Breaking News :

Sunday, February 23
.

மோட்ச வைகுண்ட ஏகாதசி!


கங்கையை விடச் சிறந்த தீர்த்தம் இல்லை.
விஷ்ணுவை விட உயர்ந்த தெய்வம் இல்லை.
ஏகாதசியை விடச் சிறந்த விரதம் இல்லை.
என்கின்றன ஞான நூல்கள்.

ஆமாம் ஏற்றங்கள் மிகுந்தது ஏகாதசி. தேய்பிறையில் வரும் ஏகாதசி, வளர்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக, ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி இருபத்தைந்து ஏகாதசிகளும் வருவதுண்டு. இவற்றுள் மார்கழி மாதம் வளர் பிறையில் வருவது 'மோட்ச ஏகாதசி'. இதையே வைகுண்ட ஏகாதசியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்.

புண்ணியமிகு இந்தத் திருநாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறும், அவர் களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும். அன்றைக்கு ஏகாதசியின் மகிமையையும், இந்த விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்களையும் விவரிக்கும் திருக்கதைகளைப் படிப்பது வெகு விசேஷம் என்பார்கள். நாமும் ஏகாதசி குறித்த சில திருக்கதைகளைப் படித்து மகிழ்வோம்.
அசுரர்களுக்கு அருளிய ஏகாதசி!

ஆலிலை மேல் பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதே வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள். அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதே கொல்ல முயன்றார் கள். பெருமாள் அவர்களைத் தடுத்து ''பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்'' என்றார்.

கொஞ்சம் இறங்கி வந்தால், அது தெய்வமாகவே இருந்தாலும் அலட்சியப்படுத்துவது என்பது அசுரர் களின் சுபாவம் போலிருக்கிறது. அசுரர்கள் அலட்சிய மாக, ''நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்கள் உனக்கே வரம் தருவோம்'' என்றார்கள்.

ஸ்வாமி சிரித்தார். ''அப்படியா? சரி! இப்படி அகங்காரம் கொண்ட நீங்கள் என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்'' என்றார்.
அசுரர்கள் திகைத்தார்கள். ''ஸ்வாமி! தாங்கள் இவ்வாறு எங்களுக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. தங்களோடு ஒரு மாத காலம் நாங்கள் சண்டையிட வேண்டும். அதன் பிறகு தங்களுடைய அருளினால் நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என வேண்டினார்கள்.

அவர்கள் வேண்டியபடியே ஒரு மாத காலம் போரிட்டு, பிறகு அவர்களை வதைத்தார் பெருமாள். இறுதியில் மகாவிஷ்ணுவின் குணங்கள் எல்லாவற்றையும் உணர்ந்த அசுரர்கள், ''தெய்வமே! தங்கள் பரமபதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்'' என வேண்டிக் கொண்டனர். ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று (பரமபதத்தின்) வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான், அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார்.

அங்கே ஆதிசேஷன் மேல் இருக்கும் அனந்தனின் திவ்விய மங்கல வடிவம் கண்டு பரம ஆனந்தம் அடைந்தனர் அசுரர்கள்.

''ஸ்வாமி! பிரம்மா முதலான எல்லோருக்கும் பகவானான தங்களை அர்ச்சாவதாரமாக (விக்கிரக வடிவமாக)ப் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று (கோயிலில்) வடக்கு நுழைவாயில் வழியாக வெளியே எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் வடக்கு நுழைவாயில் வழியே வெளியே வருபவர்களும், அவர்கள் எவ்வளவு பெரும் பாவிகளாக இருந்தாலும், மோட்சம் அடைய வேண்டும். இதுவே எங்கள் பிரார்த்தனை!'' என்று வேண்டினார்கள்.

''அப்படியே ஆகும்!'' என அருள் புரிந்தார் அச்சுதன். 'வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டவாசனை தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என நமக்காக அன்றே அசுரர்கள் வேண்டி இருக்கிறார்கள். ஒப்பில்லாத ஸ்வாமியும் அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்.

