நெய்யாடியப்பர் என்றானார்.
பிருகு முனிவர் இங்கு ஆசிரமம் அமைத்து இந்த சிவனை வழிபட்டார்.
இந்த தலம் காமதேனு, காசியபரிஷி, சரஸ்வதி என பலர் வழிபட்டிருக்கின்றார்கள், சோழர் காலத்தில் மிக முக்கிய ஆலயமாக இது இருந்தது.
பவுத்த சமண குழப்பங்களில் சிக்கிய இந்த ஆலயத்தை செம்பியன் மாதேவியும் ராஜராஜ சோழனும் மீட்டெடுத்தார்கள், ராஜராஜசோழனின் பட்டத்துராணி லோகமாதேவி இந்த ஆலயத்தின்மேல் தனி பக்தி கொண்டிருந்தாள்.
காலத்தால் தடைபட்ட சப்தஸ்தான ஏழூர் ஊர்வலத்தை அவள்தான் மீள தொடங்கிவைத்தாள், அவள் மீட்டெடுத்த விழாதான் இப்போது சப்தஸ்தான ஏழூர் திருவிழா என கொண்டாடபடுகின்றது.
சோழர், பல்லவர் தாண்டி இலங்கை சிங்கள மன்னர்களும் இக்கோவிலை கொண்டாடியிருக்கின்றார்கள், அதில் கயவாகு எனும் மன்னன் இந்த ஆலயத்தை வழிபட்டு அங்கு செய்த திருப்பணிகளெல்லாம் கல்வெட்டாக உண்டு.
வள்ளல் பெருமான் தாம் பாடிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "பொய் அகற்றி மெய்த்தானம் நின்றோர் வெளித்தானம் மேவு, திரு நெய்த்தானத்து உள் அமர்ந்த நித்தியமே" என்று போற்றி உள்ளார்.
இங்கு முருகபெருமான் சன்னதியும் உண்டு, அருணகிரிநாதர் தன் திருபுகழில் இந்த முருகனை பாடியிருக்கின்றார்.
"சிகரப் பாரக் கிரியுறை குறமகள்
கலசத் தாமத் தனகிரி தழுவிய
திருநெய்த் தானத் துறைபவ சுரபதி " என்பது அவரின் வரி
கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் இருக்கிறது. இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தியைத் தாண்டி உள் வாயில் வழியாகச் சென்றால் மூலவர் நெய்யாடியப்பர் சந்நிதி ஆலயத்தின் உட்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
உள் பிரகாரம் சுற்றி வலம் வரும்போது சூரியன், ஆதிவிநாயகர், சனி பகவான், சரஸ்வதி, மகாலட்சுமி, காலபைரவர், சந்திரன், ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.
கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். தட்சினாமூர்த்தி இங்கு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
கருவறையில் மூலவர் நெய்யாடியப்பர் சற்றே ஒல்லியான மற்றும் உயரமான லிங்கத் திருமேனியுடன் நமக்குக் காட்சி தருகிறார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனுக்கு நெய்யால் அபிஷேகம் ஆன பின்பு வெந்நீர் அபிஷேகம் நடப்பது வழமை.
இந்த ஆலயம் பிருகு முனிவரால் வணங்கபட்டது, ரிஷிகளில் அவர் முக்கியமானவர்
இந்த பிருகு முனிவர் பிரம்மனின் மகன்களில் ஒருவர், இவர் ஜோதிடம் முதல் ஆயுர்வேதம் வரை எல்லா கலைகளுக்கும் பிதாமகன், அவரின் "ஜோதிட சம்ஹிதா" எனும் நூல்தான் ஜோதிட அரிச்சுவடி
இந்த முனிவர் பிரம்மனுக்கும் சிவனுக்குமே சாபம் கொடுத்தவர், இன்னும் திருமால் நெஞ்சில் ஓங்கி மிதிக்கும் அளவு தவவலிமை கொண்டவர்
இவரின் வாழ்வில் ஏகபட்ட அற்புதங்கள் தவத்தினால் செய்த அதிசயங்கள் உண்டு, இவர்தான் சிவபெருமான் மகனிடம் உபதேசம் பெறவும் காரணம்
ஒருமுறை கடும் தவத்தில் இறங்கினார் முனிவர் , தன் தவத்தை யாரேனும் கலைத்தால் அவனுக்கு முக்கியமான விஷயம் மறந்துவிடட்டும் என சாபமிட்டு அவர் தவத்தில் மூழ்கினார்
அவர் தவத்தை அவரின் சாபம் அறிந்து யாரும் கலைக்கவில்லை ஆனால் கடும் தவத்தில் அவர் உடலில் இருந்து அக்னி பெரும் வெம்மையாய் எல்லோரையும் வருத்திற்று, அவரின் சிரசில் இருந்து தவத்தின் உச்சியில் அப்படி ஒரு அக்னி எழுந்தது
