குடும்ப சுழலில் சிக்கி, எனை வேண்டாமென விட்டுசென்ற முன்னாள் காதலனின் திருமணத்திற்கு அண்ணன் மகளோடு சென்றிருந்தேன்..
பத்திரிக்கையை வீடுதேடி வந்து வைக்கும்போதே
“கட்டாயம் நீ வரவேண்டும். நீ வந்தால் தான் திருமணமே நடக்கும்..”என திரும்பத்திரும்ப
சொல்லி சென்றிருந்தான்..
நான் சென்ற பின் திருமணம் நடக்க “நானென்ன மாங்கல்யத்தை தொட்டுக்கொடுக்க செல்பவளா? இல்லை மணமகளா? இவ்விரண்டு பாக்கியமும் எனக்கு கிட்டாததே..” என்றெண்ணி எனக்குள்ளேயே விரக்தியாய் சிரித்துக்கொண்டு தலையை தலையை அசைத்து வைத்தேன்..
என் முகபாவனையில் எதையோ உணர்ந்திருப்பான் போலும்!
முன்னாள் காதலனின் திருமணத்திற்கு நான் செல்லமாட்டேன் என்று அவனே யூகித்திருப்பானோ! என்னவோ!
ஒருநாள் அலுவலகம் தேடிவந்தான் ஒரு புடவையை வாங்கிக்கொண்டு..
“எனக்கெதற்கு?..” என நான் கேள்வியாய் பார்க்க,
அப்பொழுதும் “நீ வரும்போது கட்டாயம் இந்த புடவையை அணிந்து கொண்டு வா.. நீ வந்தால் தான் என் திருமணம் நடக்கும்…” என்று இரண்டாம் முறையாக அதையே சொல்லி சென்றான்..
“புடவையெல்லாம் வாங்கி கொடுத்திருக்கிறானே! அதற்காகவாவது திருமணத்திற்கு செல்லலாம்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டாலும்,
“அவனை மணக்கோலத்தில் காணவேண்டும்..” என்ற ஆவலில் போகலாம் என்று முடிவெடுத்தேன்..
பத்திரிக்கையை அவன் கொடுத்தபோது வாங்கியதோடு சரி..
அதை கவனித்து கூட பார்க்கவில்லை..
உள்ளுக்குள் அப்படியொரு வலி..
நான் நேசித்த உறவல்லவா..
வேறு ஒருத்திக்கு அது கிடைக்கப்ப்போகிறதே என்று உள்ளுக்குள் விவரிக்க முடியாத வலி.. இந்த வலி தேவையற்றது தான்.. விக்கித்து நின்றாலுமே
மறந்தும் எதையும்
வெளிக்காட்டிக்கொள்ளவில்லை..
போகலாமென்ற முடிவோடு
பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தால்! எனக்குள் இடியை இறக்கியது போல் மணமகள் பெயரிருக்கும் இடத்தில் எனது பெயர்..
இது சாத்தியமில்லை தான்..
ஏற்கனவே மணமுடித்தவளின் பெயர் எப்படி அதிலிருக்கும்?
ஒருவேளை தான் மணமுடித்த அன்றே விதவையான கதை அவனுக்கும் தெரியுமோ! என்று எனக்குள் நானே பலபல கதைகளை ஓட்டிப்பார்த்து தோற்றும் போனேன்..
அவ்வுண்மை
அவனுக்கு கிஞ்சித்தும்
தெரியாதது..
மணமேடை விட்டு புகுந்தகம் சென்ற அன்றே கணவனை காலனுக்கு கொடுத்துவிட்டேன் என்று அன்றைக்கே பிறந்தகம் அனுப்பப்பட்டவள் நான்..
உடன்பிறந்தவனும் அவன் மனையாளும்,
என்னை அமங்கலியாய் பார்க்க சகிக்காமல் எனக்கு பொட்டிட்டு,
பூச்சூடி ரசிக்க,
நான் அவர்கள் பிள்ளைகளை என் பிள்ளைகளாக்கி வளர்க்கிறேன்..
அவனறியாத என்கதையில்,
எனது பெயர் எப்படி
அவன் கதை நாயகியாகும்?