எனவே, வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபடுவதுடன் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில் கலந்துகொள்வதாலும், பெருமாளைத் தரிசித்து வழிபடுவதாலும் இம்மை செழிக்கும்; மறுமை சிறக்கும். சகல செளபாக்கியங்களும் ஸித்திக்கும்.

முன்னோருக்கும் அருளும் ஏகாதசி
கம்பம் எனும் நகரை மன்னர் வைகானஸர் ஆண்டு வந்தார். குடிமக்களுக்குக் குறையேதும் இல்லாத ஆட்சி. ஆனால், மன்னருக்கு?

ஒரு நாள் இரவு. மன்னர் ஒரு கனவு கண்டார். அது அவருக்குத் துயரத்தை விளைவித்தது. பொழுது விடிந்ததும் வேதத்தில் கரை கண்டவர்களை அழைத்தார்.

''உத்தமர்களே! நேற்று இரவு நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். என் முன்னோர்கள் நரகத்தில் விழுந்து துயரப்படுகிறார்கள். என்னைப் பார்த்து, 'மகனே! நாங்கள் படும் துயரம் உன் கண்ணில் படவில்லையா? இந்த நரகத்தில் இருந்து எங்களை விடுவிக்க ஏதாவது வழி செய்ய மாட்டாயா?’ என்று கதறி அழுதார்கள். இதற்கு என்ன அர்த்தம்? நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்'' என்று வேண்டினார் மன்னர்.

''மன்னா! பர்வதர் என்று ஒரு முனிசிரேஷ்டர் இருக்கிறார். உன் முன்னோர்கள் ஏன் நரகத்தில் இருக்கிறார்கள்? அவர்களை எப்படிக் கரை ஏற்றுவது என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும். அவரிடம் போ!'' என்று வழி காட்டினார்கள் உத்தம வேதியர்கள்.
மன்னர் உடனே பர்வதரைத் தேடிப் போனார். அவரிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, தன் வருத்தத்தை நீக்குமாறு வேண்டினார்.

உடன் கண்களை மூடி சிறிது நேரம் தியானித்த பர்வத முனிவர் பின் கண்களைத் திறந்து, எதிரில் கை கூப்பி நின்றிருந்த மன்னரிடம் சொல்லத் தொடங்கினார்:
''வைகானஸா! உன் தந்தை, அரசன் என்ற பதவி போதையில் மனைவியை அலட்சியம் செய்தான். 'இல்லற தர்மத்தில் ஈடுபடுபவர்கள், நல்ல பிள்ளை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியுடன் சேர வேண்டிய காலங்களில் சேர வேண்டும்’ என்பதை மறந்தான். அந்தப் பாவம்தான் அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.'

''நீ உன் மனைவி மக்களுடன், மோட்ச ஏகாதசி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து, பரவாசுதேவனான பகவானை பூஜை செய்! அதன் பலனை உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்! அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்!'' என்று சொன்னார் பர்வதர்.
வைகானஸனும் மோட்ச ஏகாதசி விரதம் இருந்து, பலனை முன்னோர்களுக்கு அர்ப்பணித்தார். அதன் பலனாக அவன் முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெற்று, மகனுக்கு ஆசி கூறினார்கள். அன்று முதல் வைகானஸன் மோட்ச ஏகாதசியைக் கடைப்பிடித்துச் சிறப்படைந்தார். ஆம், நமக்கும் நம் முன்னோர்களுக்கும் நற்கதி தரக் கூடிய ஏகாதசி இது.

ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நித்திய கர்மாக்களை (காலை வழிபாடு) செய்ய வேண்டும். ஏகாதசி அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மஹாவிஷ்ணுவை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.

ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மஹாவிஷ்ணுவின் கதைகளைக் கேட் பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும். கோபம், கலகம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும். துவாதசி அன்று காலையில் ஸ்வாமியைப் பூஜை செய்து விட்டுப் பிறகே உண்ண வேண்டும். ஓர் ஏழைக்காவது உணவு தந்து, அதன் பிறகே நாம் உண்பது நல்லது. அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை உண்பது நல்லது.