தேவர்கள் சிவனிடம் அடைக்கலமானார்கள் காரணம் முனிவரின் சாபம் பற்றி எல்லோரும் அறிந்திருந்தார்கள்
அக்னியின் வெம்மையில் இருந்து எல்லோரையும் காக்க சிவனே அந்த முனிவரின் தலையினை தொட்டார் அந்நேரம் முனிவரின் தவம் முடிந்தது, அக்னி அணைந்தது ஆனால் சாபம் சிவனை வாட்ட தொடங்கியது எல்லாம் அவருக்கு மறந்தது
பின் முருகபெருமானே அவருக்கு சுவாமிமலையில் மந்திரங்களை ஓதி குழந்தைசுவாமியாக நின்றார், சிவன் தன் நிலையினை மீளபெற்றார்
இந்த பிருகுமுனிவரின் வாழ்வின் காட்சிததான் திருநெய்தான ஆலயத்தின் தாத்பரியத்தை சொல்கின்றது
பிருகு முனிவர் தன்னை வருத்தி தவமிருந்தார், மிக கடுமையான தவத்தில் அவர் தன்னை வருத்தி நின்றபோது சிவமே வந்தார், பின் சிவனுக்கு ஒரு சிக்கல் வந்து தன்னிலை மறந்தார் அவருக்கு முருகபெருமான் இழந்த ஞானத்தை திரும்ப கொடுத்தார்
அதாவது கவனிக்கவேண்டிய விஷயம் உருமாற்றம், பிருகு முனிவர் தன்னிலையில் இருந்து பெரும் இடம் அடைந்தார், சிவன் அதற்கு உதவினார், அவரின் உருமாற்றம் முருகபெருமானால் சரிசெய்யபட்டது
அதாவது ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறி அழியா இடம் பெறுவது, பிருகு முனிவர் மானிட நிலையில் இருந்து அக்னி நிலைக்கு மாறினார், அந்நிலையில் அவர் பரிசுத்தமானார் அவரின் சாபமெல்லாம் சிவன் வாங்கி அவர் கர்மத்தை சிவன் வாங்கி அவரை அழியா நிலை ஞானியாக்கினார்
இதுதான் இந்த தத்துவம்தான், தன் நிலையில் இருந்து மேலான நிலைக்கு செல்லும் பெரும் ஞானத்தை தரும் ஆலயம் இது
நெய் என்பது வெறும் எரிபொருள் அல்ல, மணமிக்க எண்ணெய் அல்ல, அது பவித்திரமானது சுத்தமானது, பாலில் மறைந்திருக்கும் அந்த பவித்திரம் பெரும் பாடுபட்டு பல நிலைகளை கடந்து அடைகின்றது
பாலில்தான் நெய் உண்டு ஆனால் மறைந்திருக்கும், பாலை அப்படியே விட்டால் அது வீணாகிவிடும் அதை பக்குவப்டுத்தி தயிராக்கி தயிரை கடைந்து வெண்ணையாக்கினால் நெய் கிடைக்கும்
அப்படி தன்னை பக்குவபத்தி , தன் மனதை பக்குவபடுத்தி கடைந்தால் இறைவனை அடையலாம், இறை நிலையினை உணரலாம் மனம் பவித்திரமாகும் என்பதைத்தான் இந்த ஆலயம் போதிக்கின்றது
பாற்கடல் கடைந்து அமுதம் வந்தது என்பது வெறும் புராண கதை அல்ல, அமிர்தம் கடையும் போது நஞ்சு வந்தது அதை சிவன் உண்டார் என்பதும் வெறும் செய்தி அல்ல
மனம் எனும் கடலை கடைந்தால் இறை அமுதம் எனும் நெய் வரும், ஆனால் அதற்கு முன் பெரும் விஷம் வரும் அதை தன் கர்மத்தை பெரும் தடையினை தீவினைகளை சிவனிடம் விட்டுவிட வேண்டும் அதன்பின் நல்லன எல்லாம் வரும் என்பதே அதன் ஆழ்ந்த தாத்பரியம்
மனம் எனும் கடலை இறை சிந்தனை எனும் மத்தால் மூச்சு எனும் நாகத்தால் மனதை கடைந்து இறைவனை அடைதல் வேண்டும்
பிருகு முனிவர் அதைத்தான் செய்தார் ஆனால் அவரும் ஆபத்தில் சிக்கினார் அதை சிவனே ஏற்று அவரை காத்தார், கிட்டதட்ட இது ஆலம் உண்ட காட்சிக்கு சமம்
பிருகுமுனிவர் தவமும் அதைத்தான் சொல்கின்றது
நெய் என்பது பாலில் மறைந்திருப்பது, அது தயிர் வெண்ணெய் தாண்டி நெய் என வந்தபின் அந்த பக்குவநிலைக்கு வந்தபின் மீண்டும் பாலாகாது
பால் என்பது கெட்டுவிடும், தயிரும் வீணாகும் ஆனால் அதையெல்லாம் தாண்டி அது நெய்யாகிவிட்டால் அது கெடாது, நீண்டநாள் பலன்கொடுக்கும்
