Breaking News :

Saturday, May 03
.

ஹோமம் செய்வதா? வேண்டாமா?


பரிகாரம் செய்ய,பக்தரின் கேள்வி பெரியவாளிடம்.
பரம்பரை இழிகுணத்தை விட்டுவிட்டு, நற்செயல்களை செய்யச் சொன்ன பெரியவா.

ஒரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன.குடும்பத் தலைவர், ஒரு ஜோசியரிடம் ஜாதகத்தைக் கொடுத்து விவரம் கேட்டார்

எக்கச்சக்கமா, க்ரஹ தோஷம். நவக்ரஹ ஹோமம் பெரிய அளவில் செய்வதுதான் பரிஹாரம்.

பெரியவாளுடைய, அனுமதியைப் பெறுவதற்காக வந்தார், பக்தர்.

"ஜோஸ்யர் சொன்னபடி நவக்ரஹ ஹோமம் செய்தால், நல்லது ஏற்படாவிட்டாலும், நிச்சயம் கெடுதல் ஏற்படாது" என்று சிந்தனைக்குரிய ஒரு .பதிலைக் கூறிவிட்டார்கள், பெரியவா.

பக்தருக்குக் குழப்பம். . ஹோமம் செய்வதா ? வேண்டாமா?.. பெரியவாளை மறுபடியும் கேட்கலாம் என்றால், பெரியவா அங்கே இருந்தால் தானே? பதில் சொன்னவுடனேயே, சடக்கென்று புறப்பட்டு, அந்த இடத்தை விட்டுப் போய் விட்டார்கள்

பக்தர், பெரியவாளின் கைங்கர்யபரர்களிடம், 'பெரியவா சரியான முடிவு சொல்லவில்லையே.!" என்று புலம்பி நச்சரித்தார் அவருடைய தொல்லை தாங்காமல், ஒரு சிஷ்யர் பெரியவாளிடம் போய், பக்தரின் ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

பெரியவாள் சொன்ன பதில்....

1) எல்லோருக்கும் அவரவர்களுக்கான கடமைகள் உண்டு. இவன் வீட்டில் தாத்தா,பாட்டி இருக்கிறார்கள். அவர்களை சரிவரக் கவனித்துப் போஷிக்க வேண்டும்.அது முக்யமான தர்மம்.

2) வீட்டு வாசலுக்கு வந்து பிச்சை கேட்பவர்களுக்கு, கூடுமானவரை தர்மம் செய்யணும்.

3) தாகத்துடன் வருபவர்களுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

4) ஏழைகளையும்,சமையற்காரர்களையும், தொழிலாளிகளையும் நிந்தனை செய்யக்கூடாது. அவர்களிடம் பிரியமாக நடக்கணும்

இதிலிருந்து, அந்தக் குடும்பத் தலைவர், இந்த நற்செயல்களைச் செய்யவில்லை என்பதை ஊகித்து அறியமுடிந்தது.அந்த சீடர்,பக்தரிடம் போய், "உங்கள் கடமைகளையெல்லாம் தவறாமல் செய்து வந்தாலே போதும், குடும்ப கஷ்டமெல்லாம் போய்விடும். ஹோமம் செய்ய வேண்டிய தேவையிருக்காது" என்று பக்குவமாகச் சொன்னார்.

பக்தருக்கு, நெஞ்சில் முள் குத்திற்று, பெரியவாளிடம் மறுபடியும் வந்தார். தன் துஷ்டதனங்களை ஒப்புக் கொண்டார்

"பரம்பரையாக வந்தது. பெரியவா அனுக்ரஹத்தாலே, நல்லவழிக்குத் திரும்பணும், சரணாகதி பண்றேன்.

பெரியவாள் மனசு உருகிப் போய் விட்டது.

"க்ஷேமமா இரு" என்றார்கள் பெரியவா.

அது... சரி.... அந்தக் குடும்பத்தின் பரம்பரை இழி குணங்கள் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?

ஸ்வாமியே சரணம்.!


கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-61
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.