Breaking News :

Thursday, November 21
.

தீபாவளி பூஜைகள் தெரியுமா?


தீபத் திருநாளாம் தீபாவளியன்று விடியற்காலை எழுந்தவுடன் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்வது முக்கியம். பிறகு பூஜையறையில் புத்தாடைகள் (துணியில் மஞ்சள் தடவ வேண்டும்), பட்டாசு, பட்சணங்கள் வைத்து படைத்து லஷ்மி குபேரரை வழிபாடு செய்த பின்னர் புத்தாடைகள் உடுத்தி பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, பட்சணம் சாப்பிட்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடி, ஒருவருக்கொருவர் பட்சணம் கொடுத்து மகிழ வேண்டும். இதுவே தீபாவளிக் கொண்டாட்டம்.

 

இறைவனை வழிபடுவதற்காகவே பண்டிகைகள் என்பது நியதி. ஒவ்வொரு பண்டிகைக்கும் குறிப்பிட்ட தெய்வ பூஜைகள் உண்டு. அதேபோல் தீபாவளி பண்டிகைக்கும் பூஜைகள் பல உள்ளன. நம் விருப்பம் மற்றும் சூழலுக்கேற்ப இவற்றில் ஒன்றைச் செய்து இறைவனின் அருள் பெறலாம்.

 

1. மகாலட்சுமி பூஜை: கங்கா ஸ்நானம் செய்த பின் இந்த பூஜையைச் செய்ய வேண்டும். அன்று லட்சுமிக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்புப் பண்டம் வைத்து வணங்கி குழந்தைகளுக்குத் தரலாம். இதனால் மகாலட்சுமியின் அருள் கிடைத்து வீட்டில் செல்வம் பெருகும்; இளம் பெண்களின் திருமண ஆசை நிறைவேறும்.

 

2. லட்சுமி குபேர பூஜை: தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி குபேர பூஜை செய்வது வழக்கம். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும். பிணி, மூப்பு, துன்பம் தொலையும். ‘சுக்லாம் பரதரம்’ சொல்லி கணபதியை பூஜித்து லட்சுமி, துர்கா, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வழிபடலாம். மகாலட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள் என்பதால் மனதில் நம்பிக்கை பெருகி, செல்வ வளம் கிட்டும். அன்று ‘ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம’ எனும் மந்திரத்தை ஓதுவது சிறப்பு. இதை108 முறை சொல்லலாம்.

 

3. குலதெய்வ வழிபாடு: நம் குலதெய்வத்தை நினைத்து,- முக்கியமாக முன்னோர் பெண் தெய்வங்களை நினைத்து அவர்களுக்குப் பிடித்த உடை, பூஜைப் பொருட்கள், பட்சணங்கள் வைத்து வணங்க வேண்டும். இதை ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் செய்யலாம். தீபாவளியன்று செய்வது மிகவும் நன்மை தரும்.

 

4. முன்னோர் வழிபாடு: நம் வீட்டில் இறந்துபோன முன்னோர்களை எண்ணி, அவர்களுக்குப் பிரியமானவற்றை வைத்து வணங்கி, அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும். இதனால் நன்மைகள் கிடைக்கும். பித்ருக்கள் மனமகிழ்ந்தால் நல்வாழ்வு அமையும்.

 

5. கேதார கௌரி நோன்பு: இது தீபாவளியுடன் சேர்ந்து வரும் ஐப்பசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் செய்யும் நோன்பு. இதனால் மாங்கல்ய பலம் கூடும். பார்வதி தேவி தவம் இயற்றி ஈசனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீயான நாள் இது என்பது நம்பிக்கை. தீபாவளியன்று பெண்கள் கணவனுடன் இணைபிரியாது வாழ மேற்கொள்ளும் விரதம் இந்த கேதார கௌரி விரதம். தம்பதியருக்கான விரதம்.

 

6. தன்வந்திரி பூஜை: பாற்கடலைக் கடையும்போது தோன்றியவர் தன்வந்திரி பகவான். நோய்களைத் தீர்க்கும் இவர் மருத்துவக் கடவுள் ஆவார். கையில் அமுத கலசம் மற்றும் வைத்திய ஏட்டுச் சுவடிகளுடன் தோன்றிய திருமாலின் அம்சமான இவரை வணங்கி தீபாவளி லேகியம் செய்து சாப்பிட்டால் உடல் நலம் பெறும்.

 

7. யம தீபம்: தீபாவளியின் முதல் நாள் இரவு யம தீபம் ஏற்ற வேண்டும். ஒரு ஆழாக்கு எண்ணெய் பிடிக்கும் அளவு பெரிய அகலில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். நம் வீட்டு மொட்டைமாடி அல்லது மேற்கூரையில் எவ்வளவு உயரம் வைக்க முடியுமோ அவ்வளவு உயரத்தில் யம தீபத்தை தெற்கு நோக்கி வைக்க வேண்டும். இதனால் உயிர் மீதுள்ள பற்றற்று யம பயம் நீங்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.