Breaking News :

Thursday, November 21
.

திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?


திருமலை திருப்பதியில் உறையும் ஸ்ரீவெங்கடேச பெருமாள் என்றாலே நம் நினைவுக்கு வருவது, அவருடைய அலங்காரத் திருக்கோலம்தான். 

திருமால் அலங்காரப் பிரியன்தான் என்றாலும், உலகின் பணக்காரக் கோயிலான திருமலையில் அருளாட்சி செலுத்தும் திருமகள் நாயகனாம் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்குச் செய்யப்படும் அலங்காரம் உலகப்புகழ் பெற்றது.

ஆபரணங்களைப் பொறுத்தவரை ஸ்ரீநிவாசப் பெருமாளுக்குத் தினமும் 65 முதல் 70 கிலோ வரையிலான தங்க ஆபரணங்கள் சூட்டப்படுகின்றன. 

மலர்களும் வாசனைத் திரவியங்களும் மட்டுமே பல லட்சம் ரூபாய் ஆகிறது. ஸ்பெயின் நாட்டின் குங்குமப்பூ, சீனத்துப் புனுகு, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, மைசூரின் சந்தனம், தமிழகத்துப் பச்சைக் கற்பூரம் என வாசனைத் திரவியங்கள் உலகெங்குமிருந்து வருகின்றன. 

ஐரோப்பாவின் ரோஜாக்களும், ஆஸ்திரேலியாவின் துலிப் மலர்களும் அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படி உலகெங்கும் பூக்கும் மலர்களும், வாசனாதித் திரவியங்களும் ஸ்ரீநிவாஸனின் திருவடியை வந்தடைகின்றன. 

எல்லா மலர்களும், வாசனாதிப் பொருள்களும் எம்பெருமானை அடைந்தாலும், கறிவேப்பிலையும் கனகாம்பரமும் மட்டும் திருமலை ஸ்ரீநிவாஸனின் பயன்பாட்டுக்கு வருவதே இல்லை என்று சொல்லப்படுகிறது. 

ஏன் கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஶ்ரீநிவாஸப் பெருமாளின் பயன்பாட்டுக்கு வருவதில்லை? எல்லாம் திருமாலின் திருவிளையாடல்தான்.

மகாமுனிவரும் கோபத்துக்கும் சாபத்துக்கும் பெயர் பெற்றவருமான துர்வாசர், ஒருமுறை வைகுண்டத்துக்குச் சென்றபோது, திருமாலின் திருமார்பில் எட்டி உதைத்துவிட்டார்.

திருமாலின் திருமார்பில் நித்திய வாசம் செய்யும் திருமகள் கோபித்துக்கொண்டு பூவுலகுக்கு வந்துவிட்டாள்.

திருமகளை இழந்த திருமால் தனது செல்வங்கள் அனைத்தையும் இழந்துவிட்டார். 

திருமகளை மீண்டும் அடைய ஸ்ரீநிவாஸமூர்த்தியாக பூமிக்கு வந்தார். வகுளாதேவியின் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் வேளையில், பத்மாவதி தேவியை ஸ்ரீநிவாஸர் சந்தித்தார். அவளையே மணந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்பினார்.

ராமாவதாரத்தில் தோன்றி சீதாதேவியின் இன்னல்களையெல்லாம் தாங்கிக்கொண்ட வேதவதியின் தியாகத்தைப் போற்றும் வகையில், கலியுகத்தில் தாம் ஶ்ரீநிவாஸனாக அவதரிக்கும்போது திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்தார் ராமபிரான். 

அந்த வேதவதிதான் ஆகாசராஜனின் மகளாக பத்மாவதி என்ற பெயரில் பிறந்திருந்தாள். தாம் முன்னர் அவளை மணந்துகொள்வதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே, ஶ்ரீநிவாஸர் பத்மாவதியை மணந்துகொள்ள விரும்பினார்.

மன்னரின் மகளை, தான் மணந்துகொள்ள வேண்டும் என்பதால், திருமணத்தை விமர்சையாகச் செய்ய விரும்பிய ஶ்ரீநிவாஸர், குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் பொன் வராகன்களைக் கடனாகப் பெற்றார். தான் பெற்ற கடனுக்குக் கலியுகம் முடியும்வரை வட்டி செலுத்துவதாகவும் வாக்களித்தார்.

குபேரனிடம் பெற்ற நிதியைக் கொண்டு, நாரதரும் வகுளாதேவியும் ஶ்ரீநிவாஸர் - பத்மாவதி திருக்கல்யாணத்தை மிகவும் விமர்சையாக நடத்தினர்.

தேவர்களும், முனிவர்களும், சித்த புருஷர்களும் கலந்துகொண்ட திருமண விழாவில், மாப்பிளை வீட்டார் சார்பாகச் செய்யப்பட்டிருந்த அற்புதமான அலங்காரமும், அருமையான அறுசுவை விருந்தும் எல்லோரும் போற்றும்படி இருந்தன.

ஆனால், திருமணம் என்றாலே ஏதேனும் ஒரு தகராறு வரத்தானே செய்யும்? தெய்வத் திருமணம் என்றால் மட்டும் விதிவிலக்கு கிடைத்துவிடுமா என்ன?

எந்தக் குறையுமில்லாமல் ஶ்ரீநிவாஸர் - பத்மாவதி திருமணம் நடைபெற்றாலும், கலகம் ஏற்படுத்தும் நாரதர் சும்மாயிருக்கவில்லை. 

தன் மகனுக்கு நடத்திய திருமணத்தில் எந்தக் குறையுமே இல்லை என்ற கர்வத்தில் இருந்த வகுளாதேவியாரின் கர்வத்தைப் போக்க நினைத்த நாரதர், பத்மாவதித் தாயாரிடம் சென்று, திருமணத்தில் கறிவேப்பிலையும் கனகாம்பரப் பூவும் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

அவ்வளவுதான், திருமணத்துக்குப் பின்னர் இது தொடர்பாகப் பெருமாளுக்கும் பத்மாவதி அன்னைக்கும் ஊடல் உண்டானது.

இந்த ஊடலே பெரிதாகி, பத்மாவதி தாயார் பிரிந்து சென்று திருச்சானூரை அடைந்து தனிக்கோயிலில் வீற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதனால்தான் திருமலை ஆலயத்தில் இன்றும் எந்த விதத்திலும் கனகாம்பர மலரையும், கறிவேப்பிலையையும் சேர்ப்பதில்லை என்கிறார்கள். 

ஒன்றுக்கு இரு தேவியர்களை ஸ்ரீநிவாஸ பெருமாள் கொண்டிருந்தாலும், திருமலையில் மூலவராகத் தனித்தே நின்றிருக்கிறார்.

இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்ற ஊடலில் திருமகள் கரவீரபுரத்திலும், பெருமாளே தன்னை வந்து பார்க்கட்டும் என்ற ஊடலில் திருச்சானூரில் பத்மாவதியும் தனித்தனியே கோயில் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாக் காரியங்களுக்கும் தகுந்த காரணங்களைக் கற்பிக்கும் கலியுக வரதன், கண்கண்ட தெய்வம், வெங்கடாசலபதியின் லீலைகள் எவரும் அறிய முடியாதவை. 

அவர் தேவியர்களைவிட்டுப் பிரிந்திருப்பது நம்மைக் கண்ணும் கருத்துமாகக் காப்பதற்குத்தான் என்று புராணங்களும், ஆன்மிகப் பெரியவர்களும் சொல்லியிருப்பது உண்மைதான் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஓம் நமோ வேங்கடேசாய!!!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.