புதிய பைக்குகளை வாங்கும்போது, அதன் நிறத்திற்கு அனைவருமே அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். எந்த நிறம் தங்களுக்கு ராசியானதோ, அந்த நிறத்தில் பைக்குகளை வாங்குவதுதான் இங்கு பலரின் விருப்பமாக உள்ளது. ராசியில்லாதவை என கருதப்படும் நிறத்தில் பைக்குகளை வாங்குவதை பலரும் தவிர்த்து விடுகின்றனர்.
ராசியில்லாத நிறத்தில் பைக்கை வாங்கி, விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் இங்கு பலரிடம் காணப்படுகிறது. அத்துடன் ராசியில்லாத நிறத்தில் பைக்கை வாங்கினால், அது அடிக்கடி பழுதாகி அதிக செலவு வைத்து விடும் என்றும் கூட பலர் நினைக்கின்றனர். இதன் காரணமாக பைக்குகளின் நிறம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஒவ்வொருவரும் குறிப்பிட்ட ஒரு சில நிறங்களை தங்களுக்கு ராசியானவை என கருதுகின்றனர். அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒரு சில நிறங்களை தங்களுக்கு ராசியில்லாதவை என நினைக்கின்றனர். ஆனால் புதிய பைக் வாங்குபவர்கள் அனைவராலும் ராசியில்லாதது என கட்டம் கட்டப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு நிறம் இருக்கிறது.
பச்சைதான் அந்த நிறம். ஒரு காலத்தில் பச்சை நிறத்தில் யாருமே புதிய பைக்குகளை வாங்க மாட்டார்கள். பச்சை நிறம் பைக்குகளுக்கு ஆபத்தானது என்பது பலரின் நம்பிக்கையாக இருந்து வந்தது. பச்சை நிற பைக்குகளை ஓட்டினால் விபத்தில் சிக்கி படுகாயமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டு விடும் என்று பலரும் நம்பி கொண்டிருந்தனர்.
இப்படி நடப்பதை யாருமே விரும்ப மாட்டார்கள் அல்லவா? எனவே பச்சை நிறத்தில் பைக்குகளை வாங்குவதற்கு பலரும் தயக்கம் காட்டினர். இதன் காரணமாக பைக் உற்பத்தி நிறுவனங்களும் பச்சை நிறத்தில் பைக்குகளை தயாரிப்பதை தவிர்த்து வந்தன. இதன் விளைவாக பச்சை நிற பைக்குகள் பிரபலமில்லாதவையாக மாறின.
சரி, பச்சை நிறத்தை ஏன் இப்படி அனைவரும் வெறுத்து ஒதுக்கினர் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இதற்கு இரண்டாம் உலகப்போர்தான் முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் பலரும் பச்சை நிற பைக்குகளை பயன்படுத்தினர். ராணுவ வீரர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக செல்வதற்கு இந்த பைக்குகள் பயன்படுத்தப்பட்டன.
அத்துடன் தகவல் பரிமாற்றத்திற்கும் இந்த பைக்குகள் உதவி செய்தன. ஆனால் பச்சை நிற பைக்குகளை ஓட்டுபவர்கள் ராணுவ வீரர்கள் என்பது எதிரிகளால் எளிதாக அடையாளம் காணப்பட்டது. இதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக்கு ராணுவ வீரர்கள் எளிதாக இலக்காயினர்.
இதுபோன்ற சம்பவங்களால்தான் பச்சை நிற பைக்குகள் துரதிருஷ்டவசமானவை என்ற எண்ணம் மக்கள் மனதில் உருவாகி விட்டது.
இதற்கிடையே இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, போரில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான பச்சை நிற பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன. உபரியாக இருந்த பைக்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் அவை கடினமான நிலப்பரப்புகளில் ஓட்டப்பட்டவை என்பதாலும், போரில் பயன்படுத்தப்பட்டவை என்பதாலும் பெரிய அளவில் சேதமடைந்திருந்தன. அவை நல்ல கண்டிஷனில் இல்லை.
