உண்மையில் நாம் எத்தனை பேருக்கு உண்மையாக இருக்கிறோம்?
முகஸ்துதிக்காக எத்தனை பேரிடம் வலிய சென்று சிரிக்கிறோம்.. விருப்பமில்லாமல் எத்தனை உறவினர்களின் நிகழ்ச்சிக்கு போய் வருகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
லஞ்சம் வாங்கிச் சொத்து சேர்த்தார்கள் என்று தெரிந்தும் எத்தனையோ உறவினர்களின் வீட்டு நிகழ்வுகளுக்குச் சென்று வருகிறோம்.. அதே பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒரு உறவினன் அவனுடைய வீட்டு நிகழ்ச்சிக்கு அழைத்தால், பொதுவாக ஒருவரிடம் மொய் பணத்தைக் கொடுத்து அனுப்பி விடுகிறோம் (ஒரு கணக்கிற்காக).
பணம் எப்பேர்ப்பட்ட தவறுகளையும் மறைக்க உதவும் ஒரு பெரிய ஆயுதம். அதை வைத்து தான் உறவுகள் இக்காலத்தில் தீர்மானிக்கப்படுகின்றன. எங்கள் உறவினர்களில் ஒருவர் கோவில் கட்டுவதற்கு 20 லட்ச ரூபாய் நன்கொடையாகக் கொடுத்தார்.. ஆனால் உடன்பிறந்த சகோதரிகளுக்குப் பணத்தை வட்டியில்லாத கடனாக மட்டுமே கொடுப்பார்.
AC ரூம் போட்டு கொடுக்கும் உறவினரின் திருமண நிகழ்விற்கு மொய் 3000 முதல் 5000 ரூபாய், அதே மண்டபத்தில் இருக்கும் சாதாரண அறையில் தங்க வைக்கும் உறவினரின் திருமண நிகழ்விற்கு 1500 அல்லது 2000 ரூபாய் மட்டுமே.. எல்லாமே கணக்கு தான் தோழர்களே.
வந்தவர்களைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, தான் தரையில் படுத்து உறங்கும் உறவினர்களும் இருக்கிறார்கள். அதே ஹாலில் பெட்ஷீட்டை விரித்துப் படுக்கச் சொல்லிவிட்டு, அவர்கள் AC அறைக்குள் நுழைந்து கொள்ளும் உறவினர்களும் இருக்கிறார்கள். விருந்தினர்களுக்குக் கட்டிலை கொடுத்து விட்டு, தரையில் உறங்கும் உறவினருக்கு அன்பையும், மாளிகை போன்ற இல்லத்தில் நடுஹாலில் பாய் விரித்து இடம் கொடுத்த உறவினருக்குச் சபை மரியாதையும் கொடுக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கேள்வியைக் கேட்ட தோழருக்கு என்னுடைய பதில் இது தான்.. உங்களுடைய செல்வத்தைப் பொருத்து தான், உங்களுடைய உறவுகளின் நிலை வலுப்படும். ஏனென்றால், பணம் அதிகம் இருப்பவர்கள் நல்லவர்கள் மற்றும் புத்திசாலிகள் என்று எப்போதோ நம் புத்தியில் பதிய வைத்து விட்டார்கள்.
"பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" என்று எப்போதோ அழகாகச் சொல்லி விட்டார்கள். உழைப்பால் முன்னேறியவன் அந்தஸ்து பார்க்க மாட்டான்.. அப்படி அந்தஸ்து பார்க்கும் செல்வந்தன் நேர்மையான உழைப்பால் செல்வம் சேர்த்திருக்க மாட்டான்.
Thanks Aabuthiran