பொன்னுச்சாமி தான் இவனுக்கு போன் பண்ணுனார்,
“ அவுங்க ஏரியாவில ஒரு சாவு விழுந்திருக்கு ரொம்பநாளா முடியாம இருந்த கெழவி ஒன்னு அதிகாலையில போய்ச் சேந்துருச்சு. அந்த கெழவி மகன் இந்த ஏரியாவுக்குப்புதுசு வெயிட்டான கையி நல்லா ஒனக்குத்தேரும் நீ வந்தையின்னா எல்லா ஏற்பாடுகளையும் கவனிச்சிக்க, காசு நல்லா தெம்பாவே கேளு குடுப்பாரு ஏன்னா காசுக்குக் கவலைப்படுற ஆளு இல்ல மூணாறுல எஸ்ட்டேட் எல்லாமிருக்கு அப்புறம் உன் தெறமை”
வழக்கமா எதெதுக்கோ செலவு பண்ணுவாங்க இந்த வெட்டியான் கிட்ட வந்தவன்ன எங்கருந்தோ வந்துரும் கட்டுப்பாடெல்லாம் அதுக்குன்னு நாலுபேர் இருப்பானுக அவனு சொல்லுவானுக
“ அய்யா நீங்கபாட்டுக்குக் காசு இருக்குன்னு ஒங்க இஸ்டத்துக்கு வாரி வழங்கிடாதீக அப்புறம் அதுவே பழக்கமாயிடும் இல்லாதவுககிட்ட இவன் அதையே கேட்டு வம்பு பண்ணுவான் நம்ம கொல வழக்கப்படி அஞ்சுபணம்( ஒன்னேகால் ரூவா) குடுங்க அப்புறம் வேணுமுன்னா தனியா கூப்புட்டுப்போய் குடுங்க சபையில பழக்கப்படுத்திறாதீக”
அப்புறம் எங்க தனியா குடுக்குறது சோலி முடிஞ்சிருச்சுன்னா அவனவன் கம்பி நீட்டிருவான் எவனையும் புடிக்கமுடியாது இதுதான் எப்பையும் நடக்குறது இன்னிக்கி ஆரம்பமே அமர்க்களமா இருக்கேன்னு சந்தோசப்பட்டுக்கிட்டு பொன்னுச்சாமி கிட்ட சொன்னான் முனியாண்டி
“இன்னும் அரமணி நேரத்துல அங்க இருப்பேன் ஒரு டீத்தண்ணியக் குடிச்சிப்புட்டு வந்துறேன் ஏன்னா அங்க வந்தா ஒருபயலும் நம்மலக்கவனிக்கமாட்டானுக தனித்தனியாப்போய் டீயக்குடிச்சிட்டு வந்துருவானுக காரியம் முடிய சாயங்காலம் ஆயிடும் அதுவரை ஒன்னும் கெடைக்காது”
சொன்னமாதிரி டீயக்குடிச்சிப்புட்டு எழவு விழுந்த தெருவுக்குப் போய்ச்சேந்தான் வெட்டியான் முனியாண்டி
அங்க அப்பத்தான் பந்தல் போட்டுக்குக்கிட்டு இருந்தாங்க. அந்த வீட்டுக்கு முன்னாடி நாலுபேர்தான் நின்னுக்கிட்டு இருந்தாங்க உள்ள அழுகையோ ஒப்பாரிச்சத்தமோ கேக்கல ஒரு எழவு வீடுமாதிரியே இல்ல பந்தல்தான் கொஞ்சமா சொல்லிச்சி
அவங்ககூட பொன்னுச்சாமி ஒருத்தர்கூட பேசிக்கிட்டு இருந்தார் இவனைப்பாத்ததும்
“ஏண்டா எப்ப சொல்லி எப்ப வாறது”ன்னு வெரசுனாரு
இம்புட்டுக்கும் சொல்லி அரைமணி நேரத்துல அங்க போயிருந்தான்
பொன்னுச்சாமி ஒரு புரோக்கர் அவருக்கு ஒருகால் தான் இன்னொன்னு செயற்கை எப்பையும் தன்னோட ஸ்கூட்டர் மாற்றுத்திறனாளிக்கின்னு வடிவமைப்பட்டதுல தான் வருவாரு போவாரு அதே மாதிரி அப்பையும் அந்த வண்டியிலதான் இருந்தார். அவர்கிட்ட “ ஐயா இவன் தான் வெட்டியான்” நு அறிமுகப்படுத்தி வைச்சாரு. பெறகு
