Breaking News :

Saturday, May 03
.

காபி பொடில யானை சாணியா?


புதிய வீச்சில் அறிமுகமாகும் பொருள்களில் பல நம் நினைவுகளில் நிரந்தரமாக தங்கி விடும். புதிய பாணிகளில் ஒரு சில அப்படியே நிலைத்துவிடும்.

யானை சாண காஃபி, நறுமணத்தாலும் இன்சுவையாலும் காஃபி பிரியர்களை கட்டி வைத்துள்ளது. ஆனால், யானையின் வயிற்றுக்குள் காஃபி கொட்டைகளை அனுப்பி இது தயாரிக்கப்படும் வித்தியாசமான முறைதான் பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

யானை சாணத்திற்கும் காஃபிக்கும் என்ன தொடர்பு?

யானை சாண காஃபி என்பது, சாதாரண காஃபிதான்.

ஆனால் அது தயாரிக்கப்படும் முறை சற்று வித்தியாசமானது. இந்த காஃபி இதமானது; உயர்தர சுவை கொண்டது. இந்த உயர்தரத்தை எட்டுவதற்காக முதலாவது காஃபி கொட்டைகளை யானைக்கு உணவாக அளிக்கிறார்கள்.

யானையின் செரிமான மண்டலத்திற்குள் சென்று வந்த காஃபி கொட்டைகளை மீண்டுமாக சேகரித்து, சுத்தப்படுத்தி, உலர வைத்து உலகெங்கும் அனுப்பி வைக்கிறார்கள்.

ஐடியா கிடைத்தது எப்படி?

யானை சாண காஃபியை பிளாக் ஐவரி காஃபி என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதன் நிறுவனர் பிளேக் டின்கின். மிருகங்களின் எச்சம் அல்லது சாணம் மூலம் காஃபி கொட்டைகளை பெறும் இந்த ஐடியாவை பிளேக் டின்கின் புதிதாக பிடிக்கவில்லை.

இதற்கு முன்னரே கோபி லுவாக் என்ற பெயரில் பெரிய பூனை வகையை சேர்ந்த புனுகு பூனை காஃபி இருந்து வந்தது. அதுதான் உலகிலேயே விலையுயர்ந்த காஃபி ஆகும்.

பூனை காஃபி..

 பூனையின் செரிமான மண்டலத்திற்குப் பதிலாக பெரிய விலங்கான யானையை பயன்படுத்தலாம் என்பதே பிளேக் டின்கின் செய்த மாற்றம். யானை உருவத்தில் பெரியது. அதன் செரிமான மண்டலமும் பெரிதென்பதால் புனுகு பூனைகளை பயன்படுத்தி தயாரிப்பதைக் காட்டிலும் அதிக அளவில் சிறந்த காஃபி கொட்டைகளை தயாரிக்க முடியும் என்று யோசித்து செயல்படுத்தினார் பிளேக் டின்கின்.

சில ஆண்டுகளில் பொருளாதார ரீதியாகவும் இது சிறந்ததென்பது நிரூபணமானது.

ஏன் இவ்வளவு விலை?

யானை சாண காஃபி விலையுயர்ந்தது. ஒரு பவுண்ட் யானை சாண காஃபி கொட்டைகளை தயாரிப்பதற்கு 30 பவுண்ட் காஃபி கொட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அதாவது 13.5 கிலோ காஃபி கொட்டையிலிருந்து 450 கிராம் யானை சாண காஃபிதான் கிடைக்கும். இந்த காஃபி மிருகங்களின் வயிற்றுக்குள் நடக்கும் நொதித்தல் வினைக்கு உட்படுத்தப்படுகிறபடியால் ஏனைய காஃபி கொட்டைகளை விட விலை அதிகம்.

புனுகு பூனை காஃபி இதை விடவும் விலை அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கே கிடைக்கிறது?

உள்ளூர் காஃபி தூள் கடைகளில் போய், 'யானை சாண காஃபி தூள் இருக்கா?' என்று கேட்டால் நம்மை ஒரு மாதிரி தான் பார்ப்பார்கள்.

சாதாரண காஃபி கொட்டைகளைப் போன்று பிளாக் ஐவரி காஃபியை இருப்பு வைக்க இயலாது.

தாய்லாந்து, அபுதாபி மற்றும் மாலத்தீவுகள் போன்ற நாடுகளில் சில ஆடம்பர உணவு விடுதிகளில் இது சிறப்பாக பரிமாறப்படுகிறது.

இதை தயாரிப்பதற்கு திறமை வாய்ந்த பணியாளர்கள் வேண்டும்; இதற்கு ஒப்புக்கொள்ளும் யானை சரணாலயங்கள் கிடைக்க வேண்டும்.

ஆனாலும் பிளாக் ஐவரி காஃபி நிறுவனம் இணைய தளம் மூலம் வாங்கும் வசதியை செய்துள்ளது. சரக்குகள் உடனடியாக விற்று விடுகிறது.

எங்கே தயாராகிறது?

தாய்லாந்தில் சுரின் என்ற பகுதியிலுள்ள 27 யானைகளை, காஃபிகொட்டை தயாரிப்புக்கான பணியில் பிளாக் ஐவரி நிறுவனம் ஈடுபடுத்தியுள்ளது.

தாய் அராபிகா காஃபி கொட்டைகள் யாணை சரணாலயத்திற்குக் கொண்டு வரப்பட்டு ஒரு வித பழக்கூழில் சேர்க்கப்படுகின்றன. யானை பராமரிப்பாளர்கள் அவற்றை யானைகளுக்குக் கொடுக்கிறார்கள்.

ஏன் இவ்வளவு சுவை?

விலங்குகளின் வயிற்றில் நிகழும் நொதித்தல் வினை காஃபி கொட்டைகளின் புறச்சுவரில் உள்ள புரதத்தை உடைக்கிறது. இதனால் நறுமணமும் சுவையும் கிடைக்கிறது. சிலர், இந்த காஃபி, ஒரு சில வகை தேநீரைப்போல இதமான சுவை உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

யானைகள் ஏன்?

புனுகு பூனைகளின் சிறிய வயிறே காஃபியை இவ்வளவு சுவையுள்ளதாக்கக் கூடுமானால் மிகப்பெரிய யானையின் வயிறு மெதுவான சமைக்கும் கலன்போல காஃபி கொட்டைகளை நொதித்தலுக்கு உள்ளாக்கி எவ்வளவு சுவையுள்ளதாக காஃபி கொட்டைகளை மாற்றக்கூடும் என்று பிளேக் டின்கின் கருதினார்.

நொதித்தல் வினையின் காரணமாக காஃபி கொட்டைகள் சிறிது உடைக்கப்படும்.

நொதித்தல் மூலம் காஃபி கொட்டையிலுள்ள சர்க்கரை விடுபட்டு, அதன் கசப்புத் தன்மை மாறும். யானைகள் உண்ணும் புற்கள், இலைகள் ஆகியவை நொதித்தல் வினையின் காரணமாகவே சிதைக்கப்படுகின்றன.

அதே நொதித்தல் வினை மூலம் காஃபி கொட்டையும் பிரத்யேக சுவையை பெறுகிறது.  

Thanks to Paranji Sankar.   

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.