Breaking News :

Friday, April 04
.

வெற்றி தருவாள் வீர மனோகரி அம்மன்!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை வீரமனோகரி அம்மன்.

நாக கன்னியில் வயிற்றில் பிறந்த அஷ்ட காளியரில் 2வதாக பிறந்தவள் மாகாளி. திருச்செந்தூரில் சூரபத்மனை, முருகபெருமான் வதம் செய்தபோது, சூரபத்மனின் குருதி இந்த மண்ணில் விழுந்து விட கூடாது என்பதால் அந்த குருதியை தான் வாங்கியவள் இந்த மாகாளி.  அதன் பின்னர் வீரமாகாளி என்று அழைக்கப்படலானாள்.

திருச்சிரலைவாய்(திருச்செந்தூர்) கடற்கரை பகுதியில் சூரபத்மனை சுப்ரமணியர் வதம் செய்தார். அப்போது சூரபத்மன் உடலில் இருந்து வெளியேறிய உதிரத்தில் அசுரர்கள் எவரேனும் உதயமாக கூடாது என்றெண்ணி அந்த உதிரத்தை தான் வாங்கிய குடித்த வீர மாகாளி அவ்விடம் விட்டு மீண்டும் பொதிகை மலை செல்ல முற்பட்டாள்.

வரும் வழியில் வீரைவளநாடு(குலசேகரப்பட்டினம்) என்ற பகுதியில் உள்ள கடற்கரையோரம் இருந்த வனச்சோலை வீரமாகாளிக்கு பிடித்துவிட அங்கேயே வாசம் செய்தாள். தனக்கு ஒரு ஆலயம் வேண்டும். முக்கால பூஜை மற்றும் விழாக்கள் வேண்டும். அதற்கு, தான் இவ்விடம் வந்ததை, இப்பகுதியினர் அறிய வேண்டும். என்று எண்ணிய வீரமாகாளி, அவ்வழியாக வருவோர், போவோரை அடித்து, அச்சுறுத்தினாள். குழந்தை முதல் குமரி வரையிலான பெண்களுக்கு நோய்களை ஏற்படுத்தினாள்.

ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி, அப்பகுதியில் மந்திரத்திலும், மாந்திரீகத்திலும் பெரியவனாக திகழ்ந்த வல்லவராயரை நாடினர். அவர் சோழி போட்டு பார்த்தார்.

அதில் வந்திருப்பது உக்கிர வடிவான காளி என்று தெரிந்தது. காளி இப்படி இங்கே என்று பூஜை செய்து பார்க்கையில் வந்திருப்பது அஷ்ட காளிகளில் ஒருவரான மாகாளி என்பது தெரிந்தது. மேலும் சூரசம்ஹாரத்தின் பின்னர் தான், மாகாளி இவ்விடம் வந்ததையையும் அறிந்த வல்லவராயர், ஊர் பிரமுகர்களிடம் சிலைக்கு வடிவத்தை வரைந்து கொடுத்து இந்த உருவில் சிலை செய்து கோயில் எழுப்பி அம்மனுக்கு பூஜை பரிவாரங்கள் செய்து வழிபட்டு வாருங்கள் பிணிகள் அகலும் மணியான வாழ்க்கை ஒளிரும் என்றார்.

அன்றிரவு வல்லவராயர் கனவில் தோன்றிய மாகாளி, வல்லவராய நீதான் எனக்கு பூஜை செய்ய வேண்டும். என்று கூறினாள். அதன்படி ஊரார்கள் கூடி அம்மனுக்கு கோயில் எழுப்பினர். வல்லவராயர் பூஜை செய்து வந்தார்.

அம்மன் அருள் திறன் ஊரெங்கும் பரவ, அம்மனின் ஆலயம் தேடி நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்தது.

