Breaking News :

Wednesday, February 05
.

வைகுண்ட ஏகாதசி - பகல் பத்து இராப்பத்து - ஸ்ரீரங்கம்!


ஓம் நமோ நாராயணா
பகல் பத்து இராப்பத்து - ஸ்ரீரங்கம்

எல்லா ஊர்களிலும் உள்ள விஷ்ணு ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசித் திருநாள் மிகச் சிறப்பாகக்  கொண்டாடப்படும். என்றாலும், ஸ்ரீரங்கத்துக்கு தனிச் சிறப்பு உண்டு.

பிரம்மோற்சவம் என்றால் திருப்பதி எப்படி விசேஷமோ, தீபம் என்றால் திருவண்ணாமலை எப்படி விசேஷமோ, அப்படி வைகுண்ட ஏகாதசி விசேஷம் கொண்டது ஸ்ரீரங்கம். திருமாலுக்குரிய சுயம்புத்  தலங்களில் ஸ்ரீரங்கமும் ஒன்று.

ஏழு உலகங்களைக் குறிக்கும் வண்ணம் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. விஷ்ணுவின் அவதாரமானஸ்ரீராமனால் பூஜிக்கப்பட்டவருமான ஸ்ரீரங்கநாதப் பெருமான் இங்கு அருள் பாலிக்கிறார்.

இத்தலம் ஆழ்வார்கள் அனைவராலும் ஒரு குரலாகக் கொண்டாடப்பட்டது. இப்படி திருவரங்கத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தப் பெருமைக்கும் பெருமை சேர்ப்பது வைகுண்ட ஏகாதசி உற்சவம். ஆனால், இந்தத்
திருவிழாவின் பெயர் தான் வேறு. திருஅத்யயன உற்சவம். இதுதான் அந்தத் திருநாளின்
பெயர். விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் பூஜை முறைகளை பாஞ்சராத்ரம், வைகானஸம் என்று இரண்டாகச் சொல்வர்.

அவற்றில் பாஞ்சராத்ர ஆகமத்தில், ப்ரசின ஸம்ஹிதையில், மார்கழி மாத சுக்லபட்ச பிரதமை தொடங்கி இருபது நாட்களுக்கு பகவானுக்கு உற்சவம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதன்படி, மார்கழி மாத சுக்லபட்ச பதினோராம் நாள், வைகுண்ட ஏகாதசி. இதற்கு முந்தைய பத்து நாட்களை பகல் பத்து என்றும், அடுத்த பத்து நாட்களை இராப்பத்து என்று,
கொண்டாடுகிறார்கள்.

பகல் பத்து என்ற பத்து நாட்களைத்தான் அத்யயன உத்ஸவம் என்கிறார்கள். இந்தப் பத்து நாட்களிலும் பெருமாளின் முன்பாக பன்னிரு ஆழ்வார்களும் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுவதுமாக பாடப்படும். அடுத்த பத்து நாட்களை `மோகக்ஷாத்ஸவம்' என்பர். இந்த பகல் பத்து உத்ஸவத்துக்கு முதல் நாள் திருமங்கை யாழ்வார் அருளிய திருநெடுந்தாண்டகம்
பாடப்படும்.

ஏகாதசி உற்சவத்துக்கு கட்டியங் கூறுவது போல் அமைந்த திருநாள் இது. இதைத் தொடர்ந்து நடப்பது தான் புகழ் பெற்ற அரையர் சேவை. ஆழ்வாரின் பாடல்களை, இசையுடனும் அபிநயத்தோடும்.

செய்பவர்கள் அரையர்கள். அரசர் என்ற சொல்லின் திரிபு இது. அரசர்கள் தலையில் மகுடம் கட்டிக் கொள்வதைப் போல், இவர்கள் தலையில் பட்டுக் குல்லாய் அணியும் உரிமை பெற்றிருந்தனர்.

இவர்கள் பெருமாளின் முன்பாக பாடல்களைப் பாடி, ஆடுவார்கள். தங்கள் கையில் தாளம் ஒன்றை ஏந்தி, பாசுரத்தின் பொருள் விளங்குமாறு அபிநயம் செய்தபடியே பாடுவார்கள்.
நடிப்பு, முத்திரைகள், இசை என்று நுணுக்கமாக அறிந்து, அவற்றோடு பொருந்தி, பார்ப்பவரைப் பிணிக்கும்படி அமைவது அரையர் சேவை. இசையால் இறைத்தொண்டு புரியும் பாணியை அரையர் சேவை என்றும் சொல்லலாம்.