“ஒனக்கு என்னான்னு ஐயாகிட்டப் பேசி காசவாங்கிக்க” நு சொல்லி இவனை ப்பாத்து ஒருமாதிரியா சிரிச்சாரு அதோட அரத்தம் இவனுக்குத்தெரியும் “ அது அவரோட கமிசனைச் சரியா அவருக்குக் குடுத்துறனும்”ன்றது
இவன் அவர்கிட்டச்சொன்னான்
“ ஐயா வெறகு எருவாட்டி மண்ணெண்ண வைக்கோல் எல்லாம் வாங்கனும் வெறகுவெல ஏறிப்போச்சு எருவாட்டி மண் கலையம் கொள்ளிச் சட்டி கெடைக்கிறதில்ல ”..னு இழுத்தான் இவன்
”அதெல்லாம் உன்கிட்ட யார் கேட்டா எவ்வளவுனு சொல்லி வாங்கிக்க “
இவன் மனக்கணக்குப்போட்டான் பொன்னுச்சாமி கமிசன் மத்ததெல்லாம் சேத்துப்பாக்கயில 2500 ஆகும்னு வந்துச்சு
அதை மனசுல வைச்சிக்கிட்டு “ ஐயா 3500 ஆகும் அதுல எல்லாமே அடங்கும் பொருளுக எரிகூலி எல்லாம் சேத்து”
அவர் ஒன்னும் பேசாம” தன்னோட மஞ்சப்பையில இருந்து கேட்டதொகைய எடுத்துக்குடுத்துட்டு
” எல்லாம் கொறையில்லாமப்பண்ணிரு” நு சொல்லி நோட்டில எழுதிக்கிட்டாரு
அப்ப பொன்னுச்சாமி சொன்னாரு
“ ஏம்பா அந்த ஏகாளியையும் குடிமகனையும் கூப்புட்டு வந்துரு அவுகளுக்கும் சேத்து காச நீயே வாங்கிக்குடுத்துரு வெவரத்தைச்சொல்லிப் போய் கூட்டியா ”
“ ஐயா அவுங்க ரெண்டுபேருக்கும் சேத்து 3000 ஆகும் குடுத்தீங்கன்னா போய் சொல்லி கூட்டியாந்து விட்டுட்டு என் சோலிய நான் பாக்கப்போவேன்”
“ சரி இந்தா நீ கேட்டது “ நு சொல்லி கேட்டதொகையக்குடுத்தாரு
“ ஐயா சாயங்காலம் 4 மணிக்குத்தான எடுக்குறது?”
“ ஆமா அதுக்குள்ள வரவேண்டியவுக வந்துருவாக சென்னையில இருந்து ராத்திரியே கெளம்பிட்டாகலாம் மதுரை வந்து இங்க வர மத்தியானமாயிரும் அவுக வந்தவன்ன எடுக்க வேண்டியதுதான்”
“ சரிங்க ஐயா உத்தரவு வாங்கிக்கிறேன்” நு சொல்லிட்டுக் கெளம்பினான் அப்ப” பொன்னுச்சாமி வா ஒன்னய நானே கூட்டிட்டுப்போறேன் வண்டியில ஏறு “நு சொன்னாரு
அதோட அர்த்தம் இவனுக்குத்தெரியும் கமிசனைக் கறாரா வாங்கத்தான் கூட்டிட்டுப்போறாருன்னு
அதேமாதிரி ஏத்திக்கொஞ்சதூரம் கூப்புட்டுப்போய் வண்டிய நிறுத்தி அவர் பங்க வாங்கிக்கிட்டு சொன்னாரு
“ ஏம்பா கூடச்சொல்லி வாங்கிருக்க வேண்டியதுதான பார்ட்டி வெயிட்டான பார்ட்டி எம்புட்டுக்கேட்டாலும் குடுக்கும்”
”அது முடிஞ்சி போச்சியா அது சரி ஏன் அங்க யாருமே இல்ல நாளுபேருதான் இருந்தாக சொந்தபந்தம் ஆருமில்லயா?