இருந்தும் மனம் கேட்காமல் அவனிடமே
மணமகள் பெயரை பற்றி விசாரிக்க,
“உனை மறக்கமுடியாமல் தான் உனது பெயரிலேயே பெண் தேடி திருமணம் செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு போனை சட்டென்று வைத்துவிட்டான்..
மனம் ஊமையாய் அழுதது..
என்னால் இப்போது
அதை மட்டும் தானே
செய்யவியழும்…
அனைத்தையும் இழந்தபிறகு
எனக்குள் ஏனிந்த பேராசை?
இது நடவாதது தானே!
‘எனக்கே எனக்கென்று
என் அண்ணன் பிள்ளைகள் இருக்கிறார்கள்..
இனி அவர்கள் மட்டும் போதும்..’ என்ற முடிவோடு, அவன் சொன்னது போல
கட்டாயம் அவன் திருமணத்திற்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்தேன்..
காலை 9.10-ற்க்கு முகூர்த்தத்திற்கு
நான் ஏதோ எனக்கே திருமணம் என்பது போல 6 மணிக்கே அவன் கொடுத்து சென்ற புடவையை கட்டிக்கொண்டு, அண்ணன் மகளையும் கைகளில் பிடித்துக்கொண்டு சென்றேன்..
அண்ணி எப்போதையும் விட இன்று எனக்கு கொஞ்சம் அதிகமாகவே
பூச்சூடி நகையிட்டு
அனுப்பி வைத்தாள்..
எனக்கு அவளிடத்தில் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை.. அவள் என்னிடத்தில் எப்போதுமே இப்படித்தான்.. யார் என்ன சொன்னாலும் என்னை எவரிடத்திலும் விட்டுக்கொடுக்காதவள்..
பிள்ளையோடு மண்டபவாயிலில் போய் நிற்கும் வரைக்கும் ஒன்றும் தெரியவில்லை..
அதன்பிறகு தான் உள்ளுக்குள் தர்மசங்கடமாய் போனது..
அவன் குடும்பத்தில்
அத்தனை பேருக்குமே
எங்கள் காதல் விவகாரம் தெரியும்..
தேவையில்லாமல் வந்துவிட்டோமோ! என்கிற நினைப்பில் எதனையும் கவனிக்காது நான்
திரும்பிச்செல்ல முயல,
அவனை பெற்றவர்கள்
என்னை கவனித்துவிட்டு
அழைத்துவிட்டனர்..
இனி சென்றால் நன்றாயிருக்காது
என்று நினைத்து பிள்ளையை தூக்கிக்கொண்டு உள்ளே செல்ல,
இருவரும் என்னை அத்தனை அன்பாய் வரவேற்றனர்.. ஒருவேளை
என்னை மறந்திருப்பார்களாய்
இருக்கும்..
உள்ளே சென்று மேடையை விட்டு தூரமாகவே நான் பிள்ளையோடு அமர்ந்து கொண்டேன்..
அவளிடத்தில் பேசியபடி நானிருந்தாலும் கண்கள் என்னவோ அவனை மட்டுமே தேடியது..
இன்னும் சற்றுநேரத்தில் மணக்கோலம் காண இருப்பவன் எவனாவது தனது முன்னால் காதலியே தேடி வருவானா என்ன?
ஆனால் அவன் வந்தான்..
எனை பார்த்ததும் அத்தனை பற்களையும் மொத்தமாய் விரித்து,
கண்களில் ஆனந்த கூத்தாட வந்து நின்றவனை, சங்கடத்துடனே எதிர்கொண்டு அவனை விழிகளில் நிரப்பிக்கொண்டேன்..
இன்னும் சற்றுநேரத்தில் அவன் வேறொருத்திக்கு சொந்தமாகிவிடுவானே.. இப்போதே மொத்தமாய் நிரப்பிக்கொள்வோம் என்று நானிருக்க, அவன் ஏதேதோ பேசினான், சிரித்தான், இடையிடையே கண்கள் கூட கலங்கினான்..
