இன்றைய கால கட்டத்தில் நடப்பதையும், இன்றைய இளைஞர் சமுதாயத்தில் நானும் ஒரு பங்கு வகிப்பதாலும், நான் கண்ட சிலவற்றை சொல்ல விருப்பப்படுகிறேன்.
பசங்க ஜாலியா சுத்திட்டு கல்யாணம் பண்ணிப்பாங்க, திடீர்னு எல்லா பொறுப்பும் வந்துடும். காதலிக்கும் போது காதலிச்சா மட்டும் போதும். கல்யாணத்துக்கு அப்புறம் ஊக்குல இருந்து எல்லா ப்ராப்ளமும் handle பண்ணனும். மனைவி தேவைகளை கேட்கும் போது நச்சரிக்கிற மாதிரி தோணும். குறிப்பா மனைவிக்கு சப்போர்ட் பண்ணவா அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணவானு ஆண்கள் டார்ச்சர் அனுபவிப்பார்கள்.
எங்க போனாலும் அவனுக்கு குறைகளை கேட்பது போலவே இருக்கும். எல்லோரும் ஒரு எதிர்பார்ப்போட தான் பழகுறாங்களோனு தோணும். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் யாராவது பேசுவார்களா என்று எதிர்பார்ப்பான். சமூக வலைதளங்களில் பாவம் பார்க்குற பொண்ணா தெரிஞ்சிதுனா கெட்டியா புடிச்சிப்பான். இந்த புள்ளைங்களும் கல்யாணம் தான் ஆகிவிட்டதே என்று நட்பு தொடர ஆரம்பிக்கும்.
ஏன்னா, இந்த பொண்ணு எதுவும் எதிர்பார்க்காது, யார் முக்கியம் என்று கேட்டு சண்டை போடாது, 3 நாள் பேசாம இருக்காது, உடம்பு சரி இல்லை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போ என்று கேட்காது. எனக்கு என்ன செஞ்சிருக்கனு கேட்டு நச்சரிக்காது. சண்ட போட்டாலும் அம்மா அப்பானு பஞ்சாயத்துக்கு கூட்டிட்டு போகாது. சம்பளம் எப்ப வரும்னு கேட்காது. அவன் பண்ணும் தப்புக்கு அட்வைஸ் பண்ணாது. அப்படி பண்ணுனா அவன் ஈகோ முழிச்சுக்கும்.
ஆனால் இது எல்லாவற்றையும் அவன் மனைவி செய்வாள். படுக்கையில் சரியாக இல்லை என்றால் மனைவியை டாமினேட் செய்ய முடியாது. அதனால் கிடைத்த இந்த பெண்ணை பிடித்துக் கொள்வான்.
தவறான நோக்கத்திற்காக அல்ல. அவன் பேசும் போது சிரிக்கனும், ப்ராப்ளம் கொண்டு வரக் கூடாது மெயினா அட்வைஸ் பண்ணக் கூடாது. இதற்காகவே இந்த பெண்ணை சுற்றி வருவான்.
மனைவி என்றால் எல்லாவற்றையும் கேட்பாள். விளக்கி தான் ஆக வேண்டும். ஏனென்றால் அது அவள் உரிமை. இதை புரிந்து கொண்ட ஆண் வெளியில் இன்னொரு பெண்ணைத் தேடி போக மாட்டான்.
இந்த ஒன்றை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள். ஒரு குழந்தை பெற்று ஒரு ஆணுக்கு பொறுப்பு வரும் வரையில், கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு அவனை தொந்தரவு செய்யாமல் அவன் திருமணத்திற்கு பின் சிரிக்கிறானா என்று பாருங்கள். ஆண்களுக்கு சற்று மெதுவாக தான் மெட்சுரிட்டி வரும். முந்தானைக்குள் முடிந்து வைக்க சொல்லி உங்கள் அம்மா சொன்னார் என்பதற்காக ஒரே நாளில் அவனை மாற்ற நினைப்பது எத்தனை கொடுமை?
மனைவி என்றால் கேள்விக்கு மேல் கேள்வி கேட்க தான் செய்வாள். அவள் ஒன்றும் உங்கள் காதலி இல்லை. இதை அடிப்படையில் புரிந்து கொள்ளுங்கள். திருமணம் ஆன புதிதில் இது புதிதாக தான் இருக்கும். அம்மா கட்டுப்பாடு செய்திருக்கவே மாட்டாள். மனைவி கட்டுப்பாடு விதிப்பாள். உங்களை மட்டும் நம்பி வந்தவள் நீங்கள் அருகிலே இருக்க வேண்டும் என்று தான் நினைப்பாள். நீ உன் பாட்டுக்கு காலையில 8 மணிக்கு போய்விட்டு ராத்திரி 12 மணிக்கு வந்து கதவை தட்டினால் அவள் மனநிலை எப்படி இருக்கும்?