“அதுவா இவர் மூணாறுல இருக்காரு இவங்க அம்மா அதான் அந்தக்கெழவி இங்கதனியாத்தான் இருந்துச்சு என்ன பெரச்சனை யின்னு தெரியல இது இவர் வீடுதான் இங்க தனியா அந்தக்கெழவிய வைச்சி அதுக்குக் கவனிக்க அங்க இருக்குற கருப்பாயி கிட்ட பாத்துக்கச் சொல்லி அதுக்குச் சம்பளம் குடுத்து வந்தாரு அந்தக்கெழவி இந்த வீட்டுல தனியாத்தான் கெடந்துச்சு கருப்பாயிதான் எல்லாத்தையும் பாத்துக்கிச்சு “
“ அடப்பாவமே பெத்த அம்மாவ எவனாவது வயசான காலத்துல தனியா போட்டு வைச்சிருப்பானா என்னா மனுசன் யா அந்த ஆளு மனுசன்லயே சேத்தி இல்ல கொலகாரப்பாவி மொதல்லயே சொல்லிருந்தா நல்லா தீட்டிருக்கலாம்”
“ சரி விடு நீ போய் ஏகளியையும் குடிமகனையும் கூட்டியாந்து விட்டுட்டு போய் ஒன் வேலையப்பாரு” நு சொல்லி இவன எறக்கி விட்டுட்டு கெளம்பிட்டாரு
இவன் போய் அவங்களைக் கூப்புட்டு வந்து விட்டப்ப வெளியூர்ல இருந்து வரவேண்டிய ஆளுக அவுங்களும் நாலு பேர்தான் வந்திருந்தாக பொன்னுச்சாமி சொன்ன அந்தக்கருப்பாயிதான் அங்க எல்லா வேலையும் பாத்துக்கிட்டு இருந்துச்சு
குடிமகன் வந்து அவன் வேலையத்தொடங்கினான் சங்க ஊதி சேகண்டிய அடிக்கத்தொடங்கினான் ஏகாளி ஒரு ஓரமா அவன் கூட ஒக்காந்து பீடியப்பத்தவைச்சான்
அப்ப வெளியூர்ல இருந்து வந்த ரெண்டு ஆம்பளை ரெண்டு பொம்பளையும் பணம் குடுத்த அந்த ஆள்கிட்ட சண்ட போட்டுக்கிட்டு இருந்தாங்க
இவன் கருப்பாயியக் கூப்புட்டு” என்னா வெவரம்?” நு கேட்டான்
அதுக்கு கருப்பாயி சொல்லிச்சி “ அந்த அம்மா வீட்டுக்காரர் பட்டாளத்துல வேல பாத்தவராம் அவர் போய் ரொம்பநாளாச்சு அந்தஅம்மாவுக்குப் பென்சன் உண்டு அதைப்பூரம் இந்த ஆளு ஆட்டயப்போட்டுட்டு இதைச் சரியாக்கவனிக்கலனு சண்டை போடுறாங்க அவங்க அதுவும் போக அந்தக் அம்மா வைச்சிருந்த நகை எங்கனு ஒரே சண்டை”
”சரி அவங்க யாரு ஏன் சண்டை போடனும்?
“ அவுங்க ரெண்டுபேர்த்தான் இந்தஅம்மாவோட மகனுக மொத்தம் மூனு பேரு அதுல ஒருத்தர் செத்துப்போயிட்டாரு மீதி ரெண்டுபேர்தான் வந்திருக்காங்க”
“ அப்ப இவர் யாரு இவர் ஏன் இந்தஅம்மாவ இங்க வைச்சிப்பாக்குறாரு இவருக்கும் அந்த அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்?”
