Breaking News :

Tuesday, April 22
.

புது மணப் பெண்கள் மட்டும் படிக்கவும்!


`உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்று பழமொழி சொல்வார்கள்.

பெண்களுக்கு இந்த சொலவடை நிச்சயம் பொருந்தும்.
புதிதாக மணம் முடித்து கணவர் வீட்டில் காலெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் `கடி’கள், ஏச்சு பேச்சுகள் அவர்களின் மனதை ரொம்பவே துடிக்க வைத்து விடும். அப்படிப்பட்ட நிலைமையை எப்படி சமாளிப்பது? இங்கே சில ஐடியாக்கள்…

`இந்த வீட்ல நான்தான் எல்லா வேலையும் பார்க்க வேண்டி இருக்குது. வேலைக்குப் போனா வீட்டு வேலையை பார்க்கக்கூடாதா? பார்த்தா குறைஞ்சு போகுமோ’ – வேலைக்குப் போகும் மருமகளை, ஏதோ சிங்காரித்து சினிமாவுக்கு சென்று வருவதைப்போல நினைத்து இப்படிப் பேசும் மாமியார்கள் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலை நீங்கள் சந்தித்தால், “நான் தினமும் ஆபீஸ் போய்விட்டு, இத்தனை மணிக்குத்தான் திரும்புவேன், நான் வந்தபிறகு இந்தெந்த வேலைகளை கவனித்துக் கொள்கிறேன்” என்று முன்கூட்டியே சொல்லிவிடுங்கள்.

`உங்கப்பா நல்லா இருக்கும்போதே உனக்கு வேணுங்கறதை கேட்டு வாங்கிட்டு வந்துடு, பின்னாடி உங்க அண்ணன்கள்கிட்டே எதிர்பார்த்துகிட்டு நிக்க முடியாது பாரு…”

இந்த வார்த்தைச் சாட்டைக்கு இப்படி பதிலளியுங்கள்..”எனக்கு என்ன செய்யணும்னு எங்க அப்பா அம்மாவுக்குத் தெரியும். நான் போய் கேட்க வேண்டியதில்லை, கேட்கவும் மாட்டேன். எனக்கு தேவைன்னு தெரிஞ்சா அவங்களே தேடி வந்து செய்வாங்க”

“உன் பெண்டாட்டி வரவர என்னை மதிக்கிறதே இல்லை. நான் சொன்னா காதிலேயே வாங்காமப் போறா, ஆபிசிற்கு ரொம்ப குலுக்கி மினுக்கிப் போறா?”

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பத்திலேயே உங்களின் உண்மை நிலையை கணவரிடம் விளக்கி விடுவதுதான் சிறந்த வழி. மாமியாரின் கோபத்துக்கான காரணத்தை தெரிந்து பேசித் தீர்க்க முடியுமா? என்றும் முயற்சி செய்யுங்கள்.

“இவள் காசை கன்னாபின்னான்னு செலவழிச்சு கரியாக்குறா. திடீர்ன்னு ஆயிரம், ரெண்டாயிரத்துக்கு புதுப்புடவை எடுத்துக்கிறா, நகைநட்டு வாங்கி குவிக்கிறா, என் மகன் பாவம் வாயில்லாப்பூச்சி, எதையும் கேட்கறதில்லை.”எல்லோர் வீட்டு மாமியார்களும் கூறும் பொதுவான `கம்ப்ளெயிண்ட்’ இது…

“சிக்கனம் தேவைதான். அதுக் காக டிரஸ்ஸில் சிக்கனம் பிடிக்கலாமா? தேவைக்குத்தான் வாங்கி இருக்கிறேன்” என்று சொல்லுங்கள். அடுத்து விசேஷ நாட்களில் மாமியார், நாத்தனாருக்கும் (கடமைக்காக அல்லாமல் அன்புடன்) ஒரு புடவை எடுத்துக் கொடுங்கள். பிரச்சினை வந்தவழி தெரியாமல் ஓடிப் போய்விடும்.

“பெரிய ஆபீசர் வீட்ல இருந்து வந்தவளே பாத்திரம் கழுவுறா, எல்லா வேலையும் பாக்குறா? இவளுக்கென்ன? மூத்த மருமகள் கேட்ட அடுத்த மாசமே என் மகனுக்காக பைக் வாங்கி தந்துட்டா..! உன்கிட்ட கேட்டாலும் கிடைக்குமா, உங்கப்பா நெலமைதான் ஊருக்கே தெரியுமே?

`இப்படிப் பேசுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை’ என்பதை கணவரிடம் நேரடியாகச் சொல்லி விடுங்கள். அதன்பிறகு ஓரளவாவது இந்த மாதிரி ஒப்பீடு குறையும்.
எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் `எங்கம்மாவை அப்படிப் பேசாதே’ என்று சொல்ல வாரிசு வளரும் வரை நீங்களாகத்தான் சமாளிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் புதுப்பெண்களே!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.