கிரிவலப்பாதையில் 300 குளங்கள், ரமண மகரிஷி, விசிறி சாமியார் போன்று பல மகான்களின் ஆசிரமங்கள், மடங்கள் உள்ளன. இவற்றில் மிக விசேஷமானது கிரிவலப் பாதையில் இருக்கும் அஷ்டலிங்கங்கள் எனப்படும் 8 லிங்கங்கள் தான். இந்த அஷ்ட லிங்கங்களும் ஒரு குறிப்பிட்ட தூர இடைவெளியில், ஒவ்வொரு திசையை நோக்கியதாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு லிங்கத்தை வழிபட்டால் ஒவ்வொரு பலன் கிடைக்கும். அஷ்ட லிங்கங்களை வழிபட்டால் நன்மைகள் சேரும், தீமைகள் விலகும்.
அஷ்ட லிங்கங்கள் - தரிசனம்
1.இந்திர லிங்கம்
2.அக்னி லிங்கம்
3.எம லிங்கம்
4.நிருதி லிங்கம்
5.வருண லிங்கம்
6.வாயு லிங்கம்
7.குபேர லிங்கம்
8.ஈசானிய லிங்கம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒன்பது திக்பாலர்கள் ஒரு வீடு மனையை ஆள்கின்றார்கள் என்று கூறுகிறது . அவை ஈசான்யம் ,இந்திரன் ,அக்னி ,குபேரன் , பிரம்மஸ்தானம் யமன், வாயு, வருணன் , நிருதி ஆகும். திருவண்ணாமலையில் உள்ள இந்த 98லிங்கங்களால் திருவண்ணாமலை அருணாலஸ்வரர்க்கு இந்த வாஸ்து சாஸ்திர அமைப்பினால் அதிக சக்தி ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.
இந்திர லிங்கம் -
கிரிவலப்பாதையில் முதலில் அமைந்திருப்பது இந்திர லிங்கம். இந்த லிங்கத்தை தேவர்களின் தலைவன் இந்திரன் பிரதிஷ்டை செய்ததாகவும், தினமும் இந்திரன் இந்த லிங்கத்தை வழிபட்டு செல்வதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்திர பதவி நிலைக்க வேண்டும் இந்திரன் அண்ணாமலையாரை வழிபட்டதாகவும், அவருக்கு சிவ பெருமான் சுயம்பு லிங்கமாக காட்சி தந்ததாகவும் மற்றொரு தகவலும் சொல்லப்படுகிறது. இந்த லிங்கத்தை வழிபட்டால் செல்வம் பெருகும். பதவி உயர்வு, பணியிட மாற்றம், பாதுகாப்பான வேலை போன்றவைகள் கிடைக்கும்.
அக்னி லிங்கம் :
இரண்டாவதாக இடம்பெற்றுள்ள அக்னி லிங்கம் தென்கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கிரிவலப்பாதையில் மற்ற அனைத்து லிங்கங்களும் வலது புறம் அமைந்திருக்க, அக்னி லிங்கம் மட்டுமே இடப்புறம் அமைந்திருக்கும். அக்னி லிங்கத்தின் கீழ் புறம் அக்னி தீர்த்தம் அமைந்துள்ளது. சந்திரனுக்கு சிவ பெருமான் லிங்க வடிவமாக காட்சி தந்ததாக சொல்லிப்படுகிறது. அக்னி லிங்கத்தை வழிபட்டால் நோய்கள் விலகம், பயம் நீங்கும், எதிரிகள் தொல்லை இருக்காது.
எம லிங்கம்
கிரிவலப்பாதையில் மூன்றாவதாக அமைந்துள்ளது எம லிங்கம். தென் திசை நோக்கி இந்த லிங்கம் அமைந்துள்ளது. எம தர்மன் இந்த லிங்கத்தை நிறுவியதாகவும், பூமியில் மனிதர்களின் உயிரை எடுக்க வரும் எம தூதர்கள் இந்த லிங்கத்தை வழிபட்ட பிறகே தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வதாகவும் சொல்லப்படுகிறது. இந்த லிங்கத்தை வழிபட்டால் எம பயம் நீங்கும். நீதி நெறி நிலைக்கும். செல்வ வளம் பெருகும் என்பத நம்பிக்கை.
நிருதி லிங்கம்
நான்காவதாக அமைந்துள்ள நிருதி லிங்கம் தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது. சனி தீர்த்தம் அருகே இந்த லிங்கம் அமைந்துள்ளது. அஷ்டதிக்கு பாலர்களில் ஒருவரான நிருதீஸ்வரருக்கு சிவன் காட்சி கொடுத்த இடம் இதுவாகும். சிவ பெருமான், பார்வதிக்கு காட்சி கொடுத்ததும் இதே இடத்தில் தான் என சொல்லப்படுகிறது. நிருதி லிங்கத்தை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், ஜென்ம சாபம் நீங்கும். நிலைத்த புகழ் கிடைக்கும்.
வருண லிங்கம் -
ஐந்தாவதாக அமைந்துள்ள லிங்கம் வருண லிங்கம் ஆகும். இது மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த லிங்கத்திற்கு அருகே உள்ள தீர்த்தம் வருண தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. கிரிவலம் சென்ற வருண பகவானுக்கு சிவ பெருமான் நீரின் வடிவில் காட்சி கொடுத்த இடத்தில் வருண லிங்கம் உருவாகி உள்ளது. இந்த லிங்கத்தை வழிபட்டால் நீர் சார்ந்த நோய்கள், கொடிய நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் கிடைக்கும். சனி பகவானின் அரள் கிடைக்கும்.
வாயு லிங்கம் -
ஆறாவதாக அமைந்துள்ள லிங்கத்திற்கு வாயு லிங்கம் என்று பெயர். வடமேற்கு திசையில் இந்த லிங்கம் அமைந்துள்ளது. இது வாயு பகவானால் நிறுவப்பட்ட லிங்கமாகும். இங்கு வாயு பகவானிற்கு சிவ பெருமான், பஞ்சகிருத்திகா என்ற தேவலோக மலரின் நறுமணமாக காட்சி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த லிங்கத்தை வழிபட்டால் கண் திருஷ்டி, இதய நோய்கள் நீங்கும். மன நிம்மதி உண்டாகும். சுவாசம் தொடர்பான நோய்களும் குணமாகும்.
குபேர லிங்கம்:
ஏழாவதாக அமைந்துள்ள குபேர லிங்கம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. குபேரன் இந்த இடத்தில் இருந்து அண்ணாமலையாரை வணங்கி, இழந்த செல்வத்தை மீண்டு பெற்றதாக ஐதீகம். செல்வ செழிப்புடன் வாழ இந்த லிங்கத்தை வழிபட வேண்டும்.
ஈசானிய லிங்கம்
கிரிவலப் பாதையில் கடைசியாக அமைந்துள்ளது ஈசானிய லிங்கம். வடகிழக்கு திசையில் இந்த லிங்கம் அமைந்துள்ளது. நந்தி பகவான் கிரிவலம் வந்த போது அண்ணாமலையாரின் தரிசனம் பெற்ற இடம் இதுவாகும். இந்த லிங்கம் ஈசானிய தேவரால் நிறுவப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. சிவ பெருமான் ஒருவரே நிலையானவர் என்பதை உணர்த்துவதே இந்த லிங்கத்தின் தாத்பரியம். இந்த லிங்கத்தை வழிபட்டால் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெறலாம். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் கை கூடும்.
கிரிவலம் செல்வோம் அருணாச்சலரின் அருளை பெறுவோம்.