பகல் பத்து உற்சவத்தின் பெரும் சிறப்பு என்று இந்த அரையர் சேவையை நிச்சயமாகச் சொல்லலாம். இசை, நடனம், நடிப்பு என்று மூன்றும் பரிணமித்த தெய்வீகக் கலை விருந்தாக அமைந்த இந்த அரையர் சேவையின் ஆரம்பம் இந்தத் திருவரங்கம் தான். இன்றும் கூட அரையர் சேவையின் அழகைக் கண்டு ஆனந்திக்க வேண்டுமென்றால், பகல் பத்து உற்சவத்தில் பங்கேற்றால் புரியும்.

இந்தப் பத்து நாட்களிலும் தினமும் இரண்டு முறை நடைபெறும் அரையர் சேவை, ஒவ்வொரு முறையும் மூன்று மணி நேரத்துக்கு மேல் நடைபெறும். அர்ஜுன மண்டபத்தில் நடக்கும்
இந்த அரையர் சேவையை தரிசித்துப் பார்த்தால் பாசுரம் புரியாதவருக்கும் புரியும்.
ஆழ்வார்களின் உள்ளம் எவ்வளவு தூரம் பெருமாளிடம் ஒன்றியிருந்தது என்பதை உணர முடியும்.

பகல் பத்து உற்சவத்தின் ஒன்பது நாட்களிலும் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து அர்ஜுன மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார் நம்பெருமாள் (உற்சவர்). அரங்கன்
புறப்பாடு என்றால் அது சாதாரணமல்ல! தங்கக் குடை பிடித்து முன்னே பந்தம் செல்ல, வாத்திய முழக்கோடு எழுந்தருள்வார் பெருமான்.

பெருமாளைத் தோளில் தாங்கி வருபவர்கள் `ஸ்ரீபாதம் தாங்குவார். திரையிட்டு அலங்காரங்கள்
செய்து முடித்தவுடன், `அருளப்பாடு ஸ்ரீபாதம் தாங்குவார்' என்று குரல் ஒலிக்கும், ஸ்ரீபாதம் தாங்குவார் உள்ளே செல்ல, கதவுகள் மூடப்படும். பின், மீண்டும் கதவு திறக்கும். அகவிருள் நீக்கும் பேரொளிப் பிழம்பாய், அருளொளி துலங்க வெளிப்படுவார்
அரங்கத்தமுதன்.

அர்ஜுன் மண்டபத்தில் அரையர் சேவை, கோஷ்டி போன்றவை முடிந்ததும் இரவு 9 மணி அளவில் மீண்டும் மூலஸ்தானத்தை வந்தடைவார். ஒன்பது நாட்களும் இதே மாதிரி நடைபெறும். பத்தாம் நாள் மோகினி அலங்காரம். அலங்காரம் இல்லாமலேயே அனைவரையும் ஈர்த்தவன் அரங்கத்து மாயன்.

மாயங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு யோக நித்திரை புரியும் பெருமானுக்கு, மோகினி அலங்காரம் என்று தனித்து வேண்டுமா என்ன? அவனுடைய வசீகரம் இதனாலா கூடிவடப் போகிறது, இல்லை தான்! ஆனால் மோகினி அலங்காரத்தில் பார்த்தால், பக்தியாக இருப்பது பித்தாகவே மாறிவிடக் கூடும்.

அப்படியொரு பேரழகு! பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் நாள் தான் இந்த மோகினி அலங்காரம். மார்கழி தசமியன்று தான் திருப்பாற்கடல் கடையப் பட்டதாக புராணம் சொல்கிறது.

அதாவது, துர்வாசரின் சாபத்தால் இந்திரன் தேவலோகத்தை இழந்தான்; சக்தியை இழந்தான்.
திருமாலின் யோசனைப்படி அசுரர்களையும் துணையாக்கிக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர்.

