திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா சென்ற 7-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழா தொடங்கிய காலத்தில் இருந்து தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
9-ம் திருநாளான நேற்றிரவு சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
மாசித்திருவிழாவின் 10-ம் திருநாளான இன்று காலை 6.30 மணியளவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. முதலில் விநாயகர் தேர், 2-வது சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளும் பெரிய தேர், 3-வது தெய்வானை அம்பாள் எழுந்தருளும் தேர் என மூன்று தேர்களும் தனித்தனியாக ரத வீதியில் வரும், இதனைக்காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இத்திருவிழாவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.