பனை ஓலையால் வேயப்பட்ட கோயில் பெரிதாக கட்டப்பட்டது. வல்லவராயர் வம்சத்தினர் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தனர். ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்ய சென்ற பூசாரியுடன் 3 வயது நிரம்பிய மகனும், அவரது மனைவியும் உடன் சென்றனர். கோயிலில் பூசாரி அம்பாளுக்கு பணிவிடை செய்யும் போது, சிறுவன் கோயிலிலுள்ள மணிமண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

பூஜை முடிந்ததும் பூசாரியின் மனைவி, பையன் விளையாடிக்கிட்டு இருக்கான், கூப்பிட்டா, அப்பா கூட வாரேன்கிறான். வரும்போது மகன கூட்டிட்டு வாங்க என்று கூறிக்கொண்டு பூசாரியின் மனைவி சென்றுவிட்டாள். இரவு 10 மணி ஆனது, சிறுவன் சந்நிதானத்திற்கு பின்னால் விளையாடிக்கொண்டிருந்தவன் அங்கேயே தூங்கி விட்டான். இதை கவனிக்காத பூசாரி, கோயில் நடையை பூட்டிவிட்டு புறப்பட்டார்.

அடுத்த மாதம் அப்பகுதியில் வேறொரு கோயிலில் கும்பாபிஷேகம் நடக்க இருந்தது. அது தொடர்பாக கோயில் நிர்வாகியிடம் பேசுவதற்கு சென்றவர். மணி 12 ஆன பின் வீடு திரும்பினார்.
வீட்டு கதவை திறந்த அவரது மனைவி திடுக்கிட்டு கேட்டாள். பையனை எங்கே என்று, நீ கூட்டிட்டு வரலியா? எதிர் கேள்வி கேட்டார் பூசாரி. உடனே ஒப்பாரி வைக்கலானாள் அவரது மனைவி. அய்யய்யோ, அந்த காளி, என் மகனை பலி எடுத்திருவாளே, மகனை பறி கொடுத்துக்கிட்டு நான் வாழனுமா, இப்போதே பிள்ளைய எடுத்திட்டு வாங்க, என்றாள்.

சரசு, அப்படியெல்லாம் பேசாதே, நமக்கு புள்ள வரம் கொடுத்ததே அந்த ஆத்தா தான். அது மட்டுமல்ல, அடைச்ச கோயில திறக்க கூடாது.

அதுவும் வெள்ளிக்கிழமை நடு சாமப்பொழுதாச்சு, ஆத்தா மேல பாரத்தப்போட்டு நிம்மதியா தூங்கு, கோழி கூவுனதும் போய் நடை திறந்து பையனை கூட்டிட்டு வந்திடுறேன் என்றார் பூசாரி.

ஆத்திரம் கொண்டு கத்தினாள் மனைவி, புள்ளன்னு கொஞ்சமாவது பாசம் இருந்தா, இப்படி பேசுவீகளா, உமக்கென்ன, வலிச்சு பெத்த எனக்கு தானே அருமை தெரியும். இப்ப குழந்தையோட நீங்க வரலண்ணா, நான், நாக்கு பிடுங்கிட்டு நாண்டுகிட்டு நின்னுடுவேன் என்று கோபத்துடன் கொந்தளித்தாள் பூசாரி மனைவி.

மனைவியின் கோபத்தை தணிக்கும் பொருட்டு, மனமில்லாம் கோயில் சாவிக்கொத்துடன் புறப்பட்டார் பூசாரி.

கோயிலில் சரிந்து படுத்தபோது சுவரில் கால்பட்டு, கண் விழித்த குழந்தை கதறியது. சத்தம் கேட்டு மாகாளி எழுந்து வந்து குழந்தையை கையில் எடுத்து அரவணைத்தாள்.
கோயிலுக்கு ஓடோடி வந்த பூசாரி, கதவை திறக்க முற்படுகிறார்.

