Breaking News :

Sunday, December 22
.

திருப்பாவை பாடல் 12


கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?

விளக்கம்: எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்பு கிறார்களாம் இந்தப் பாடலில். தலையிலோ பனி பெய்கிறது. மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள். எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.