Breaking News :

Thursday, November 21
.

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை


நிறைய  குடும்பத்தினருக்கு இத்தலத்து அம்பாள் சுவாமி, ஸ்ரீ தையல்நாயகி ஸமேத ஸ்ரீ வைத்தியநாதர்,  குலதெய்வம்.
சுமார் 2000 வருடங்களுக்கு முன் தோன்றிய 'காமிக ஆகமம்' உடைய பழமை ஆலயம். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 16வது தலம்.

இதன் புராண பெயர், புள்ளிருக்குவேளூர்.
புள் (ஜடாயு). இருக்கு (ரிக்வேதம்), வேள் (முருகன்), ஊர் (சூரியன்) ஆகிய இந்நால்வரும் பூஜித்ததால் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயர் கொண்டது.

மற்றும் ஜடாயு புரி, கந்தபுரி, வேதபுரி என்றும், அங்காரகன் வழிபட்டமையால் அங்காரகபுரம் என்றும், அம்பிகையைப் பூஜித்தமையால் அம்பிகாபுரம் எனவும் அழைக்கப்பெறுகிறது.

இத்தலத்தை பாடிய அடியார்கள் ...

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், குமரகுருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள்.

இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும்.

தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு உடம்பில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கி நலம் பெறலாம். இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்ள உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்கும்.

தினமும் அர்த்த ஜாமத்தில் முத்துகுமார சுவாமிக்கு தீபாராதனை நடக்கும். செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் அர்த்தசாம பூஜையில் முருகனின் திருவடிகளில் சாத்தப்பெறும் நேத்திரப்படி சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது. செவ்வாய் தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். இவரது சன்னதியில் தரப்படும் வைத்தியநாதர் மருந்தை வாங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய்கள் பல தீரும்.

தல வரலாறு:
அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. வைத்தீசுவரன் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது. இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.

இங்கு மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.

1. கற்பக விநாயகர். இவரை வழிபட்டால் என்ன வரம் கேட்டாலும் தருவார்.
2. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அங்காரகனை வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப் பெறுவர்.
3. வைத்தியநாதசுவாமி சர்வ ரோக நிவாரணி. இவரை வணங்கினால் தீராத பிணிகள் எல்லாம் தீரும்.
4. செல்வ முத்துக் குமரர் என்ற முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பாக்கியம் தொழில் விருத்தி கிடைக்கும்.
5. தையல் நாயகி அம்பாளை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோஷம் என்ற குறை நீங்கும்.
கோயில் அமைப்பு:
தெற்கில் கணேசன் திகழ் மேற்கில் பைரவரும். தொக்கவடக்கில் தொடர்காளிமிக்க கிழக்கு உள்ளிருக்கும் வீரனையும் உற்றுப் பணிந்துய்ந்தேன். புள்ளிருக்கு வேளூரிற்போய்.
எனும் பாடலின் மூலம் வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தைத் தெற்கில் கணபதியும்,மேற்கில் பைரவரும், வடக்கில் காளியும், கிழக்கில் வீரபத்திரரும் காவல் புரிகின்றனர் என்று அறியலாம்.

தல விருட்சம்:
கிழக்குக் கோபுர வாயிலில் உள்ள வேம்பு தல விருட்சமாகும். இதனை ‘வேம்படிமால்’ என்கின்றனர்.
ஆதிவைத்தியநாதபுரம் இதுதான் என்பர்.

இத்தல தீர்த்தம், சித்தாமிர்த தீர்த்தம்.

இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் குணமாகும். இதில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன.

விசேஷமான சித்தாமிர்த தீர்த்தம் நான்கு புரங்களிலும் மண்டபத்தோடும் படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் விளங்குகின்றது. இங்கே கிருத யுகத்தில் காமதேனு இறைவனைத் தன் முலைப்பால் கொண்டு திருமஞ்சனம் ஆட்டிய சம்பவம் நிகழ்ந்தது.

அதுவே புனித தீர்த்தமாக பெருகி இங்கு அமைந்ததென்பர். இதன் காரணமாக கோக்ஷர தீர்த்தம் என்று பெயர்ப் பெறலாயிற்று.

