வள்ளி-தெய்வானை இருவரும் திருமாலின் குமாரத்திகளே. ஒருநாள் திருமால் சிவனின் ஆனந்த தாண்டவத்தை தரிசித்தபோது, ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அந்த துளிகள் மகாலட்சுமியின் அருளுடன் இரு பெண்களாக உருவம் கொண்டன. அவர்களுக்கு அமுதவல்லி, சுந்தரவல்லி என பெயர் சூட்டி வளர்க்கப்பட்டனர்.
அமுதவல்லி, சுந்தரவல்லி ஆகிய இருவரும் முருகப்பெருமானை திருமணம் செய்து கொள்வதற்காக அவரை நோக்கி தவம் புரிந்தனர். தவத்தில் மகிழ்ந்த முருகர், அவர்கள் விருப்பப்படி திருமணம் புரிவதாக அருள்புரிந்தார். மேலும் சுந்தரவல்லி (வள்ளி) மண்ணுலகிலும், அமுதவல்லி (தெய்வானை) தேவருலகிலும் பிறக்க அருளினார். அவர்களே பிற்காலத்தில் வள்ளி-தெய்வானையாக பிறந்து முருகப்பெருமானை மணந்தனர் என கூறப்படுகிறது.
தெய்வானை திருக்கல்யாணம்
அமுதவல்லி, இந்திர உலகத்தில் பொய்கையில் மலர்ந்திருந்த நீலோற்பலம் என்னும் மலரில் குழந்தையாக தோன்றினாள். அவளை இந்திரனும், இந்திராணியும் கண்டெடுத்து மகளாக வளர்த்தனர். மேலும் அவள் கற்பக விருட்சத்தின் கீழே காமவல்லியால் கட்டப்பட்ட தங்கத் தொட்டிலில் ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்டதால் தெய்வானை என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாள்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து உதித்து, அன்னையிடம் வேல் பெற்று சூரபத்மனை வீழ்த்தி, அவனை தன் வேலால் இரு கூறுகளாக பிளந்து மயிலாகவும், சேவலாகவும் மாற்றி அதனை வாகனமாகவும், கொடியாகவும் ஏற்றுக் கொண்டு, அசுரர்களால் சிறைபிடிக்கப்பட்ட தேவர்களையும் விடுவித்தார் முருகப்பெருமான்.
தேவர்களின் துன்பங்களை போக்கியதால் மகிழ்ந்த இந்திரன் முருகப்பெருமானுக்கு தனது புதல்வியான தெய்வானையை மணம் முடிக்க விரும்பினார்.
இதை அறிந்த முருகப்பெருமான் இந்திரனிடம், 'தெய்வானை என்னை மணக்க வேண்டி சரவணப் பொய்கையில் தவம் புரிந்துள்ளாள். ஆகவே பங்குனியும் உத்திரமும் சேர்ந்த சுப தினத்தில் அவளை கரம் பிடிப்பேன்' என்று கூறினார். அவர் கூறியபடியே முருகப்பெருமான்-தெய்வானை திருமணம் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடைபெற்றது. சூரனை ஆட்கொண்ட தலம் திருச்செந்தூர். எனவே திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவிற்கு மறுநாள் முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
வள்ளி திருக்கல்யாணம்
மலையின் அடிவாரத்தில் நம்பிராஜன் என்ற வேடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஆண் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். பெண் குழந்தை வேண்டும் என ஏங்கி கொண்டிருந்தார்.
அதேசமயம் அந்த மலையின் அடிவாரத்தில் யோக நிலையில் திருமால் எழுந்தருளியிருந்தார். அங்கே பெண் மான் வடிவில் வந்த மகாலட்சுமி, திருமாலின் முன்னே துள்ளி ஓடி கொண்டிருந்தார். திருமால் அந்த மானை இச்சையுடன் பார்க்க, அதனை தன் யோகத்தால் உணர்ந்த சுந்தரவல்லி திருமாலின் கண் வழியாக, மான் வயிற்றில் உள்ள கருவை அடைந்தாள். அதனால் அந்த மான் கர்ப்பம் அடைந்தது. இவ்வாறு கர்ப்பம் அடைந்த மான் சில மாதங்களில் மானிட உருவில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து அங்கேயே விட்டு விட்டுச் சென்றுவிட்டது. அதேசமயம் யோக நிலையை விட்டு திருமால் வெளியே வர, மகாலட்சுமியும் மான் வடிவம் நீங்கி அங்கு வந்தார். அப்பொழுது இருவரும் அந்த குழந்தையை தழுவி, வள்ளிக்கிழங்கு அகழ்ந்த குழியொன்றில் விட்டு சென்றனர்.
பின் அப்பகுதிக்கு வந்த வேடவர் பெண்கள், அந்த குழந்தையை எடுத்து நம்பிராஜனிடம் கொடுத்தனர். அவரும் அக்குழந்தையை தன் குழந்தையாக ஏற்று வளர்த்து வந்தார். வள்ளிக்கிழங்கு அகழ்ந்த குழியில் குழந்தையை கண்டதால் குழந்தைக்கு 'வள்ளி' என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.