இதன் காரணமாக அவை எளிதில் பழுதாக கூடியவையாக இருந்தன. அத்துடன் போரில் பயன்படுத்தப்பட்ட பைக்குகள் என்பதால், அதை ஓட்டுபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயங்களும் அதிகமாக இருந்தது. அதற்கு ஏற்றபடி அந்த பைக்குகளை ஓட்டியவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவங்களும் அதிகமாக நடைபெற்றன.
இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து பச்சை நிற பைக்குகள் அதிர்ஷ்டம் இல்லாதவை என்ற எண்ணத்தை அனைவரின் மனதிலும் ஏற்படுத்தி விட்டன. இதனாலேயே பச்சை நிற பைக்குகளை வாங்குவதை பலரும் தவிர்த்து வந்தனர். ஆனால் பச்சை நிறம் துரதிருஷ்டவசமானது என்பது மக்களிடம் காணப்படும் மூட நம்பிக்கை மட்டுமே.
இதே பச்சை நிறம்தான் தற்போது கவாஸாகி நிறுவனத்தின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. அனைவரும் வெறுத்து ஒதுக்குவதை பார்த்த கவாஸாகி நிறுவனம் தனது பைக்குகளை பச்சை நிறத்தில் வடிவமைக்க தொடங்கியது. பச்சை நிறத்தை பயன்படுத்த பலரும் தயங்கிதால், ரேஸ் டிராக்குகளில் கவாஸாகி பைக்குகள் தனித்து தெரிந்தன.
மூட நம்பிக்கையால் வெறுத்து ஒதுக்கப்பட்ட பச்சை நிறத்தை பயன்படுத்தி கொண்டு கவாஸாகி நிறுவனம் தற்போது வெகுவாக பிரபலமடைந்து விட்டது. ஏற்கனவே கூறியபடி இன்று கவாஸாகி நிறுவனத்தின் அடையாளங்களில் ஒன்றாகவே பச்சை நிறம் மாறி விட்டது. கவாஸாகி மட்டுமல்லாது இன்னும் பல்வேறு நிறுவனங்களும் தற்போது பச்சை நிறத்தை தங்கள் பைக்குகளில் பயன்படுத்தி வருகின்றன.
பச்சை நிற பைக்குகள் குறித்து தற்போது மக்கள் ஓரளவிற்கு விழிப்புணர்வு அடைந்திருப்பதுதான் இதற்கு காரணம். அதாவது பச்சை நிற பைக்குகளால் அசம்பாவிதம் ஏற்படும் என்பது வெறும் மூட நம்பிக்கை மட்டுமே என்பதை பலரும் உணர தொடங்கி விட்டனர். இருப்பினும் இன்னமும் கூட ஒரு சிலர் பச்சை நிற பைக்குகளை தவிர்த்து கொண்டுதான் இருக்கின்றனர் என்பதையும் இங்கே மறுக்க முடியாது.
தெளிவாக சொல்வதென்றால், முன்பு போல அனைவரும் பச்சை நிற பைக்குகளை தற்போது வெறுத்து ஒதுக்குவதில்லை. அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்துள்ளது. இந்தியாவின் கிராம பகுதிகளில் மட்டுமே மூட நம்பிக்கைகள் உள்ளன என நீங்கள் இதுவரை நினைத்து கொண்டிருந்திருக்கலாம். ஆனால் உலகம் முழுவதுமே மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம்.
பைக்குகள் தொடர்பாக காணப்படும் மூட நம்பிக்கைகள் பச்சை நிறத்துடன் முடிவடைந்து விடுவதில்லை. பைக்குகளின் கீழே மணியை கட்டி வைப்பதையும் ஒரு சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த மணியை சொந்த பணத்தில் வாங்குவதற்கு பதிலாக, யாரிடமாவது இருந்து அன்பளிப்பாக பெற வேண்டுமாம். இப்படி செய்தால் தீய சக்திகள் நெருங்காது என பலரும் நம்புகின்றனர். ஆனால் இதுவும் ஒரு மூட நம்பிக்கைதான்.