சதானந்த முனிவர் இங்குள்ள தீர்த்த கரையில் தவம் இருந்த போது, தவளையை பாம்பு விழுங்க முயற்சித்து, இவரது தவத்திற்கு இடையூறு செய்தது. கோபத்தில் இவர் விடுத்த சாபத்தினால் இந்த தீர்த்தத்தில் பாம்பு, தவளை இருப்பதில்லை.

இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். நோய்தீரக் குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம்.

சித்தாமிர்த தீர்த்தம் தவிர கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்று வேறு தீர்த்தங்களும் இங்கு உள.

நோய் தீர்க்கும் திருச்சாந்து ...

4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு "திருச்சாந்து' எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும். தோல் நோய்களுக்கு, இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர்.

வைத்தியநாதர் தன்னை வணங்கும் மக்களின் சாதாரண வியாதிகளை மட்டுமின்றி, பிறவிப்பிணியையே தீர்த்து விடுபவர். இவரை வணங்கினால் மன அமைதி, வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமண பாக்கியம், குழந்தை வரம், தோஷ நிவர்த்தி ஆகியன உண்டாகும்.

கோயிலின் கிழக்கேயுள்ள நுழைவிடத்தில், ஆதிவைத்தியநாதர் அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த சிவன் சன்னதியை தரிசித்தால், அது ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளை தரிசித்த பலனைத்தரும் என்பது ஐதீகம். வைத்தியநாதரும் மேற்கு நோக்கி உள்ளார்.
முருகப்பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம். இராமர் வழிபட்டு அருள் நலமுற்ற தலம்.

செவ்வாய் தோஷ நிவர்த்தி ...

இந்தக் கோயிலிலுள்ள அங்காரகன் சன்னதியில் செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை மற்றும் பல சிரமங்களை அனுபவிப்போருக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. நிலம் வாங்க, கடன் தொல்லை நீங்க, மூட்டு வலி குணமாக இவரை வணங்குவது சிறப்பு.

ஜடாயு குண்டம் ..

இத்தலத்தில் சம்பாதி ஜடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். ஜடாயுவின் வேண்டுகோளின்படி இராமபிரான் இத்தலத்தில் (விபூதி குண்டத்தில்) சிதையடுக்கிச் ஜடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் ஜடாயு குண்டம் எனப்பட்டது.

வீரசேனன் என்ற அரசன் சயரோத்தினால் பீடிக்கப்பெற்ற சித்திர சேனன் என்ற தன் மகனுடன் இத்தலத்திற்கு வந்து நீராடி இக்குண்டத்திற்கு அதிரசம் வடை முதலியன நிவேதனம் செய்து வேதிகையையும் பொன்னால் திருப்பணி செய்து குண்டத்திலுள்ள நீற்றை அள்ளி எடுத்துத் தானும் அணிந்து தன் புதல்வனுக்கும் அணிவித்து நோய் நீங்கப்பெற்று நலமுற்றான்.

செல்வ முத்துக்குமாரர்:

வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையாதலால், இங்குள்ள முருகன் "செல்வ முத்துக்குமாரர்' என அழைக்கப்படுகிறார். சூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார்.

செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் தினமும் நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது புனுகு, பச்சைக்கற்பூரம், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம், பால் சாதம், பால் ஆகியவற்றுடன் விசேஷ பூஜை செய்யப்படும்.

முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான். தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும்.

இத்தலத்தில் நவகிரகங்கள் வரிசையாக இருக்கும். எல்லா தலங்களிலும் சுவாமிக்கு முன்புற பிரகாரத்தில்தான் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் நவகிரகங்கள் சுற்றுப்பிரகாரத்தில் சுவாமிக்கு பின்புறம் உள்ளது. இராமர் பூஜித்த தலம் இது.

தையல் நாயகி அம்மனை வணங்கினால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலதோஷம் நீங்கும். செவ்வாய்க் கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்வார்.