அப்போது கோயிலுக்குள் இருந்து தாலாட்டு பாட்டு கேட்க, மெய் மறந்து நின்றார். இருந்த போதும் மனைவியை நினைத்தார். நாம் போக நேரமானால் அவள் சொன்னது போல செய்து விடுவாளோ என்று எண்ணி கலங்கினார். பின்னர் திடமான முடிவு எடுத்து கோயில் கதவில் சாவியை வைக்க, கோயிலுக்குள் இருந்து அசிரீரி கேட்டது.

ஏய், பூசாரி, போய் நாளை காலையில் வழக்கம்போல் வா, குழந்தை தூங்கிவிட்டான். பத்திரமாக என்னிடத்தில் இருப்பான். இரவு முடிந்து காலையில் வா என்றது. பூசாரி முடியாது இப்போதே என் குழந்தை வேண்டும் என்றார். நான் சொல்வதை கேளாமல் வாதம் செய்கிறாய். ம்..ம்.. சரி, அபிஷேக நீர் வரும் மடை முன் வந்து நில், உன் குழந்தை வரும் எடுத்துக்கொள் என்று கூறி மாகாளி, சிறுவனை தன் சிலையின் பின் புறம் மலர் படுக்கையில் தூங்க வைத்துவிட்டு, அவனைப்போன்று மாய உடலை உருவாக்கி, அதிலிருந்து கை, கால் என தனித்தனியாக எடுத்து, அபிஷேக மடை வழியே அனுப்பினாள்.

மகன் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியே எடுத்துக் கொண்ட பூசாரி கதறி அழுதார். அப்போது பூசாரி மனைவியும் கோயிலுக்கு மகனை அழைக்கச் சென்ற கணவன் வராதது கண்டு, கோயிலுக்கு வந்தாள். மகனின் உடல் பாகங்களை கண்டு மயக்கமுற்று விழுந்தாள்.

பொழுது புலர்ந்தது, தகவல் ஊரார்களுக்கு தெரிந்தது. அனைவரும் ஒன்று கூடி, சந்நதி முன்பு நின்று அம்பாளை மனமுருக வேண்டினர்.

அம்மா, உனது குழந்தைகள் நாங்கள் அறியாது செய்த பிழையை மன்னித்து பொறுத்தருள வேண்டும். காப்பதற்கு தானே தெய்வம், நீயே எங்களை அழித்தால் என்ன தர்மம். அப்படியானால் உனக்கு எதற்கு கோயில், பூஜை என்று கேட்க, அசிரீரி கேட்டது.

பூட்டிய கோயிலை திறக்க கூடாது என்பதற்காகவே நான் ஆடிய திருவிளையாடல், பூசாரியே நீ உன் தவறை உணர்ந்து கொள்ளவே யான் இவ்வாறு செய்தேன். உனது மகன் எனது சிலையின் பின்புறம் தூங்குகிறான். அவனை பெயர் கூறி அழைத்தால் அவன் எழுந்து வருவான். என்றது. அது போல் பூசாரி மகனை பெயர் கூறி அழைக்க, அவரது மகன் எழுந்து வந்தான். சிரித்த முகமாக வந்த மகனை பூரிப்போடு வாரி அனைத்தாள் பூசாரியின் மனைவி.

இந்த சம்பவத்திற்கு பிறகு வீரமாகாளி என்ற உக்கிர பெயரை மாற்ற வேண்டும். அம்மன் சாந்த ரூபனியாக இருக்க வேண்டும் என்பதற்காக வீர மனோகரி என்று பெயர் வைத்து அழைக்கலாயினர்.
குடும்பத்தில் அமைதியும், குழந்தை வரமும் தந்தருள்வாள் வீரமனோகரி. அது மட்டுமன்றி செய் தொழில் மற்றும் தேர்வு, தேர்தல் முதலானவற்றில் வெற்றி பெற இந்த அம்மனை நேரில் சென்று வணங்கினால் வெற்றி நிச்சயம்.

இந்தக்கோயில் திருச்செந்தூரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் உள்ளது. ஓம் சக்தி

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.