திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையை சுற்றி வரும்போது, அஷ்ட லிங்கங்களை நாம் தரிசிக்க முடியும். அதேபோல் சென்னையில் திருவேற்காடு ஶ்ரீவேதபுரீஸ்வரர் கோவிலைச் சுற்றிலும், அஷ்ட லிங்க கோயில்கள் உள்ளன.
திருவேற்காடு என்றதும் தேவி கருமாரி அம்மன் கோயில் நினைவிற்கு வரும். ஆனால் தேவி கருமாரி அம்மன் கோயிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, தேவாரம் பாடப் பெற்ற ஸ்தலமாகப் போற்றப்படும் ஶ்ரீபாலாம்பிகை சமேத ஶ்ரீவேதபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
நான்கு வேதங்களும் வேல மரங்களாக மாறி நின்று ஈசனை வழிபட்ட காரணத்தால், வேற்காடு (வேல் காடு) என்று பெயர் பெற்றது.
திருவேற்காடு திருத்தலத்துக்கு அகத்தியர் விஜயம் செய்தபோது, அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமணக் காட்சி கொடுத்த ஸ்தலமாகும். இங்கு சிவலிங்கத்தின் பின்னால் கிழக்கு நோக்கி ஈஸ்வரனும் சக்தியும் திருமணக்கோலத்தில் இருப்பதை நாமும் தரிசிக்கலாம்.
இதனால் இத்தலம் ஒரு திருமண தடை நீங்கும் தலமாக விளங்குகிறது.
வடவேதாரண்யம் என்று பக்தர்களால் போற்றப்படும் இங்கு அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயானார் பிறந்து, வாழ்ந்த ஸ்தலம் ஆகும். சிவபெருமான், பார்வதிதேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் திருமேனியை அஷ்ட லிங்கங்களாகப் பிரித்து திருவேற்காடு தலத்தின் அஷ்டதிக்குகளிலும் கோயில்கள் கொண்டதாக ஐதீகம்.
ஒவ்வொரு லிங்கமும் தனித்தனியான நற்பலன்களை அருள்பவை. இந்த அஷ்ட லிங்கங்களும், சுமார் பதினெட்டு கிலோமீட்டர் எல்லைச் சுற்றுக்குள் உள்ளன. இத்தலங்களை ஒரே நாளில் தரிசிப்பது மிகுந்த நற்பலன்களை அளிக்கக்கூடியவை.
அஷ்ட லிங்க தரிசனம்:
பக்தர்கள் இங்கு ‘சிவாலய ஓட்டம்’ என்ற முறையிலும், அஷ்டலிங்க தரிசன சேவை என்ற வகையிலும் பௌர்ணமி, அமாவாசை, ஞாயிறு, வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் அஷ்ட லிங்கங்களை சென்று தரிசிக்கின்றனர். முதலில் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் சன்னிதியில் தொடங்கி அஷ்ட சிவலிங்கங்கள் அமைந்திருக்கும் ஸ்தலங்களை தரிசனம் செய்வது ஐதீகம்.
திருவேற்காட்டு ஈஸ்வரனைச் சுற்றிலும் எட்டுத் திசைகளில் எழுந்து அருள்பாலிக்கும் அஷ்ட திக் லிங்க மூர்த்திகளை கீழ் உள்ள படி முதலில் கிழக்கு திக்கில் உள்ள இந்திர லிங்கத்தில் தொடங்கி வடகிழக்கில் உள்ள ஈசான லிங்கம் வரை சென்று வழிபட்டு வர வேண்டும்.
