ஒரு நாள் ஒரு துறவி அரண்மனைக்கு வந்தார்.
அவரிடமே இந்தக் கேள்வியை கேட்டார் ராஜா.
துறவி சொன்ன பதில் அவரவர்கள் இடத்தில் அவரவர்கள் சிறப்பாக இருக்கலாம்.
பதில் புரியவில்லை என்றார் ராஜா.
என்னுடன் வா புரிய வைக்கிறேன் என்ற துறவி ராஜாவை அழைத்து கொண்டு இன்னொரு தேசத்துக்கு போனார்.
அங்கே அரண்மனையிலே ஒரு சுயம்வரம் நடந்து கொண்டிருந்தது. அரசகுமாரர்கள் பலபேர் அங்கே வந்திருந்தார்கள்.
வேடிக்கை பார்க்கிற கூட்டமும் இருந்தது.
இவர்கள் இரண்டு பேரும் கூட்டத்தோடு கூட்டமாக நின்றார்கள்.
இவர்கள் பக்கத்திலே ஒரு இளம் சன்னியாசி பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருந்தார்.
அரசகுமாரி கையில் மாலையோடு வந்து அரசகுமாரர்கள் யாரையும் எனக்கு பிடிக்கவில்லை என இளம் சன்னியாசி கழுத்தில் மாலையை போட்டுவிட்டாள்.
உடனே அவர் என்ன இது நான் சன்னியாசி எனக்கு திருமணமா? என்று சொல்லி மாலையை கழட்டி தூக்கி எறிந்து விட்டார்.
அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் என் மகளின் அழகை பாருங்கள்.
இப்போது பாதி ராஜ்ஜியம் உங்களுக்கு தருகிறேன்.
எனக்கு பிறகு முழு ராஜ்யமும் உங்களுக்குத்தான் என்றார் அந்த நாட்டு அரசர்.
அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்னை விடுங்கள் என்று சொல்லி இளம் சன்னியாசி அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்.
அரசகுமாரியும் பின்னால் ஓட அவர்கள் பின்னாலேயே ராஜாவும் துறவியும் ஓடிவந்தார்கள்.
இளம் சன்னியாசி எங்கேயோ ஓடிப் போய் மறைந்து கொண்டார்.
அரசகுமாரி ஒன்றும் புரியாமல் ஒரு மரத்தடியில் அழுதுகொண்டிருந்தாள். இருட்டிவிட்டது.
அம்மா கவலைப்படாதே நாளைக்கு காலையிலே பொழுது விடியட்டும். உன்னை உன்னுடைய அரண்மனையில் கொண்டு விடுகிறோம் என்றனர் ராஜாவும் துறவியும்.
மரத்தடியிலே இவர்கள் மூன்று பேரும் ஒதுங்கி இருந்ததை அந்த மரத்தில் இருந்த இரண்டு புறாக்களும் அதன் மூன்று குஞ்சுகளும் பார்த்தன. வந்தவர்களுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டாமா? என்று சொல்லி ஆண்புறா பறந்துபோய் எங்கிருந்தோ சுள்ளிகளையும் நெருப்பையும் கொண்டு வந்து மரத்தடியில் போட்டது.
ஐந்து புறாக்களும் அவர்கள் முன் வந்து நீங்கள் எங்களை சாப்பிட்டு உங்கள் பசியை போக்கிக் கொள்ளுங்கள் என்றன.
இப்போது அந்த துறவி ராஜாவிடம் சொன்னார் தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது பிறருக்கு உதவி செய்யும் இல்லறத்தான் சிறந்தவன் என்பதற்கு இந்தப் புறாக்கள் உதாரணம்.
துறவி என்றால் எதையும் உதறித் தள்ளுவான் என்பதற்கு அந்த இளம் சந்நியாசி உதாரணம்.
அதனாலேதான் அவரவர் அவரவர் இடத்திலே சிறப்பாக இருக்கலாம் என்றேன்.
இது சுவாமி விவேகானந்தர் சொன்ன கதை.
அதனால் இல்லறம் துறவறம் என்பது முக்கியமில்லை.
இல்லறத்தில் இருந்து கொண்டு துறவறத்தை நினைக்கக்கூடாது.
துறவறத்திலிருந்து கொண்டு இல்லற தர்மத்தை கடைப் பிடிக்கப் போகிறேன் என்று சொல்லக்கூடாது.
அவரவர் கொள்கைகளை அவரவர் முறையாக கடைபிடித்தால் அவரவர் இடத்தில் அவரவர் சிறப்பாக இருக்கலாம்.