இந்த புரிதல் இல்லாமல் தான் பல திருமணங்கள் தவறான பாதையில் சென்றுவிடுகிறது. இதனால் தான் wrong relationship உருவாகிறது.
பொறுப்பு வரவில்லை. திருமணம் என்னும் பந்தத்திற்கான பக்குவம் வரவில்லை என்றால் சிறிது காத்திருந்து உங்களை பக்குவபடுத்திக் கொண்டு திருமணம் செய்யுங்கள். உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரிக் கொட்டிக் கொள்ளாதீர்.
முக்கியமா பெற்றோர்களுக்கு : ஜாலியா சுத்திட்டு இருக்குற உங்க பசங்களுக்கு (பையனோ/ பொண்ணோ) தயவு செய்து திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடுவான் என்றெண்ணி திருமணம் செய்து வைக்காதீர். வீட்டுக்கு தாமதமாக வரும் உங்கள் குழந்தைகளிடம் அதற்கான காரணத்தை கேளுங்கள். கொஞ்சம் பொறுப்புகளை கொடுங்கள். திருமணம் என்ற ஒரே தினம் அத்தனையையும் அவர்களுக்கு ஒரே நாளில் கொடுத்து விடுவது இல்லை.
முதலில் திருமணம் பற்றி அடிப்படை அறிவாவது இருக்க வேண்டும் என்றெண்ணுகிறேன். திருமணத்திற்கு முன் போட்டோ ஷீட் பண்ணுறீங்களோ இல்லையோ திருமணத்திற்கு முன் கவுன்சிலிங் செல்லுங்கள். அல்லது அனுபவம் வாய்ந்த ஒருவரிடம் திருமணம் செய்ய போகும் இருவரும் ஒரே நேரத்தில் சென்று மணவாழ்க்கை என்பது பற்றிய நல் ஆலோசனைகளையாவது கேளுங்கள். மனைவியின் கடமை என்ன? புருஷனின் கடமை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நிறைய கவுன்சிலிங் தேவைப்படுகிறது. இன்றைய தம்பதிகளுக்கு. ஆலயங்களிலும், கோவில்களிலும், மசூதிகளிலும் திருமணத்திற்கு முன் கவுன்சிலிங் வராதவர்களுக்கு இங்கு திருமணம் நடைபெறாது என்ற அறிவிப்பு பலகையை காண ஆசைப்படுகிறேன்.
Pre shootயை விட Pre Councelling முக்கியம் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். தோல்வியான திருமணங்களின் காரணங்களை ஆராய்ந்தால் சிரிப்பு தான் வருகிறது.
ஐடியில் வேலை பார்த்த பெண் அவள், திருமணம் முடிந்து அடுத்த நாள் பற்பசையை அதிகமாக வைக்க, அந்த பையன் ஏன் இவ்வளவு விரயம் செய்கிறாய்? என்று கேட்க, உன்னை விட அதிகம் சம்பாதிக்கிறேன் கேவலம் ஒரு பேஸ்ட் பயன்படுத்த எனக்கு உரிமையில்லையா என்று தொடங்கிய சண்டை விவாகரத்தில் முடிந்தது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த இளைஞர்களை..
திருமணத்திற்கு முன் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன?
திருமணம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள், திருமணத்திற்கு பிறகு மாதம் 10 கல்யாண கார்டு வரும் அதற்கு மொய் செய்வதற்கேனும் முடியுமா என்றறிந்து திருமணம் செய்யுங்கள். வயதிற்கு வந்தால் Biologically நீங்கள் தயாராக இருக்கலாம். அந்த ஒரு தகுதியைக் கொண்டு தயவு செய்து திருமணம் செய்து கொள்ளாதீர். உங்களை நீங்கள் financially, mentally and physically தயார் படுத்திக் கொண்டால் மட்டும் திருமணம் செய்து கொள்ளுங்கள்.
குடும்ப கட்டமைப்பை சரிவர புரிந்து கொள்ளாமல் இன்றைய இளைஞர்கள் சமூகத்தை படுத்தும் பாடும், சமுதாய சீரழிவும் அப்பப்பா தாங்க முடியவில்லை. கடைசியில இந்த பாட்டால் நான் எல்லாம் அட்வைஸ் பண்ணுகின்ற அளவுக்கு ஆகிவிட்டது என்பது கொடுமையிலும் கொடுமையே.