1.வள்ளிக் கொல்லைமேடு (இந்திர லிங்கம்)
2.நூம்பல் (அக்னி லிங்கம்)
3.செந்நீர்குப்பம் (எம லிங்கம்)
4.பாரிவாக்கம் (நிருதி லிங்கம்)
5.மேட்டுப்பாளையம் (வருண லிங்கம்)
6.பருத்திப்பட்டு (வாயு லிங்கம்)
7.சுந்தரசோழபுரம் (குபேர லிங்கம்)
8.சின்னக்கோலடி (ஈசான லிங்கம்)
1. இந்திர லிங்கம்:
அஷ்ட லிங்கங்களில் முதலாவதாக தரிசிக்க வேண்டியது இந்திர லிங்கம். வள்ளிக் கொல்லைமேடு என்ற இடத்தில் ஈஸ்வரன், ‘ஶ்ரீஞானம்பிகை சமேத ஶ்ரீஇந்திரசேனாபதீஸ்வரர்’ என்ற பெயருடன் கோவில் கொண்டுள்ளார். இத்தலத்து சிவன் இந்திரனால் பூஜிக்கப்பட்டவர். இத்திருக்கோயில் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து நேர் கிழக்காக சுமார் 1½ கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவபெருமானை நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட அரசாங்கத்தின் மூலம் எதிர்பார்த்த நன்மைகள், செய்யும் வேலையில் பதவி உயர்வும் கிடைக்கும்.
2. அக்னி லிங்கம்:
இரண்டாவதாக வழிபட வேண்டியது அக்னி லிங்கம், நூம்பல் என்ற ஊரில் ஶ்ரீஆனந்தவல்லி சமேத ஶ்ரீஅகத்தீஸ்வரராக ஒரு சிறிய அழகான கோயிலில் அருள்புரிகின்றார். அகத்திய மகரிஷி ‘நூம்பல்’ என்னும் அபூர்வ புஷ்பங்களால் வழிபடப் பெற்றதால் இந்தத் தலத்துக்கு நூம்பல் என்ற பெயர் ஏற்பட்டது. திருவேற்காட்டிற்குத் தென்கிழக்கில் அக்னி மூலையில் அமைந்துள்ள இந்தக் கோயில் வள்ளிக்கொல்லைமேட்டிலிருந்து இருந்து சுமார் 3.5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ஈஸ்வரன் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வெப்பம் சம்பந்தபட்ட நோய்கள் அகலும். வழக்கு, வியாஜ்ஜியம் போன்றவற்றில் வெற்றி கிடைக்கும்.
3. எம லிங்கம்:
மூன்றாவதாக வழிபட வேண்டியது எம லிங்கம். செந்நீர்க்குப்பம் என்ற இடத்தில் சிவபெருமான் ஶ்ரீமரகதாம்பிகை தேவி சமேத ஶ்ரீகைலாசநாதராக காட்சியளிக்கிறார். திருவேற்காட்டிற்குத் தெற்கே இருக்கின்ற இக்கோயில் நூம்பல் ஸ்தலத்தில் இருந்து சுமார் 4½ கி.மீ தொலைவில் பூந்தமல்லி-ஆவடி சாலையின் வலது பக்கம் உள்ளது. இங்குள்ள ஶ்ரீகைலாசநாதர் சன்னிதியில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்கிட, இரும்பு சம்பந்தபட்ட தொழிலில் உயர்வையும், வழக்குத் தொல்லைகளிலிருந்து இருந்தும் விடுபடலாம். அஷ்டமத்து சனி, கண்டக சனி, ஏழரைச் சனி, போன்றவற்றில் பாதிப்பு குறையும்.
4. நிருதி லிங்கம்:
நான்காவதாக தரிசிக்க வேண்டியது நிருதி லிங்கம். பாரிவாக்கம் என்ற இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. இங்கே ஶ்ரீபாலாம்பிகை சமேத ஶ்ரீபாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் சிவபெருமான் அருள்கின்றார். திருவேற்காட்டிற்குத் தென்மேற்கு திசையில் நிருதி மூலையில் உள்ள இக்கோயில் செந்நீர்க்குப்பத்தில் இருந்து சுமார் 4½ கி.மீ தூரத்தில் ஆவடி-பூந்தமல்லி சாலையில் மகாநாடு பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது. கொடுத்த கடன் திரும்பி வருவதற்கும், உறவினர்களால் அனுகூலம் பெறுவதற்கும், தீராத துயரத்தில் சிக்கி நிர்க்கதியாய் நிற்பவர்களுக்கு நல்வாழ்வு உண்டாகவும் இங்குள்ள சிவபெருமானை நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்.