என்ன எனக்குத்தான் எதுவுமே மனதிற்குள் பதியவேயில்லை.. அவன் முகத்தை மட்டுமே அத்தனை ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருந்தேன்..
நேரமானதும் என்னை அவன் உறவுக்கார பெண்ணொருத்தியிடம் கவனிக்க சொல்லிவிட்டு அவன் செல்ல, அவள் என்னை அத்தனை பாசமாய் கவனித்துக்கொண்டாள்..
எங்களை அழைத்து சென்று உணவெல்லாம் பரிமாறினாள்..
நேரமும் ஓடியது..
இதற்கிடையில் அவனின் மூத்த தங்கை என்னை பார்க்கும்போதெல்லாம் முறைத்துக்கொண்டே போனாள்.. அவளுக்கு என்னை நினைவிருக்கும் என நான் நினைத்துக்கொண்டேன்..
நியாயமாய் பார்த்தால் நானும் தான் அவளை முறைக்க வேண்டும்.. அவளுக்கு மணமுடிக்கவேண்டிய கட்டாயத்தால் தான் என்னை இப்போது மணமுடிக்க முடியாது என்று என்னை விட்டுசென்றான்..
அவன் வேண்டாம் என்றதும் தான் அழுது கரைந்து ஓய்ந்து, வீட்டில் பார்த்துவைத்த ஒரேநாளில் காலனுக்கு பறிகொடுத்த கணவனை மணமுடித்துக்கொண்டேன்..
நானே எதையும் நினைக்காமல் இயல்பாய் வந்திருக்க, இவள் மட்டும் முறைத்துக்கொண்டே திரிகிறாள்..
சரி இன்னும் சிறிதுநேரம் தானே என்று முன்பைப் போலவே மணமேடைக்கு தூரமாய் அமர்ந்துகொண்டேன்.. வந்ததில் இருந்து என் பெயர் கொண்ட மணப்பெண்ணை நான் பார்க்கவே இல்லை..
அவளது புகைப்படத்தை கூட வெளியில் இருந்த பேனரில் கவனிக்கவில்லை..
பேனரையே தான் இருந்த சூழலில் கவனிக்காத போது புகைப்படத்தை மட்டும் எப்படி கவனிப்பது?
நேரம் செல்ல செல்ல, ஏதேதோ சம்பிரதாயங்கள் நடந்தது.. இடையிடையே அவனின் உறவுக்கார பெண் என்னிடம் நிறைய பேரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தி சென்றாள்..
நானும் மரியாதைக்காக சிரித்து பேசி அவர்களை அனுப்பிவைக்க, எதேச்சையாய் மணமேடையை பார்த்தால் அவன் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான்..
அவனின் ஒற்றை பார்வையில் இத்தனை வருடமாய் எனக்குள்ளேயே புதைந்துபோன காதல் இப்போது வீருகொண்டெழும் புற்றீசலாய் வெளிக்கிளம்புகிறது..
இதயமோ தடக்தடக்கென்று அடித்துக்கொள்கிறது..
இது தவறு.
அவன் தன்னை சாதாரணமாய் கூட பார்க்கலாம்..
நாம் அப்படியெல்லாம் நினைக்கக்கூடாது என்றெண்ணி போனையும், பிள்ளையையும் தூக்கிக்கொண்டு அவன் கண்ணில் படாத பகுதியாய் பார்த்து அமர்ந்துகொண்டேன்..
அவனுக்கு மட்டுமல்ல,
இப்போது தன்னாலுமே அவனை பார்க்க முடியவில்லை..
ஒருபக்கம் புகைமூட்டம்.
மற்றொரு புறமோ உறவு கூட்டம்..
அத்தனை பேருமாய் மேடையை
மறைத்திருக்க, நிம்மதிப் பெருமூச்சோடு நானிருந்தேன்.. பெண்ணை அழைத்து வர சொல்லி ஐயர் சொல்லியிருப்பார் போலும்
சற்று நேரத்தில் அனைவரிடத்திலும் ஏதோவொரு சலசலப்பு..