ஏகாதசிகள் - 25
உற்பத்தி ஏகாதசி,
மோட்ச ஏகாதசி,
ஸபலா ஏகாதசி,
புத்ரதா ஏகாதசி,
ஷட்திலா ஏகாதசி,
ஜயா ஏகாதசி,
விஜயா ஏகாதசி,
ஆமலகி ஏகாதசி,
பாப மோசனிகா ஏகாதசி,
காமதா ஏகாதசி,
வரூதிநி ஏகாதசி,
மோகினி ஏகாதசி,
அபரா ஏகாதசி,
நிர்ஜலா ஏகாதசி,
யோகினி ஏகாதசி,
சயினி ஏகாதசி,
காமிகா ஏகாதசி,
புத்ர(ஜா)தா ஏகாதசி,
அஜா ஏகாதசி,
பத்மநாபா ஏகாதசி,
இந்திரா ஏகாதசி,
பாபாங்குசா ஏகாதசி,
ரமா ஏகாதசி,
ப்ரபோதினி ஏகாதசி,

கமலா ஏகாதசி ஆகியவையே 25 ஏகாதசிகளாகும்........
சகல செல்வங்களும் உங்களைத் தேடி வர இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் !
சகல செல்வங்களையும் தரும் வைகுண்ட ஏகாதசி !!

வைகுண்ட ஏகாதசி பிறந்த கதை :
 தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அசுரன் துன்புறுத்தி வந்தான். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். முரனுடன் விஷ்ணு போரிட்டு வெற்றிப்பெற்றார். பிறகு ஒரு குகைக்கு சென்று ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.

 அப்பொழுது அவரைக் கண்ட முரன், விஷ்ணுவைக் கொல்ல வாளை ஓங்கியபோது, விஷ்ணு தன் உடலிலுள்ள சக்தியை ஒரு பெண் வடிவத்தில் தோற்றுவித்தார். அவள் முரனுடன் போரிட்டு வென்றாள்.

 அசுரனை வென்ற பெண்ணுக்கு 'ஏகாதசி" என்று விஷ்ணு பெயர் சு ட்டினார். அசுரனை வென்ற நாள் ஏகாதசி என அழைக்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பதவி அளிப்பதாகவும் வரமளித்தார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியின் விரத மகிமை :
 ஒருமுறை பார்வதிதேவி, மிகச்சிறந்த விரதம் எது என சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு சிவபெருமான், தேவி! ஏகாதசி விரதமே விரதங்களில் சிறந்தது. இவ்விரதம் பாவங்களைப் போக்கும் விரதமாகும். இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்.

 முப்பத்து முக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுசரித்து, விஷ்ணுவின் அருளைப் பெறுவதால் இவ்விரதத்திற்கு 'வைகுண்ட முக்கோடி ஏகாதசி" என்ற சிறப்புப் பெயருண்டு. ஏகாதசி நாளில் உணவு இல்லாமல் உபவாசம் இருப்பவர், எல்லாப் பாவங்களில் இருந்தும் முக்தி பெற்று மோட்ச கதியை பெறுவார் என்றார்.

சிறப்பு :
 வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடத்தப்படும். இந்த விழா அதிகாலை வேளையில் நடைபெறும்.
 இதில் மக்கள் பலரும் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து, சொர்க்கவாசலின் வழியாக வெளியே வருவார்கள்.
இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும். சகல செல்வங்களும் உண்டாகும். மேலும், பகைவர்களின் பலம் குறையும்.

ஏகாதசி_விரத_முறை:
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று பரமேஸ்வரனே சொல்லியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள், முதல்நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும். அன்று துளசிஇலை பறிக்கக்கூடாது. பூஜைக்குரிய துளசியை முதல்நாளே பறித்துவிட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசிதீர்த்தம் அருந்த வேண்டும். "பாரணை' என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும்.

அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உணவில் இடம்பெறுதல் அவசியம். அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். சுவாமிக்கு நைவேத்யம் செய்து, ஒரு ஏழைக்கு தானம் செய்த பிறகு. சாப்பாட்டை முடித்து விட வேண்டும்.

சூரிய உதயத்திற்குள் சாப்பிடுவது மிகவும் உசிதம். அன்று பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் செல்லும் பாக்கியம் பெறுவர்.
"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.