Breaking News :

Thursday, November 21
.

மார்கழி திங்கள் - திருப்பாவை - 7


கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்பெண்ணே!
காசும்பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!

பாடல் விளக்கம்:

சென்ற ஆறாவது பாசுரத்தில் பகவதனுபவத்துக்கு புதியதான ஒருத்தியை எழுப்பினார்கள். இந்த பாசுரத்தில் பகவதனுபவம் உள்ள பெண்ணையே எழுப்புகிறார்கள். இந்த பெண்ணோ அந்த அனுபவமறிந்தும் உறங்குகிறாள். இவளையும் அந்த பரமனின் பெருமையை எடுத்து சொல்லி எழுப்புகிறார்கள். ஆனைச்சாத்தன் என்பது வலியன் குருவி அல்லது பரத்வாஜ பக்ஷி எனப்படும். இது அதி காலையில் எழுந்து கூட்டம் கூட்டமாக எங்கும் தம்துணையுடன் கீச்... கீச்...ஒலி எழுப்புவது, அவை கிருஷ்ண கிருஷ்ண என்று கிருஷ்ண கானம் செய்வது போல் இருக்கிறதாம். 
திருஆய்பாடியில் ஆய்ச்சிகள், கண்ணன் எழுந்துவிட்டால் தம்மை வேலை செய்ய விட மாட்டானே... தம் மீது சாய்ந்து சாய்ந்து கையை பிடித்து தடுத்து தயிர்கடைவதை தடுத்து விடுவானே. அதனால் அவன் எழுவதற்கு முன்பாக தயிரை கடைந்து விடுவோம் என்று எப்படி தேவர்களும் அசுரர்களும்அம்ருதத்துக்காக பாற்கடலை அவசர அவசரமாக கடைந்தார்களோ அப்படி வேகமாக கைவலிக்க மறுபடியும் மறுபடியும் சோராமல் கடைவதால் அதனால் அவர்கள் அணிந்திருக்கும் அச்சு தாலி, ஆமைத்தாலி போன்ற ஆபரணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி எழுப்பும் ஓசையும் கேட்கிறது.இவ்வளவு சத்தத்துக்கு நடுவே நீ எப்படி தூங்குகிறாய்? பேய்த்தனம் என்னும் தமோ குணம் உன்னை பிடித்துக்கொண்டது போலும்.

நீ நாயக பெண் பிள்ளையாயிற்றே! நாங்கள் கேசவனைப் பாட பாட நீ கேட்டுக்கொண்டே சுகமாக படுத்திருக்கலாமா?

ஒளிபொருந்திய முகத்தை உடைய பெண்ணே உடனே எழுந்து கதவு திறந்து பாவை நோன்பு நோக்க வாராய் என ஆண்டாள் தன் தோழியரை மட்டுமின்றி எல்லாப் பெண்களையும் அழைக்கிறாள்.

மந்தரமலையை மத்தாகக் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்ததாலன்றோ அமிர்தம் கிடைத்தது. அதேபோல், தினந்தோறும் இந்தப் பாடலைப் பாடி உள்ளம் என்னும் பாற்கடலில் அவனுடைய திருநாமத்தை உச்சரித்து வந்தால், கடைந்தால் தயிரிலிருந்து வெண்ணெய் கிடைப்பது போலவே, அவனுடைய பேரருள் கிடைக்கும் என்பது உறுதி!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.