இப்போதாவது அவளை பார்த்துவிடலாம் என்று மறுபடியும் முன்னே இருந்த இடத்தில் அமர்ந்துகொண்டேன்.. பெண்ணை எப்போது அழைத்துவருவார்கள் என்று நானிருக்க மொத்த கூட்டமும் விலகி நின்றிருந்தது..
அனைவரையும் விலக்கிக்கொண்டு அவனை பெற்றவளோடு என் அண்ணனின் மனைவி வந்துகொண்டிருந்தாள்.. அவளுடனே அவளின் மகன்..
அவ்விருவரையும் பார்த்து நான் ஆச்சர்யமாய் எழுந்து நிற்க, என் அருகில் இருந்த என் அண்ணனின் பெண்மகவு தமையனோடு போய் ஒட்டிக்கொண்டது…
நான் எதுவும் புரியாமல் நின்ற வேலையிலேயே வந்து என்முன் நின்றவள், என் கைப்பற்றி இழுத்து செல்ல, மொத்த கூட்டத்திலும் அப்படியொரு ஆர்ப்பரிப்பு…
“அண்ணி.. அண்ணி..” என்று நான் அழைத்ததெல்லாம் மற்றவர்களின் ஆர்பரிப்பில் காணாமல் தான் போனது..
எனை அழைத்துக்கொண்டு மேடையேறியவள், அவனருகில் என்னை அமரச்சொல்ல, என் தலை முடியாது என்று இடதும் வலதுமாய் ஆடி சண்டித்தனம் செய்தது..
ஆனால் எதையுமே யாரும் பெரிதாகவெல்லாம் எடுத்துக்கொள்ளவே இல்லை.. அத்தனை பேர் முகங்களிலும் அப்படியொரு ஆவல்..
மேடையில் நின்றபடி ஒவ்வொரு முகமாய் பார்க்க, இதுவரை என் விழிகளில் தென்படாத என் உறவுகள் எல்லாம் ஒவ்வொன்றாய் என் கண்ணில் விழுகின்றனர்..
என்ன மாதிரியான கனவிது?
ஒருவேளை வலியெடுத்தால் களைந்துவிடும் தானே என்று
எனை நானே கிள்ளிப்பார்க்க, என் செயலைக்கண்டு எல்லோர் இதழ்களிலும் புன்னகை மட்டுமே..
என்னால் ஆனமட்டும் கிள்ளியதில் வலி எடுத்தது தான் மிச்சம்..
அப்படியெனில் இது அத்தனையும் உண்மையாகவே நடக்கிறதா என்று நடுங்கும் உடலோடும், கலங்கும் விழியோடும் அவனைப் பார்க்க,
அருகில் இருந்த இடத்தை தட்டிக்காட்டி சிரித்தபடியே அமரச்சொல்கிறான்…
ஏதோ மந்திரத்திற்கு
கட்டுண்டவளைப் போல அவனை பார்த்தபடியே நான் அமர,
அவனே எனக்கு மாலையிட்டு,
அவன் கரம் கொண்டு என் கண்ணீரை துடைத்தும் விடுகிறான்..
என்ன மாதிரியான உணர்விது?
ஒருவேளை என்வாழ்வில்
இடைப்பட்ட கருப்புதினங்களை எல்லாம் நான் பாராமல்,
முன்பே இதெல்லாம் நடந்திருந்தால்
இன்றையதினம் போல் என் மனம்
நிறைவாய் நிறைந்திருக்காதோ!
இத்தனை மகிழ்வாய் இருந்திருக்காதோ! என்று நினைத்த மறுகணம்,
கெட்டிமேளம் கெட்டிமேளம் என்கின்ற
சத்தத்துடன்,
கெட்டிமேளம் நாதஸ்வரம் முழங்க அவன் கரத்தால் எனக்கு மங்கலநாணை பூட்டியிருந்தான்
என் முன்னாள் காதலன்…
இல்லை இல்லை
எந்நாளும் எனையாளும் காதலன்..
இப்போது புரிகிறது,
அவன் ஏன் "நீ வந்தால் தான் என் திருமணம் நடக்கும்" என திரும்பத்திரும்ப சொன்னது.
(முழுக்க முழுக்க கற்பனை கதை மட்டுமே)