”அதுவா இவரை வளத்தது அந்தஅம்மாதானாம் சின்னப் பிள்ளையில இருந்து இவர் இவங்ககிட்டத்தான் வளந்தாராம் அந்தஅம்மாதான் இவரை வளத்திருக்கு அப்ப இவருக்கு ஆருமில்லையாம் இம்புட்டுக்கும் இவர் வேற சாதி அவங்க வேற சாதி ஆனாலும் அந்தஅம்மாவோட புருசன் சொல்லித்தான் வளத்திருக்கு அந்த அம்மாவோட புருசன் கூட பட்டாளத்துல இருந்தவர் மகனாம் இவரு அவர் பட்டாளத்துலயே செத்துப்போயிட்டாராம் அந்த அதிர்ச்சியில அவர் சம்சாரமும் செத்துப்போச்சாம் அதுக்கப்புறம் இவங்கதான் வளத்தாங்களாம்”
“ அதுசரி பெத்த மயனுக இருக்கையில இந்தஅம்மா ஏன் இங்க வந்து தனியாக்கெடந்துச்சு அவங்க கூட இருந்திருக்கலாம்ல”
“அந்தஅம்மாவோட மகனுக மூனுபேரும் தறுதலைங்க அவங்களுக்கு இந்த அம்மா பென்சன் பணம்தான் குறி அதைக்கேடுச்சண்டை போட்டு இது குடுக்காததுனால வெரட்டி விட்டுட்டாங்களாம் அதான் அது இங்க இவர் கூட வந்துருச்சு அதுக்கு எல்லாம் நாந்தே பாத்தேன் மாசமான எனக்கு சம்பளத்தை சரியாக்குடுத்துரும் தெனம் ஒரு இட்லி அப்புறம் ரவைக்கி கொஞ்சம் சோறு அம்புட்டுத்தேன் சாப்புடும் நாந்தேன் இட்லி வாங்கிக்குடுப்பேன் சோறு வைச்சிக்குடுப்பேன் அப்பப்ப மகனுக வந்து காசுகேட்டு சண்டை போடுவானுக கெழவி திட்டி வெரட்டி விடும்”
“ அதுசரி இதுமாதிரி மகனுகளை வெரட்டாம என்ன பண்ணு வாகலாம் “
“ அதான் இப்ப வந்து அந்தக்காசெல்லாம் என்ன ஆச்சு இங்க இருந்த வளப்புமகன் ஆட்டயப்போட்டுட்டதா சண்டை போடுறாங்க செலவு ஒன்னும் இல்லயே அதான் பிரச்சனை”
இதைக்கேட்டதும் இவனுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சி பொன்னுச்சாமி சொன்னதுக்கும் கருப்பாயி சொல்லுறதுக்கும் இடையில நிறையக்கொழப்பம் இருந்துச்சி
உண்மையிலயே இவர் அக்கரையோட கவனிச்சாரா இல்ல பென்சன் பணத்தை ஆட்டயப்போடுறதுக்குப் பாத்தாரான்னு தெரியல ”சரி நம்ம வேலையப்பாப்போம் மீதிய அப்புறம் கவனிச்சிக்கலாம்”னு சுடுகாட்டுக்குக் கெளம்பினான் இவன்
அங்கபோய் வெறகு எரு வைக்கல் எல்லாம் வாங்கி வெறக அடுக்கி பக்கத்துல மண்ணைக்கொழப்பி பொணம் வந்தா காடேத்துறமாதிரி எல்லா ஏற்பாடும் செஞ்சி வைச்சிட்டுத் திரும்ப இங்கவந்தான் இவன்
அப்ப காடேத்த எல்லா ஏற்பாடும் நடந்துட்டு இருந்துச்சு , பொணத்தக் கொண்டுபோக ஆம்புலன்ஸ் மாலையெல்லாம் போட்டு நின்னுச்சு அந்த அம்மாவை வெளிய கொண்டாந்து குளிப்பாட்டிக்கிட்டு இருந்தாங்க , இவன் வாங்கிட்டு வந்த கொள்ளிச்சட்டி எருவை குடிமகன்கிட்டக்கொடுக்க அவன் கொள்ளிச்சட்டியை ரெடிபண்ணுனான்
