Breaking News :

Thursday, May 01
.

‘ஓடிப்போகும்’ திருமணங்கள் ஏன்?


 பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக ஓடிப்போய் திருமணம் செய்வது ஒரு பேஷன்போல் ஆகிவிட்டது. அதன் பின்விளைவுகள் தெரியாமல் இளமை வேகத்தில், ‘அதையும் அனுபவித்து பார்த்துவிடலாமே!’ என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படத்தான் செய்கிறது.

ஆனால் பெற்று வளர்த்த பெற்றோரை, பிள்ளைகள் பெருமைப்படுத்த வேண்டிய முக்கிய தருணமாக திருமணத்தை சமூகம் பார்க்கிறது. தனது மகனோ, மகளோ தனக்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ளும்போது, தமது கௌரவத்திற்குரிய வாய்ப்பு அதன் மூலம் பறிபோகிறது என்று தான் பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகிறார்கள்.

சரி.. இளைஞர்கள் பெற்றோருக்கு தெரியாமல் ஓடிப் போய் திருமணம் செய்துகொள்ள என்ன காரணம்? “எங்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு பிரச்சினைகள் வலுப்பதால்தான், வீட்டைவிட்டு ஓடிப்போகிறோம். என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறும்போது, தப்பித்து செல்வது மட்டுமே தெரிந்த வழியாக இருக்கிறது.

அதனால்தான் அந்த வழியை தேர்வு செய்கிறோம்” என்கிறார்கள், ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட ஜோடிகள். ஆனால் இதில் இருக்கும் உண்மை ஒன்றை ஓடிப் போகும் ஜோடிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். பெற்றோர்களையே சமாளிக்கத் தெரியாமல் தப்பி ஓடும் இவர்கள், எதிர்காலத்தில் இந்த சமூகத்தை எப்படி எதிர் கொள்வார்கள்?

எதிர்காலத்தில் இவர்கள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஓடி ஒளியத்தானே விரும்புவார்கள். பிரச்சினைகளை எதிர்கொண்டு வெல்லும் வெற்றிகரமான தம்பதிகளாக இவர்களால் மாற முடியாதே! சமூகம் என்பது பல்வேறு மனிதர்களின் தொகுப்பு.

இந்த சமூகத்தின் சூழ்நிலைகளும், எண்ண ஓட்டங்களும், கருத்துக்களும் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். திருமணத்தை அன்றும் இன்றும் இந்த சமூகம் ஒரே மாதிரிதான் பார்க்கிறது. தங்கள் மரபுரீதியாகத்தான் திருமணம் நடக்கவேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது.

பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைப்பதை பெற்றோர்கள் கடமையாக மட்டுமல்ல உரிமையாகவும் எடுத்துக்கொள்கிறார்கள். நேற்று வந்த காதல் அந்த உரிமையை அவர்களிடமிருந்து பறித்துவிடுவதாக கருதுகிறார்கள். திருமணக் கனவு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது பெற்றோர்களுக்கும் உண்டு.

அதை பற்றிய கௌரவ கனவு பல வருடங்களாக அவர்களிடம் இருந்து கொண்டிருக்கும். தங்கள் மகன் அல்லது மகள் ஓடிப் போய் திருமணம் செய்துகொள்ளும்போது பல வருட கனவும், கௌரவமும் கலைந்துபோய்விட்டதாக கருதுகிறார்கள். திருமணத்தில் பெற்றோருக்கு மட்டுமல்ல, உறவினர்களுக்கும் கனவு இருக்கிறது.

அதனால்தான் தன்னுடன் இருக்கும் உறவுகளையும் கௌரவப்படுத்தும் விதத்தில் இந்தியத் திருமணங்களை அமைத்திருக்கிறார்கள். திருமணத்தின்போது நடக்கும் சம்பிரதாயங்கள், வழிமுறைகள் அனைத்தும் உறவினர்களையும் மகிழ்விக்கும் விதமாகவே இருக்கும்.

அப்படிப்பட்ட பாதுகாப்பு நிறைந்த பாரம்பரியத்தை உதறிவிட்டு ஓடுவது நல்ல தொடக்கம் அல்ல! இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்ன வென்றால், ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் பலர் குறிப்பிட்ட காலமே தாக்குப்பிடிக்கிறார்கள்.

பின்பு திரும்பவும் பிறந்த வீட்டிற்கு வருகிறார்கள். தங்களை மன்னித்து திரும்ப ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் திரும்புகிறார்கள். என்ன செய்தாலும் பெற்றோர்கள் மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள் என்ற வறட்டு தைரியம், சிலரை ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள தூண்டுகிறது. காதலித்து திருமணம் செய்து கொள்வதில் தவறு இல்லை.

ஆனால் அந்த திருமணம் சமூக அந்தஸ்தை பாதுகாக்க கூடியதாக இருக்கவேண்டும். ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதில் ஒரு திரில் இருப்பதாக கருதி, அதை செய்யத் துணியக்கூடாது. அதில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறது என்று அவசரப்படாமல் சிந்திக்க வேண்டும்.

முரட்டு தைரியத்துடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு அதன் பின்னால் இருக்கும் பிரச்சினைகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும். ஓடிப் போகும் தம்பதிகளை விட்டு அவர்களது வாழ்க்கையும்- நிம்மதியும் ஓடிப்போய்விடும். வாழ்க்கை ஓடாமல் இருக்க பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.