Breaking News :

Monday, April 21
.

வலிகள் தான் வாழ்க்கை அவர்களுக்கு.?


தினசரி மார்க்கெட் போவதும், பழம் வாங்குவதும் வழக்கமாக நடப்பது. ஒரு ஆயா பல வருடங்களாக ஒரே இடத்தில், ஒரு டிபார்மெண்ட் ஸ்டோர் முன்பு பழ வியாபாரம் செய்து கொண்டு இருப்பார்.

ஆபிஸ் போகவர பார்ப்பேன். ஆயாவும் பார்க்கும்.

சரி. இந்த ஆயாவிடம் இன்று வாங்கலாம் என்று முடிவு செய்து போனேன்.

"மாம்பழம் எப்படி  ஆயா..?"

"எடு ராசா. உனக்கென்ன எச்சாவ கண்ணு சொல்ல போறேன்"

குதாதத் மாம்பழம் நன்றாக இருந்தது.

"எடு கண்ணு.  கல்கண்டு மாதிரி இருக்கும்".

"எவ்வளவு..?"

கிலோ 70 ரூபா. நீ 60 ரூபா கொடு போதும்."

60 அதிகமோ.? மனசு பேரம் பேசியது. "அம்பது  போட்டு 2 கிலோ கொடு ஆயா"

"கட்டாது சாமி. அசலே 55 ரூபா வருது."

சரி, வேண்டாம். அப்புறம் வர்றேன்.

நகர முற்படும்போது "சரி எடு ராசா. காலைல மொத வியாபாரம்"

3 கிலோ வாங்கினேன். ஆஹா. நல்ல பேரம். மனசு குதூகலித்தது.

சில நாட்கள் கழித்து என் ஏரியாவில் இருக்கும் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு போனேன்.

அதனுடன் சேர்ந்த மாதிரி ஒரு கார்ப்ரேட் பழ விற்பனை நிலையம்.
பழங்கள் நேர்த்தியாக அடுக்கி அழகாக இருந்தன.

அதோ. குதாதத். ஆயாவிடம் வாங்கியது போலவே இருந்தது.  என்ன விலை.?

கிலோ 80 என்று எழுதியிருந்தது. "ஏம்மா குதாதத் கிலோ என்ன விலை?" 80 ரூபா"

இங்கே பேரம் பேச முடியாது. ஒரே விலைதான்.

அப்போ, ஆயாவிடம் 50 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கி, அதை பெருமையாக வீட்டில் சொல்லி, ஏனோ மனசு வலித்தது.

மாலை வரும்போது ஆயாவை பார்த்தேன். மெலிதான தேகம். சுருக்கம் நிறைந்த முகம். நடுங்கும் கைகள். ரோட்டில் பழ வியாபாரம்.

என்னை அறியாமல் கால்கள் நின்றது. ஆயாவுடன் இன்னும் 2 வயதான ஆயாக்கள்.

டீ குடித்து கொண்டு  இருந்தார்கள். சரி.  ஆயாவிடம் வேறு ஏதாவது வாங்கலாம். கவனித்தேன்.

ஆயா பக்கத்து புரோட்டா கடையிலிருந்து இரண்டு பார்சல் வாங்கி அவர்களிடம் கொடுக்க அவர்களும் வாங்கி கொண்டு தடுமாறி எங்கோ நடந்து போனார்கள்.

யார் இவர்கள்.?

ஆயாவிடம் விசாரித்தேன் அவர்களைப் பற்றி.

"அவுங்களா.? நம்ம ஊருதான்.

என்ன மாதிரி போக்கத்தவிங்க. நல்லா வாழ்ந்து கெட்டவிங்க. புருஷன் போனதும் புள்ளமார்கள் கண்டுக்கல.

பணத்தையெல்லாம் புடுங்கிகிட்டு முடுக்கி விட்டுட்டாங்க.

ஒருத்தி என்னோட  நாத்தனாரு. வயல் வேலைக்கு போயிட்டிருந்தாங்க. இப்ப முடியல. அவ்வளவா வேலை இல்லைப்பா.

பகல்ல கோவில் அன்னதானம் சாப்பிடுவாங்க.