வள்ளி பருவ வயதை அடைந்த பின்பு, வேடர்களின் குல வழக்கப்படி அமைத்துள்ள பரணில் அமர்ந்து, நெல் கதிர்களை பாதுகாக்க பறவைகளையும், விலங்குகளையும் விரட்டும் பணியில் ஈடுபட்டாள். அப்பொழுது அங்கே சென்ற நாரதர் அவளின் அழகை கண்டு வியந்து, அதை பற்றி முருகப்பெருமானிடம் சென்று விவரித்தார். மேலும் வேடவர்களும், வள்ளியும் முருகப்பெருமானின் மீது அதிகளவு பக்தி கொண்டுள்ளதையும் எடுத்து கூறினார்.
உடனே முருகப்பெருமான் வேடர் போல தன் உருவத்தை மாற்றி கொண்டு வள்ளியிடம் சென்றார். அவரை பார்த்த வள்ளி, 'நீங்கள் யார்?' என்று கேட்க, முருகனோ காதல் உணர்வுடன் வள்ளியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது வள்ளியின் தந்தையான நம்பிராஜன் மற்றும் வேடவர்கள் சிலர் அங்கு வந்து கொண்டிருந்தார்கள். அதை பார்த்த வள்ளி தனது தந்தை, தான் ஒரு வேடனிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தால் இந்த வேடனை ஏதேனும் செய்து விடுவார் என்று எண்ணி உடனே தப்பித்து செல்லுமாறு கூறினாள். முருகனோ சிறிது தூரம் சென்று வேங்கை மரம் போல மாறி நின்று கொண்டார். புதியதாக ஒரு மரம் அங்கே இருப்பதை வேடவர்களும், நம்பிராஜனும் கண்டனர். பின் வேடவர்கள் அந்த மரத்தை வெட்ட முயற்சி செய்ய, நம்பிராஜன் அவ்வாறு செய்ய வேண்டாம் என தடுத்து விட்டார். பின் வள்ளியை பார்த்து விட்டு அனைவரும் சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் வேடனாக மாறிய முருகப்பெருமான் வள்ளியிடம் சென்று காதல் உணர்வுடன் பேசினார். வள்ளியோ அதற்கு இடம் கொடுக்காமல் எச்சரிக்கும் வகையில் பேசி முருகப்பெருமானை அனுப்பி வைத்தாள்.
முருகனோ மீண்டும் முதியவர் உருவம் எடுத்து வள்ளியிடம் சென்று, சாப்பிட உணவு கேட்டார். வள்ளி தன்னிடம் இருந்த தினை மாவு, தேனை கொடுத்தாள். சாப்பிட்ட பின் தாகத்திற்கு நீர் கேட்க வள்ளியோ முதியவரை அங்கிருந்த சுனைக்கு அழைத்து சென்று நீர் அருந்த வைத்தாள்.
பிறகு முதியவர் 'என்னை நீ திருமணம் செய்து கொள்வாயா?' என்று கேட்க, வள்ளிக்கு கோபம் அதிகரித்து முதியவரை எச்சரித்து விட்டு தன்னுடைய இடத்திற்கு சென்று விட்டாள்.
பிறகு வள்ளியை திருமணம் செய்ய உதவி செய்யுமாறு வேண்டி தன் அண்ணனான விநாயகரை அழைத்தார் முருகப்பெருமான். விநாயகர் யானை உருவில் வந்து வள்ளியை அச்சுறுத்த, வள்ளி பயந்து முதியவர் வடிவில் இருந்த முருகப்பெருமானை தழுவிக் கொண்டாள். அவரது திருமேனி அவள் மீது பட்டதுமே அவர் முருகப்பெருமான் என அறிந்து கொண்டாள் வள்ளி. பின்னர் அவளின் முற்பிறப்பு பற்றி கூறிவிட்டு நாளை வருவதாக அவ்விடத்தில் இருந்து சென்றார் முருகப்பெருமான்.
அடுத்த நாள் வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த நம்பிராஜனும், வேடவர்களும் முருகப்பெருமான் மீது கோபம் கொண்டு அவரை தாக்க முயன்றனர். அங்கே நடந்த நிகழ்வில் வேடவர்களும், நம்பிராஜனும் இறக்க நேரிட்டது. இதனை கண்ட வள்ளி வருத்தம் அடைந்தாள். அப்பொழுது அங்கு வந்த நாரதரின் வேண்டுகோளுக்கு ஏற்ப நம்பிராஜனையும், வேடவர்களையும் உயிர்ப்பித்தார் முருகப்பெருமான். உயிர்பெற்ற அனைவரும் முருகப்பெருமானை வழிபட்டு தங்கள் இடத்திற்கு அழைத்து சென்று முருகப்பெருமான்-வள்ளி திருமணத்தை தங்கள் குல வழக்கப்படி நடத்தி வைத்தனர்.