5. வருண லிங்கம்:
ஐந்தாவதாக கண்டு வணங்க வேண்டிய வருண லிங்கம், மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் ஶ்ரீஜலகண்டேஸ்வரி சமேத ஶ்ரீஜலகண்டேஸ்வரராக அருள்பாலிக்கின்றார். திருவேற்காட்டிற்குத் மேற்கு திசையில் வருண மூலையில் அமைந்திருகின்ற இக்கோயில் செந்நீர்க்குப்பத்தில் இருந்து சுமார் 2½ கி.மீ. தொலைவில் பூந்தமல்லி-ஆவடி சாலையில் காடு வெட்டி பஸ் நிறுத்தத்திற்கு அருகில் உள்ளது. இங்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வணங்கிட, வீடு கட்டுவதில் உள்ள தடை, தாமதங்கள் நீங்கும், மகப்பேறு கிட்டும், நீர் தொடர்பான நோய்கள் அகலும்.
6. வாயு லிங்கம்:
ஆறாவது லிங்கமாக வழிபட வேண்டிய வாயு லிங்கம், பருத்திப்பட்டு என்ற ஸ்தலத்தில் ஶ்ரீவிருத்தாம்பிகை உடனுறை ஶ்ரீவாயு லிங்கேஸ்வரராக இறைவன் வீற்றிருக்கிறார். திருவேற்காட்டிற்கு வடமேற்கு திசையில் அமைந்த இந்தக் கோயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் ஐயங்குளம் பஸ் நிறுத்தத்தின் அருகில் இருக்கிறது. இங்கு ஈஸ்வரன் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கண் திருஷ்டி நீங்கும், காற்றினால் ஏற்படும் நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
7. குபேர லிங்கம்:
அஷ்ட லிங்கங்களில் ஏழாவதாக குபேர லிங்க தரிசனம், சுந்தரசோழபுரம் என்ற ஸ்தலத்தில் ஶ்ரீவேம்புநாயகி சமேத ஶ்ரீகுபேரபுரீஸ்வரராக கோயில் கொண்டுள்ளார். இக்கோயில் திருவேற்காட்டிற்கு வடக்கு திசையில் பருத்திப்பட்டு வாயுலிங்க சன்னிதியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், ஆவடி-திருவேற்காடு சாலையில் இருக்கிறது. குபேர லிங்க சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுபவர்கள் வீடுகளில் பொன்னும், பொருளும் சேரும், சகலசம்பத்துக்களும் கிட்டும். கடன் தொல்லைகள் நீங்கும்.
8. ஈசான லிங்கம்:
அஷ்ட லிங்கங்களில் எட்டாவதாக தரிசனம் செய்ய வேண்டிய லிங்கம், சின்னக் கோலடி என்ற இடத்தில் ஶ்ரீபார்வதி உடனுறை ஶ்ரீபசுபதீஸ்வரர் என்ற திருநாமத்தில் அருள் புரிகின்றார். இந்த கோயில் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் சன்னிதிக்கு வடகிழக்கு திசையில் சுந்தர சோழபுரத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் திருவேற்காடு - கோலடி சாலை சுற்றுப்பாதையில் வலப்புறமாக அமைந்திருக்கிறது. இங்குள்ள சிவபெருமான் சன்னிதியின் முன்பு நெய்யுடன் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட காரியத் தடை, கண் திருஷ்டி, போன்றவைகள் விலகும். நற்செயல்களில் வெற்றி கிடைக்கும்.
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல முடியாதவர்கள், இங்குள்ள அஷ்ட லிங்கங்களை வேண்டிக்கொண்டு தரிசனம் செய்யலாம். திருவேற்காடு ஸ்தலத்திற்கு செல்வதற்கு சென்னை நகரின் பல பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
திருவேற்காடு பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளில் சென்று சுமார் 3 மணி நேரத்திற்குள் அஷ்ட லிங்கங்களையும் தரிசித்து விட்டு வரலாம்.
திருவேற்காடு ஶ்ரீவேதபுரீஸ்வரரையும் சுற்றி உள்ள அஷ்டலிங்கங்களையும் தரிசித்து நற்பலன்களை அடைவோம்.