Breaking News :

Friday, October 25
.

வானமாமலை பெருமாள் கோவில், நாங்குநேரி


திவ்ய தேசங்களில் 48-வது திவ்ய தேசமான வானமாமலை பெருமாள் கோவில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் அமைந்துள்ளது.

இத்தலத்து இறைவனின் பெயர் ‘வானமாமலை’ என்கிற ‘தோத்தாத்திரி நாதர்’. உற்சவர் தெய்வநாயகப் பெருமாள்.

இத்தலத்திற்கு திருச்சிரீவரமங்கை, திருவரமங்கை, திருச்சிரீவரமங்கள நகர், தோத்தாத்திரி சேத்திரம், வானமாமலை என பல பெயர்கள் உள்ளன.
108 திவ்ய தேசங்களில், எட்டு ஆலயங்கள் சுயம்பு தலமாகும். அந்த எட்டு தலங்களில் இந்த ஆலயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திருத்தலத்தை பற்றிய செய்திகள் பிரமாண்ட புராணம், கந்தபுராணம் மற்றும் நாரத புராணங்களில் இடம் பெற்றுள்ளன.

லட்சுமி தாயார் இத்திருத்தலத்தில் குழந்தையாக பிறந்ததால், இத்திருத்தலம் வரமங்கை என்றும் அழைக்கப்படுகிறது.

ஆதிசேஷன் இத்திருத்தலத்தில் தவமிருந்து மகாவிஷ்ணுவை சுமக்கும் பாக்கியம் பெற்றான். கருடாழ்வாரும் இங்கு தவம் இயற்றி வைகுண்ட வாசலில் நிற்கும் பேறு பெற்றார்.

இத்திருக்கோவிலில் அமைந்துள்ள ஒவ்வொரு தூண் களிலும் நான்கைந்து சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

அவற்றுள் சிறப்பானவை, அனுமனை அணைத்து நிற்கும் ராமபிரானின் திருக்கோலமும், பீமனை எட்டிப்பிடிக்கும் புருஷாமிருகத்தின் சிற்பமும் ஆகும்.
கருவறையில் தோத்தாத்திரி நாதர், பட்டாபிஷேக கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அவரது அருகில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருமருங்கிலும் இருக்க, ஊர்வசியும், திலோத்தமையும் சாமரம் வீசிக்கொண்டு இருக்கின்றனர்.
தங்கமயமான ஆதிசேஷன் குடைபிடிக்க வைகுண்டத்தில் மகாவிஷ்ணு இருக்கும் கோலத்தை இங்கே காணலாம்.

பிருகு, மார்க்கண்டேயர், சந்திரர், சூரியர் ஆகியோரும் வெளியே விஸ்வக்சேனர் ஆக 11 பேர் ஏகாசனத்தில் இருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

முன்னொரு காலத்தில் காட்டிற்கு வேட்டைக்கு சென்ற சிந்து தேசத்து மன்னன், வழி தவறி தனது நண்பர்களையும், பணியாளர்களையும் விட்டு நெடுந்தூரம் சென்று விட்டான்.

காட்டிற்குள் ஒரு சிறு குடிசையை கண்ட மன்னன், அந்த குடிசைக்குள் சென்றான். அப்போது அந்த குடிசைக்குள் கொஞ்சம் உணவு இருப்பதை பார்த்த மன்னன், அந்த உணவை உண்டு பசியாறிக்கொண்டான்.

அந்த நேரத்தில் வெளியில் சென்று விட்டு திரும்பிய ‘குஷாணனா’ என்னும் முனிவர், தனது குடிசைக்குள் வேறு ஒருவர் இருப்பதையும், விஷ்ணுவிற்கு படைப்பதற்காகத் தான் வைத்து இருந்த உணவை அவர் தின்று விட்டதையும் கண்டு கடும் சினம் கொண்டார்.

ஆத்திரத்தில் முனிவர், அந்த மன்னனை ‘நாயாக மாறுவாய்’ என்று சபித்து விட்டார்.

சாபம் பெற்ற மன்னன், ‘எப்போது நான் சாபத்தில் இருந்து விடுதலை ஆவேன்?’ என்று முனிவரை கேட்டான்.

அதற்கு முனிவர், ‘உலகத்தின் மிகச் சிறந்த தீர்த்தத்தில் நீராடும்போது உன் சாபம் நீங்கப் பெறுவாய்’ என்று விமோசனம் கூறினார்.

நாயாக மாறிய மன்னன் காட்டில் அலைந்து திரிகையில், வேடர்களால் பிடிக்கப்பட்டு இத்திருத்தலம் அமைந்துள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தான். பின்னர் இத்தலத்தில் உள்ள சேற்று தாமரை தீர்த்தத்தில் வேடர்களுடன் நீராடியபோது தனது சாபம் நீங்க பெற்றான்.

பிறகு ஆலயத்தில் இறைவனை வழிபட்டு நாடு திரும்பியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

இத்திருத்தலம் ஒரு சுயம்பு தலமாகும். இத்திருத்தலத்தின் சேற்று தாமரை தீர்த்தமே திருப்பாற்கடல் என்று கூறப்படுகிறது. நம்மாழ்வார் இத்தலத்து இறைவனை பத்து பாசுரங்களில் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

இக்கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகிறது. சித்திரை பிரமோற்சவம், வைகாசி வசந்த உற்சவம், ஆவணி பவித்ர உற்சவம், தை அமாவாசை எண்ணெய்க் காப்பு, பங்குனி திருக்கல்யாண உற்சவம் ஆகியவை முக்கிய திருவிழாக்களாகும்.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது நாங்குநேரி. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் அனைத்து பஸ்களிலும் கோவிலுக்கு செல்லலாம்.

நோய் தீர்க்கும் எண்ணெய்

இத்திருத்தலத்தின் இறைவனுக்கு தினமும் எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெய், அங்குள்ள ஒரு கிணற்றில் ஊற்றப்படுகிறது. பின்னர் அந்த கிணற்றில் இருந்து எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது.

இந்தப் பிரசாத எண்ணெயானது சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்து என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

ஓம் நமோ நாராயணாய

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.