அப்பவும் வாக்குவாதம் நடந்துட்டு இருந்துச்சு கருப்பாயி ஓரமா நின்னு பாத்துக்கிட்டு இருந்துச்சு அதைக்கூப்புட்டு
”என்னதான் முடிவாச்சு?” நு கேட்டான் இவன்
அதுக்கு கருப்பாயிசொல்லிச்சி
“ கணக்கு வழக்கு கேட்டு பிள்ளைக சண்டை போடுறாங்க இவர் ’மொதல்ல காரியத்தை முடிச்சிட்டு அப்புறமாப் பேசலாம்’ நு இவர் சொல்றார் ஆனா அவங்க” அதை முடிக்காம பொணத்தைத்தூக்க விடமாட்டோம் கொள்ளிச்சட்டிய எடுக்கமாட்டேன்” னு சண்டை போட்ட்டுக்கிட்டு இருக்காங்க” நு சொல்லிச்சி
அப்ப இவனுக்குக்கோவம் வந்துச்சு “ என்னா பிள்ளைங்க இவனுக பெத்த அம்மாவை நல்லவிதமா காடேத்துறதை விட்டுப்புட்டு காசுகேட்டு சண்டை போடுறாங்களே அவனுகதான் அப்புடின்னா இந்த ஆளு அந்த அம்மா பிள்ளைகதான கேக்குறாங்க குடுத்துட்டு போகவேண்டியதுதான என்னா ஒலகம்டா எல்லாம் கலி முத்திருச்சி அன்பு பாசம் எல்லாம் போச்சுன்னு வருத்தப்பட்டான்
அப்ப அந்தம்மா வளத்தவர் சொன்னாரு
“ மொதல்ல காரியத்தை முடிப்போம் முடிச்சிட்டு வந்தவன்ன எல்லாத்தையும் நான் ஒப்படைக்கிறேன் அம்மா ஒடம்பு தாங்காது ஒடம்புல ஒன்னுமில்ல நல்லபடியா வழியனுப்புவோம் தயவுசெஞ்சி ஒத்துழைங்க” நு அழமாட்டாத கொறையா சொன்னாரு
அதுக்கு அவங்க சொன்னாங்க
“ இதுவரை ஒரு பைசா எங்களுக்குக் குடுக்கல அவங்களுக்குச் செலவு பெருசா ஒன்னுமில்ல. எல்லாத்தையும் நீதான் அமுக்கிட்டு இருந்த எல்லா வேலையும் முடிஞ்சபின்னாடி இம்புட்டூண்டு காசக்குடுத்து இதான் மிச்சம் நா நாங்க என்ன செய்யமுடியும் அதுனால முதல்ல ஒப்படை அப்புறம்தான் மீதி எல்லாம் “ நு கறாரா சொன்னாங்க
அப்ப அவரோட சம்சாரம் சொன்னாங்க “ ஏங்க வீணா பேசிட்டு இருக்கீங்க அவங்ககிட்ட எல்லாத்தையும் தூக்கி எறிய வேண்டியதுதான இம்புட்டுநாளு ஆத்தா இருக்காளா செத்தாளானு ஒருத்தரும் எட்டிக்கூடப்பாக்கல அதுல அப்பப்ப வந்து காசு கேட்டு சண்டைமட்டும் போட்டாங்க அவங்களுக்கு அந்தக்காசுதான் வேணும் தூக்கி எறிங்க” நு கோவமா சொன்னாங்க
அந்தம்மா மகனுகளும் ”ஆமா அதான் சொல்றாங்கல்ல தூக்கி எறிய வேண்டியதுதான?” நு சொன்னாங்க
அப்ப அந்த அம்மா வளர்ப்பு மகன் சொன்னாரு
“ சரி இம்புட்டு ஆனதுக்கு அப்புறம் சொல்லித்தான் ஆகனும் கேட்டுக்கங்க இந்தாருக்கு அந்த அம்மா எழுதிவைச்சிருக்க உயில் படிங்க அதைப்போல அந்த அம்மா என்கிட்ட வந்ததுல இருந்து வந்த பென்சன் செலவு இன்னிக்கி ஆகுற செலவு எல்லாம் இந்த நோட்டில இருக்கு ஆனா ஒன்னு அவங்களோட மொத்த பென்சன் பணமும் அப்புடியே தொடாம அக்கவுண்டுல இருக்கு. ஆன செலவு எல்லாம் நான் தான் செஞ்சேன் செய்வேன் ஏன்னா அவங்க என்னா அம்மாவுக்கும் மேல பெத்த மகன் போல எனக்குத்தாய்ப்பால் கொடுத்து வளத்த தெய்வம் அவங்க எனக்கு எல்லாமே அவங்கதான் அவங்களை எங்க வீட்டுல வந்து இருக்கச்சொன்னேன் ஆனா அவங்க” நான் யாருக்கும் பாரமா இருக்கக்கூடாது ” நு கறாரா சொல்லிட்டாங்க
