முருதேஸ்வர் கோயில் உலகத்திலேயே இரண்டாவது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் நகரம் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. சிறு குன்றின் மீது எழில் கொஞ்சும் பச்சை புற்கள் சூழ அமைந்திருக்கிறது முருதேஸ்வர் ஆலயம். அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான்.
முருதேஸ்வர் ஆலயமும், அதன் ராஜகோபுரமும் கண்டுக கிரி குன்றில் அமைந்திருக்கிறது. மூன்று புறங்களிலும் அரபிக் கடல் சூழ்ந்திருக்க அழகிய தீபகற்பமாய் திகழ்கிறது முருதேஸ்வர் ஆலயம். இந்தக் கோயில் இருக்கும் இடத்தில்தான் முன்பொரு முறை பிராமண சிறுவன் வடிவில் இருந்த விநாயகர், ராவணனுக்காக வைத்திருந்த ஆத்ம லிங்கத்தை கீழே தவறவிட்டுவிட்டதாக புராணம் கூறுகிறது. இங்கு வரும் பயணிகள் 123 அடி உயர பிரம்மாண்ட சிவன் சிலையுடன், சிவலிங்கத்தையும் காணலாம்.
இந்தக் கோயிலை சுற்றிலும் நிறைய கான்க்ரீட் கல்வெட்டுக்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்தக் கோயிலின் ராஜகோபுரம் உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இச்சிறப்புகளை காட்டிலும் கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த கோயில் தென்னிந்திய கட்டிடக் கலையின் உன்னத சாட்சியாக இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.