நவக்கிரகங்களுக்கு அடுத்தாற்போல் 63 நாயன்மார்கள், ஸப்த கன்னியர் ஆகியோரையும் மற்றும் ஆயுர்வேதத்தின் தலைவனான தன்வந்திரி சித்தர் விஷ்ணு ஸ்வரூபத்தில் அமர்ந்திருக்கும் வடிவத்தையும் காணலாம். துர்க்கை மற்றும் சஹஸ்ர லிங்கமும் விசேஷமானவை.

வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ வைத்தியநாதர் திருவடிகளே சரணம்
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
உன்னையன்றி வேறுதெய்வம் உள்ளம் எண்ண வில்லையே
ஓசைகொண்ட தமிழினாலே பாடுவேன் உன் பிள்ளையே
அன்னை, பிள்ளை மழலையிலே அகம் குழைதல் போலவே
அணிய வேண்டும் எனது சொல்லும் ஆதி வைத்தியநாதனே.

தேசமெங்கும் கோயில்கள் திறந்து வைத்த வாயில்கள்
தேடும் அன்பர் யார்க்கும் இன்பம் கோடிநல்கும் மூர்த்திகள்
பூசைகொள்ளும் தேவர்கள் யாவையும் நின் கோலமே
போற்றும் என்னை வாழ்விலேமுன் னேற்றுவைத்ய நாதனே

ஓதும் நாலு வேதமும் உலாவு திங்கள், ஞாயிறும்,
உகந்த கந்தவேள், சடாயு உண்மை அன்பின் ராமனும்
பாதபூசை செய்யவே பலன் கொடுத்த ஈசனே
பாதிகொண்ட தையலோடு வாழி வைத்ய நாதனே

ஆலகால நஞ்சை நீ அமிர்தமாய் அருந்தினாய்
அடித்துவைத்த பன்றியின் இறைச்சியும் விரும்பினாய்
பாலன் நஞ்சு தேடவோ? பன்றிவேட்டை ஆடவோ?
படைத்தபா சுவைத்தருள் பராவும் வைத்ய நாதனே.


வாத, பித்த, சிலேட்டுமம் வகைக்கு நூறு நோய்க்குலம்
மனிதராசி அறிகிலாத புதிய நோய் தினம், தினம்
வேதனை வளர்ந்ததன்றி வென்றதோ மருத்துவம்?
மேலும் என்ன கூறுவேன்? கண் பாரும், வைத்ய நாதனே

ஆயுர்வேதம் ஆங்கிலம் அமைந்த சித்தவைத்தியம்
ஆனவேறு வகையிலும் அனேகமான பத்தியம்!
பாயும் நோயும் போனதே? பலித்து நன்மை ஆனதோ?
பாவியேன் என் கூட்டத்தோடுன் பாரும் வைத்ய நாதனே.

அங்குமிங்கும் ஓடிஎன்ன? அகலவில்லை நோய்களே
ஆடி என்ன? பாடி என்ன? விலகவில்லை பேய்களே
மங்கைபாகன் நீயிருக்க எங்கு செல்வோம் சேய்களே?
மனமிரங்கி அருள்வழங்கு வாழி வைத்யநாதனே.

கண்ணில்லாத குருடருக்கும் கண்கொடுக்கும் ஈசனே
கால் இலாத முடவருக்குக் கால் கொடுக்கும் போஜனே
எண்ணிலாத நோயின் கூட்டம் இடமிலாமல் ஓடவே,
என்னுளே எழுந்தருள்வாய் அண்ணல் வைத்ய நாதனே.

சிந்தையில் இருந்த நோய் செயல்களால் விளைந்த நோய்
திசுக்குள், தோல், நரம்(பு), எலும்பு, குருதியில் செறிந்த நோய்
எந்த நோயும் போக்குவாய் எதிர்வராமல் ஆக்குவாய்
இசைந்தகந் புரியிலே அமர்ந்த வைத்யநாதனே.

நாம, ரூப பேதமற்ற ஞான ஜோதி மூர்த்தியே
நாளும் உன்னை அன்புசெய்து பாடுகின்றேன் வாழ்த்தியே
சாமவேத கீதனே சடாயு போற்றும் பாதனே
தஞ்சம், தஞ்சம், தஞ்சம் என்னைத் தாங்கு வைத்ய நாதனே.
வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ வைத்தியநாதர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தையல் நாயகி துதி தையல்நாயகி அம்மா தையல்நாயகி-என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி
ஊர் உலகம் காப்பவளே தையல்நாயகி உன் பாதம் சரணடைந்தேன் தையல்நாயகி என்று
செவ்வாய்க்கிழமை தாயின் பிள்ளைகள் அனைவரும் அவரவர் இல்லத்தில் இருந்து பிரார்த்திப்போம் .