நான் அவங்க காசுலதான் எல்லாம் நடக்குதுன்னு சொல்லி செலவு பண்ணிட்டு வந்தேன் கடைசியா போன வாரம் அவங்க என்னக்கூப்புட்டுசொன்னாங்க” என்னோட காசு எல்லாத்தையும் நீயே எடுத்துக்க அவனுகளுக்கு ஒரு பைசா கூட குடுக்காத” நு சொன்னாங்க
ஆனா நான் சொன்னேன் அம்மா ஒங்க காசு எனக்கு வேணாம் ஒங்க பிள்ளைங்களுக்கே குடுத்துருங்கன்னு சொன்னேன் ஆனா அதுக்கு அவுங்க ஒத்துக்கல ஒனக்கு வேணாம்னா எல்லாத்தையும் என்னையமாதிரி வயசானவங்களை வச்சிக்காப்பாத்துர முதியோர் இல்லத்துக்குக் குடுத்துரு” நு ஒரே முடிவாச்சொல்லிட்டாங்க அவங்களுக்கு நெனவு இருக்குறப்பவே அவங்க சொன்னதைச்செஞ்சிட்டு அதுக்கான ரசீதையும் கொண்டாந்து அவங்க கிட்டக் காமிச்சிட்டேன் இதோ இருக்கு நீங்களும் பாத்துக்கங்க” நு சொல்லிக்காமிச்சாரு
அப்ப அந்த அம்மாவோட மருமகளுக சொன்னாங்க “ கெழவி நல்லா வைச்சி செஞ்சிருச்சி நம்மல இதுக்கு மேலயும் இங்க இருக்குறது நமக்குத்தான் அசிங்கம் வாங்க போகலாம்” நு கத்துனாங்க
அப்ப வளப்பு மகன் சொன்னாரு
” அவங்களுக்குக் கொள்ளி வைச்சிட்டு காடேத்திட்டாவது போங்க பெத்த அம்மாவுக்கு நீங்கதான் செய்யனும் நு பரிதாபமா சொன்னாரு
“ ஒறவே வேணாமுன்னு அந்தக்கெழவி சொன்னதுக்கு அப்புறம் கொள்ளி மாத்திரம் கேக்குதோ இங்க அனாதையாத்தான கெடந்துச்சு அனாதையாவே போகட்டும்கெளம்புங்க” நு சொல்லிட்டு கோவமா கெளம்புனாங்க
அப்ப இவன் சொன்னான் “ ஐயா கொள்ளியாவது வைச்சிட்டுப்போங்க இப்புடிப்போறது பாவம்” நு
அதுக்கு அவங்க மகன் சொன்னான் “ எல்லாம் எங்களுக்குத்தெரியும் ஒன் சோலியப்பாரு ஒன் கருத்த ஆரும் இங்க கேக்கல”
அதோட வந்திருந்த மகனுக பொண்டாட்டிகளோட கெளம்பிட்டாங்க
“அதைப்பாத்துட்டு ஒலகத்துல இப்புடியும் மகனுக இருப்பானுகளா?” நு கலங்குச்சு கருப்பாயி
அப்ப இவன் சொன்னான் வளப்பு மகன்கிட்ட
“ ஐயா ஒங்களுக்குத்தான் அந்த பாக்கியம் குடுத்துவைச்சிருக்கு இந்தப்புண்ணியம் ஏழேழு சென்மத்துக்கும் ஒங்களுக்குக்கூட வரும் வாங்க வந்து கொள்ளிச்சட்டியத்தூக்குங்க” நு
அப்ப கண்ணீர்வழிய கொள்ளிச்சட்டிய தூக்கிட்டு முன்னாடி நடந்தார் அந்தப்பாக்கியம் கெடைச்ச வளப்பு மகன் அதைப் பாத்து எல்லோரும் கண்கலங்கி நின்னாங்க
நன்றி அ.முத்துவிஜயன்