அப்படி ஒரு ஆத்மா பல கட்டங்களை பெரும்பாடுபட்டு தாண்டிவிட்டால் அது இறைநிலை அடையும், ஒரு ஆத்மாவுக்குள் இறைவன் உண்டு, பாலுக்குள் நெய்போல் உண்டு அதை தேடி அடையவேண்டும் எனும் தாத்பரியத்தை சொல்லும் தலம் இது
அதைத்தான் அப்பர் பாடினார்
"விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியன்
உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுக
வாங்கிக் கடையமுன் நிற்குமே’
ஒளவை தன் ஞானகுறளில் சொல்கின்றாள்
"பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே
நூலின்க ணீச னுழைந்து"
பாலுக்குள் நெய்யானது எமது கண்களுக்குத் தெரியாதவாறு கலந்திருப்பதுபோல எல்லா உயிரினங்களிலும் சிவன் கலந்திருக்கிறான்.
"கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்
இரும்புண்ட நீரு மியல்பு"
கரும்புக்குள் உள்ள தித்திப்பான சுவைபோல சிவம் உடலினுள் கலந்துள்ளது. நன்கு காச்சிய பாலில் வெளிவரும் நெய்போல யோகப்பயிற்சிகள், தியானங்கள் செய்து மனதை ஒருநிலைப்படுத்த மனம் ஒடுங்கி சிவனை அறியும் ஆற்றல் வரும், அப்போது பழுக்கக்காச்சிய இரும்பின்மீது நீரை ஊற்ற அந்த நீரானது அந்த இரும்பின் வெப்பத்தைத் தணித்து காணாமல்ப் போவதுபோல பக்குவப்பட்ட ஆன்மாவானது சிவனுடன் கலக்கும்.
பாலை பதமாக்கி நெய் எடுப்பது போல் மனதை பதமாக்கி இறைநிலையினை அடைவாய் என்பதை சொல்லும் தாத்பரியம் இது
லவுகீகமாக பெரும் தத்துவத்தினை இது சொல்லும், ஒரு குடும்பமமானது என்ன சிரமம் பட்டாலும் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்து நெய்போல் பயனுள்ள வாழ்வினை வாழவேண்டும், நெய்தீபம் போல் பெரும் ஒளிகொடுத்து வழிகாட்டி வாழவேண்டும் என்பது இந்த நந்தி திருமணத்தின் தத்துவம்
இல்லறம் என்பது இறைவனை நோக்கி செல்லும் வழி, தொடக்கத்தில் இளமை பின் நடுத்தரம் பின் முதுமை என உருமாறும் வாழ்வில் எப்படி பால் கடைசியில் நெய்யாகின்றதோ அப்படி மனம் இறைநிலையினை அடைதல் வேண்டும் ஈசனோடு கலத்தல் வேண்டும் என்பது பெரும் போதனை
ஆன்மீக வடிவில் பாலில் இருந்து நெய் எடுப்பது போல மனதோடு இருக்கும் இறைவனை பக்குவபட்டு உணரவேண்டும் என்பதை சொல்லும் ஆலயம் இது
இந்த ஆலயம் திருமண தடை நீக்கும், வறுமையினை நீக்கும் இன்னும் பெரும் பலன்களை தரும்
இந்த ஆலயத்துக்கு சென்று சிவனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடுங்கள், நெய் அபிஷேகம் செய்து நெய் தீபமிட்டு வழிபடுங்கள்
அந்நேரம் உங்கள் எல்லா பிரச்சினையும் மாறும், உங்கள் வீட்டில் எல்லா செல்வமும் பால் போல் பொங்கும், வெண்ணெய் போல் திரளும், நெய்போல் உங்கள் வாழ்வு பெரும் இடம் பெறும், நீங்களும் வாழ்ந்து எல்லோரையும் வாழவைப்பீர்கள், முக்திநிலையும் வாய்க்கும் இது சத்தியம்
"மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று
வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக்கூடாம்
இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும்
இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே
மைத்தான நீள்நயனி பங்கன் வங்கம்
வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய
நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே"
பிரம்ம ரிஷியார்