மிகவும் சுலபமான கேள்வி இது.. இப்படிக் கூட கேட்கலாம். "இந்த பொழைப்புக்கு பிச்சை எடுத்து சாப்பிடலாம்.. இதுக்கு செத்து போயிடலாம்.. நானா இருந்தா தும்பை பூவுல தூக்கு போட்டு செத்திருப்பேன்.." என்று எலும்பில்லாத நாக்கை வைத்துக் கொண்டு யார் யாரை வேண்டுமானாலும் கேட்டு விடலாம்.
இந்த அட்ஜஸ்ட்மெண்ட் சமாச்சாரங்கள் எல்லாம் மீடியாக்கள் மற்றும் கிசுகிசுக்கள் வாயிலாக தான் நமக்கு தெரிகிறதே தவிர, நேரில் யாரும் 100 சதவிகிதம் பார்த்ததில்லை. புறம் கூறுவதில் ஒரு கிளுகிளுப்பு என்றால், அதை பகிர்வதில் உச்சகட்ட கிளுகிளுப்பு ஏற்படுகிறது.
சிறுவயதில் அறிவொளி இயக்க கூட்டத்தில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வட்டமாக உட்கார வைத்து ஒருவரின் காதில் சில வார்த்தைகளை ரகசியமாக சொல்லி அடுத்தவர் காதில் அதை ரகசியமாக சொல்லச் சொல்வார்கள். அனைத்து தரப்பினருக்கும் விஷயம் சென்று சேர்ந்தவுடன் அந்த வட்டவடிவ கூட்டத்தில் ஒரு சிலரிடம் அவர்கள் காதில் கேட்ட வார்த்தைகள் என்னவென்று கேட்பார்கள்.
"நான் நேத்து பிரெட் சாப்பிட்டேன்.." இது தான் அந்த வார்த்தை. முதல் ஐந்து பேர் சரியாக சொன்னார்கள். அடுத்ததாக ஒருவர் "நான் நேத்து பெட்'ல படுத்தேன்.." என்றார். இன்னொருவர் "நான் அவனை பெட்'ல பார்த்தேன்.." என்றார். "நான் அவனையும் அவளையும் பெட்'ல ஒன்னா பார்த்தேன்.." என்பதில் இருந்து இன்னும் மோசமான வார்த்தைகளை கேட்டதாகவும் கூறினார்கள்.
இப்படித் தான் அவரவர் எண்ண ஓட்டங்களுக்கேற்ப வார்த்தைகள் தடம் புரள்கிறது. ஏன்.. இது போன்ற அட்ஜஸ்ட்மெண்ட்கள் IT, ஊடகம், கல்வி, அரசு அலுவலகங்கள் போன்ற துறைகளில் நடக்கவில்லையா?..எவ்வளவு செய்திகளை கேள்விப்படுகிறோம் நாம். நடிகைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நாமே ஒரு எண்ணத்தில் வாழ்கிறோம்.
நடிகைகள் மோசமானவர்களும் அல்ல.. அவர்களுடைய அந்தரங்கத்தை அறிந்ததாக அறிக்கை விடுபவர்கள் உத்தமர்களும் அல்ல.
விருப்பமில்லையென்றாலும் கணவனின் வற்புறுத்தலுக்காக ஒத்துழைக்கும் மனைவியின் செயலும் ஒருவகையில் அட்ஜஸ்ட்மெண்ட் தானே.. குடும்ப அமைதிக்காக அவர்கள் சகித்துக் கொண்டு தானே ஒத்துழைக்கிறார்கள்.. அப்படி மனைவியை கட்டாயப்படுத்துவதும் ஒருவகையில் கற்பழிப்பு தானே..
நடிகைகள் நடிகர்களின் புகழும் அவர்களிடமிருக்கும் வசதியும் சாமானியர்களுக்கு ஒருவித வயிற்றெரிச்சலை உண்டாக்கி விடுகிறது. அதை உணர்ந்து கொண்ட சில தரங்கெட்ட ஊடகவாதிகள், இதை போல காதில் கேட்ட புரளிகளுக்கு கண்ணும் காதும் வைத்து, அதை ஊதி பெரிதாக்கி வயிறு வளர்க்கிறார்கள் அவ்வளவே. பொதுவாக நடிகர்கள் செய்யும் தான தர்மங்கள் வெளியில் தெரியும்.. நடிகைகள் செய்யும் நல்ல விஷயங்கள் நம் காதுகளுக்கு வருவதுமில்லை, அப்படியே காதுக்கு வந்தாலும் நமக்கு அதை பற்றிய அக்கறை எதுவுமில்லை.
சில பேருடைய வாழ்க்கை ஒற்றையடி பாதை போன்றது.. தெரியாமல் ஆசையில் ஆர்வத்தில் உள்ளே நுழைந்து பாதி தூரம் சென்ற பிறகு தான், அந்த பாதையில் அவர்களுக்கு எதிரில் காத்துக் கொண்டிருப்பது இரத்த வெறி பிடித்த மனித ஓநாய்கள் என்று புரியும்.. மீண்டும் திரும்பி ஓடி விடலாம் என்று யோசித்தால் அவர்களுக்கு பின்னே இரத்த வெறி பிடித்த நாய்கள் நூற்றுக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கும்..
இப்போது அவர்களின் நிலைமை தான் என்ன?.. ஒன்று பல்லைக் கடித்துக் கொண்டு வலியை பொறுத்துக் கொண்டு உயிர் வாழ வேண்டும்.. இல்லையென்றால் தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டும்..
இதே போன்ற சூழ்நிலைகளில் மாட்டிக் கொண்டு அவதியுறும் பெண்கள் அனைத்து துறைகளிலும் உண்டு. பொழுது விடிந்தால், ஒரு ஆணோ பெண்ணோ அந்த நாள் முடியும் வரை எத்தனையோ சமுதாய தவறுகளை சகித்துக் கொண்டு தான் வாழ்கிறார்கள். அட்ஜஸ்ட்மெண்டின் அளவுகோல் தான் மாறுபடுமே தவிர, அட்ஜஸ்ட் செய்வது மாறவே மாறாது.
என்ன செய்வது.. உயிர் வாழ வேண்டுமே.
நன்றி: ஆபுத்திரன்