ஸ்ரீ தையல் நாயகி துதி
தையல்நாயகி அம்மா தையல்நாயகி-என்றும்
தாயாக இருப்பவளே தையல்நாயகி
ஊர் உலகம் காப்பவளே தையல்நாயகி
உன் பாதம் சரணடைந்தேன் தையல்நாயகி
குங்குமத்தில் ஒளிவீசும் தையல்நாயகி-முத்துக்
குமரனுக்கே தாயுமானாய் தையல்நாயகி
வைத்தியத்தின் சிகரமாம் தையல்நாயகி
வைத்தியனாதனுக்கே துணையுமானாய் தையல்நாயகி
தங்கமுத்து மண்டபத்தில் தையல்நாயகி- என்றும்
சிங்காரக் கொலுவிருக்கும் தையல்நாயகி
பொங்கிவரும் காவேரிபோல் தையல்நாயகி
தங்குதடை நீக்கிடுவாள் தையல்நாயகி
காட்டுவழி ஆனாலும் தையல்நாயகி
கனிவுடனே துணைவருவாள் தையல்நாயகி
கள்ளர்பயம் ஆனாலும் தையல்நாயகி
கலங்கவே விடமாட்டாள் தையல்நாயகி
மணமுடிக்கக் கேட்டுக் கொண்டால் தையல்நாயகி
மங்களமாய் முடித்து வைப்பாள் தையல்நாயகி
மழலைச் செல்வம் வேண்டுமென்றால் தையல்நாயகி
மகிழ்ச்சியுடன் தந்திடுவாள் தையல்நாயகி
மாடுமனை வீடுசுற்றும் தையல்நாயகி நீ
மனதுவைத்தால் வளரும் அம்மா தையல்நாயகி
காடுகரை தோப்புவயல் தையல்நாயகி
உன்கண்பட்டால் பொன்விளையும் தையல்நாயகி
அம்மா என்றே உனை அழைத்தால் தையல்நாயகி
ஆறுதலே பிறக்குதம்மா தையல்நாயகி
தாயே என்றுஉனை அழைத்தால் தையல்நாயகி
நோய் நொடிகள் நீங்குதம்மா தையல்நாயகி
பேறுபெறச் செய்தவளே தையல்நாயகி-எங்கள்
பிள்ளைகளைக் காக்கவேண்டும் தையல்நாயகி
தொல்லை எல்லாம் நீக்கவேண்டும் தையல்நாயகி-வாழ
நல்லவழி காட்டவேண்டும் தையல்நாயகி
கம்பூன்றி நடைநடந்து தையல்நாயகி-உன்னை
காணவே வருகின்றேன் தையல்நாயகி
தெம்புண்டு மனதினிலே தையல்நாயகி திவ்ய
தெரிசனமே தரவேண்டும் தையல்நாயகி
செய்யும் தொழில் சிறக்க வேண்டும் தையல்நாயகி
செல்வ வளம் பெருகவேண்டும் தையல்நாயகி
ஆறுநூறு ஆகவேண்டும் தையல்நாயகி-அதில்
ஆனந்தமே பொங்கவேண்டும் தையல்நாயகி
சங்கொலி முழங்கவேண்டும் தையல்நாயகி-என்
சந்ததியும் சிறக்கவேண்டும் தையல்நாயகி
மங்களமே பொங்கவேண்டும் தையல்நாயகி-என்றும்
மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் தையல்நாயகி
அம்மா என்றே உனை அழைத்துத் தையல்நாயகி
அடிபணிந்தேன் உந்தன்பிள்ளை தையல்நாயகி
என்னகுறை எனக்கினிமேல் தையல்நாயகி
எனக்குத்துணை நீஇருக்கத் தையல்நாயகி
சிவாயநம திருச்சிற்றம்பலம் ஓம் சக்தி ஓம்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.