மலை சாயும் நிலையில், ஆமை (கூர்ம) வடிவில் மந்தர மலையைத் தாங்கினார் பெருமாள். வாசுகியைக் கயிராகக் கொண்டு தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தனர். முதலில் ஆலகால
விஷம் வெளிப்பட்டது. அதை சிவன் ஏற்று திருநீலகண்டரானார். அதைத் தொடர்ந்து அமுதம்
வெளியிடப்பட்டது. அதை அசுரர்கள் பறித்துக் கொள்ள, தேவர்கள் திருமாலைச் சரணடைந்தனர்.

அவரும் மோகினியாகத் தோன்றி, தேவர்களுக்கு அமுதம் கிடைக்கச் செய்தார். நினைவூட்டுவது போல மோகினி அலங்காரத்தில் வெளிப்படுகிறார் அரங்கநாதர். இப்படி பகல் பத்து நாட்களின் விழாக்கள் நடக்கின்றன. இதற்கு அடுத்த நாள் முக்கோடி ஏகாதசி என்று கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பக்தர்களின் உற்சாக முழக்கங்கள், வாத்திய இசை எல்லாமாகக் கலந்து தெய்வீக லயத்தை எழுப்புகின்றன. ரத்தின அங்கியில் தன் பேரெழில் துலங்குமாறு புறப்பட்டு வருகிறார் பெருமாள். மார்கழி மாத ஏகாதசி ஆயிற்றே! எம்பெருமான் திருமேனி மீது பனி விழுமே! அதைத் தவிர்ப்பதற்காக துணிக் கூடாரம் பிடித்து வருகிறார்கள்.

வழியெங்கும் நிற்கும் அன்பர்களுக்கு அருள்பாலித்த அரங்கன், சேனை முதலியார் சன்னதிக்கு வந்து நிற்கிறார். அவரது திருவடியில் சமர்ப்பித்த மாலை, சேனை முதலியாருக்கு
சாத்தப்படுகிறது. இதற்கு என்ன பொருள் தெரியுமா? அரங்கன் மீண்டும் மூலஸ்தானத்துக்கு
எழுந்தருளும் வரை, அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கிறான். அதைத் தொடர்ந்து அரங்கனின்
அழகு நடை ஆரம்பமாகிறது.

நாழி கேட்டால் வாசல், கொடி மரம் கடந்து திரை மண்டபம் வந்து சேர்கிறார். அங்கே யஜுர்
வேதத்தின் எட்டாம் பிரச்னம் சாற்று மறையாகிறது. அதைத் தொடர்ந்து மற்ற வேதங்
களையும் சொல்கிறார்கள். வேதங்களை சுவாசமாகக் கொண்ட பகவான், பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்கு முன்பாக எழுந்தருளிவிட்டார்.

இதோ, `திற' என்று அரங்கனின் ஆணை பிறக்கிறது. பரமபத வாசலின் மணிகள் ஒலிக்கின்றன. கதவுகள் திறந்து கொள்கின்றன. ரங்கா ரங்கா என்ற கோஷம் திசைகளை அதிர வைக்கிறது.
பக்தவத்சலனான பரமன், தன் பக்தர்களோடு பரமபத வாசல் வழியே பிரவேசிக்கிறான். அதிகாலை வேளையில் தன்னுடைய பக்தர்களுக்கு அருள் புரிதல் வேண்டும் என்ற கருணையின் வடிவாக வீற்றிருக்கிறான் அரங்கநாதன்.

பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் பெறுகிறார்கள். அரையர் சேவையோடு புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபம், தொடர்ந்து ஆஸ்தான மண்டபம் வந்து சேர்கிறான் பெருமான். மீண்டும் அரையர் சேவை நடைபெறும் அன்று நள்ளிரவு வரை ரங்கநாதர் இங்கே வீற்றிருப்பார். எப்போது யோக நித்திரையிலேயே காட்சி தருபவர், வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டும் ஓய்வில்லாமல் வீற்றிருந்து தரிசனம் அருள்வார்.

அதன் பிறகு மூலஸ்தானத்தை சென்று சேர்வார். வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் தான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும். இந்த ஏகாதசி நாளிலும், அதையடுத்தும் மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். `முத்தங்கி சேவை' என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்!

வைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால், அதை `பூலோக வைகுண்டம்' என்று சொன்னது எவ்வளவு நிஜம் என்பது புரியும்.

ஓம் நமோ நாராயணாய!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.