ஆஞ்சநேயரின் பல வகையான வடிவங்கள்!!
ஆஞ்சநேயரின் வடிவங்களில், ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்குரியதாக கூறப்படுகிறது. அவற்றை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
பஞ்சமுக ஆஞ்சநேயர்...
மயில் ராவணன் என்பவன், ராவணனுடனான யுத்தத்தின்போது பல மாய வேலைகளைச் செய்து ராமபிரானுக்கு தொந்தரவு செய்து வந்தான். அவனை அழித்து ராம-லட்சுமணரை மீட்பதற்காக, அனுமன் எடுத்த அவதாரமே 'பஞ்சமுக ஆஞ்சநேயர்" வடிவம் ஆகும்.
நிருத்த ஆஞ்சநேயர்...
இந்த அனுமன், போருக்குச் செல்வது போன்ற தோற்றத்தில் காட்சி தருவார். ராம-ராவணப் போரின்போது, அசுரர்களுடன் மிக உக்கிரமாக போரிட்ட ஆஞ்சநேயரின் தோற்றம் இது. இவரை வணங்குவதால், வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கும்.
கல்யாண ஆஞ்சநேயர்...
அனுமன், சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது, அவரது வியர்வைத் துளி கடலில் விழுந்தது. அதனை மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவ கன்னி பருகியதால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தது. அந்த தேவ கன்னியை, பின்னர் அனுமன் மணந்ததாக கூறுகிறது ஒரு கிளைக் கதை. இந்தக் கோலத்தில் இருக்கும் அனுமனே 'கல்யாண ஆஞ்சநேயர்" என்று அழைக்கப்படுகிறார்.
பால ஆஞ்சநேயர்...
அஞ்சனை மகனாக, அழகான பாலகனாக, அவர் தாயோடு சேர்ந்து இருக்கும் கோலமே 'பால ஆஞ்சநேயர்" என்று சொல்லப்படுகிறது. இவரை துதித்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வீர ஆஞ்சநேயர்...
ஒரு முறை முனிவர்களின் சாபத்திற்கு ஆளானார் அனுமன். அதனால் அவரது சக்திகள் அனைத்தும் அவருக்கு மறந்து போனது. இந்த நிலையில் சீதையை கண்டு வருவதற்காக அனுமனை, இலங்கைக்குப் போகச் சொன்னார் ராமன். அப்போது ஜாம்பவான், அனுமனுக்கு அவரின் சக்திகளைப் பற்றி எடுத்துக்கூற, தனது வீரமும், வலிமையும் நினைவுக்கு வந்து விஸ்வரூபம் எடுத்தார். அந்த வடிவமே 'வீர ஆஞ்சநேயர்" ஆகும்.
பக்த ஆஞ்சநேயர்...
தன்னை வழிபடும் பக்தர்களை, இரு கரம் கூப்பி வணங்கும் தோற்றத்தில் இருப்பவரே 'பக்த ஆஞ்சநேயர்.
" ராமரை எங்கும் எதிலும் காண்பவர் அனுமன். அதன்படி ராமநாமம் சொல்லி தன்னை வணங்கும் பக்தர்களின் மனதிலும் ராமரைக் காண்கிறார் அனுமன். அதனாலேயே அவர் பக்தர்களை கரம் குவித்து வணங்குவதாக சொல்லப்படுகிறது.
யோக ஆஞ்சநேயர்...
ராமாயணத்தின் முடிவில் ராமநாமத்தை பூலோகத்தில் உள்ள மக்கள் சொல்வதைக் கேட்டு இன்புறுவதற்காக இங்கேயே தங்கிவிட்டார் அனுமன். ராமரின் நாமத்தை மட்டுமே கேட்கும் தொனியில் அவர் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். இந்த வடிவத்தையே 'யோக ஆஞ்சநேயர்" என்கிறோம். இவரை ராம நாமம் சொல்லி வழிபட்டால் கேட்டவை கிடைக்கும்.
சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர்...
ராவணனைக் கொன்றதால் ராமருக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்க காசியிலிருந்து சிவலிங்கத்தை கொண்டுவர சென்ற அனுமன் வருவதற்கு நேரம் ஆனதால், சீதை மணலில் செய்த லிங்கத்தைக் கொண்டு பூஜை செய்தார் ராமர். அதனால் வருந்திய அனுமனின் வாட்டத்தைப் போக்க, அனுமன் கொண்டு வந்த லிங்கத்தையும் பூஜித்து அருள் செய்தார் ராமபிரான். லிங்கத் திருமேனியை ஸ்தாபனம் செய்த வடிவில் காட்சி தருபவர் 'சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர்."
சஞ்சீவி ஆஞ்சநேயர்...
ராவணனுடனான போரில் ராமருக்கு பேருதவியாக இருந்தவர் அனுமன். ஒருமுறை லட்சுமணன் போரில் மூர்ச்சை அடைந்தபோது, அவரை காப்பதற்காக சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தவர் அனுமன். இப்படி சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பறப்பது போன்ற தோற்றத்தில் இருப்பவரையே 'சஞ்சீவி ஆஞ்சநேயர்" என்கிறோம்.