ராத்திரி இங்க வருவாங்க. ஏதோ நான் முடிஞ்சத வாங்கி தருவேன்.
என் குடிசைல தான் அண்டி இருக்குதுங்க. வரவர என் கையிலயும் ஓட்டம் இல்ல.  அதுக்காக அதுங்கள பட்டினி போட முடியுமா?  அதான் முடிஞ்சத வாங்கி தாரேன். இதுகளுக்கு நான் தொணை.  எனக்கு இவங்க தொணை.

ஏதோ உசிரு இருக்கிற வரைக்கும் ஒதவியா, ஒன்னுமண்ணா இருப்போம்."
உனக்கு புள்ளைங்க இருக்கா.?

எனக்கு அந்த வரம் கெடக்கல கண்ணு. எனக்கு புள்ள இல்லேனு எம்புருஷன் அப்பவே என்னை வுட்டுபுட்டு போயிட்டான்.

அப்பனும் ஆத்தாளும் போனபொறவு ஒண்டிகட்டையா காலத்தை ஓட்டிகிட்டு இருக்கேன்.

அதுக்காக செத்தா போகமுடியும் கண்ணு.?

பொறவு, இதுங்க எங்கிட்ட வந்து ஒட்டிக்கிச்சுங்க. ஏதோ பழவியாபாரம் பண்ணி, கெடைக்கிறத வச்சு வயித்த கழுவிட்டு இருக்கோம்"

மனது வலித்தது. ஆயா சொன்னது ஆயிரம் பாடங்களை கற்று கொடுத்தது.

வலிகளே வாழ்க்கையாகி போனது இந்த ஆயா மாதிரி பலருக்கும் இங்கே.?
"வறுமையிலும் நேர்மை. ஏழ்மையிலும் தர்ம சிந்தனை. என் MBA என்னை பாத்து சிரித்தது.!"

இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். வாழ்க்கை பாடம் ஒன்றை எனக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.

"ஆயா ஏதாவது உதவி வேணுமா" பணம் ஏதாவது தரட்டுமா"

வேண்டாம் கண்ணு. ஏதோ கடவுள் கொஞ்சம் படியளக்கறார் ..

அவங்களுக்கு தான் மாத்து துணி இல்ல. அவங்களுக்கு வேணா ஏதாவது பண்ணு"

சரி. செய்வோம். "ஆயா! இதுல 2000 இருக்கு. இதுல வாங்கி கொடுத்துரு"
"எதுக்கு இவ்வளவு பணம் கண்ணு? 500 போதும்".

மீதியை திருப்பிக்கொடுத்தது ஆயா என்னிடமே!

"இல்ல ஆயா. இருக்கட்டும். எங்க அம்மா இருந்தா வாங்கி தர மாட்டேனா?"

கண்கள் கலங்கியபடி வாங்கிக் கொண்டது ஆயா.

மனசு கொஞ்சம் லேசானது.

என் அம்மா சொல்வாள். "மற்றவர்கள் துன்பங்களை கேட்டால் மட்டும் போதாது. முடிந்த உதவிகளை செய்யணும்"

கிளம்பும்பொழுது ஆயாவிடம் கேட்டேன்,"ஆயா ஆப்பிள் எப்படி.?

கிலோ 120. நீ 110 கொடு சாமி."

100 ரூபா போட்டு 3 கிலோ போடு"

தமாசுக்குதான் கேட்டேன். ஆயாவின் முகம் சட்டென்று வாடி விட்டது.

"சரி கண்ணு. ஏதோ மகராசன் எங்கிட்ட வந்து வாங்குறியே"

3 கிலோ வாங்கி 450 ரூபாய் கொடுத்தேன்.

"எதுக்கு இவ்வளவு பணம் கண்ணு.?"

இல்ல ஆயா. இதையே தோ அங்கே இருக்கிற கார்ப்பரேட் பழக்கடையில் வாங்குனா ரூ450 கொடுத்திருப்பேன்."

பரவாயில்லை,புடி ஆயா என்று உரிமையோடு அந்தப் பணத்தையும் அதன் கையில் கொடுத்து விட்டேன் இல்லை திணித்து விட்டேன்.

என் பிடிவாதம் பார்த்து, ஆயா முகத்தில் முதன்முறையாக சிரிப்பு. அது என்றும் மறக்காது எனக்கு.

இனி வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது.
பாவம் அவர்கள்.

வெளியே சொல்ல முடியாத பல விதமான வலிகளோடு அவர்களில் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

வலிகள் தான் வாழ்க்கை அவர்களுக்கு.?

மனித நேயத்தை காப்போம்!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub