சீரங்கன் என்ற ஒருவன் ஒரு கிராமத்தில் இருந்தான். அவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் அந்த கிராமத்தை சேர்ந்தவருக்கு தீமை செய்வதைத் தவிர வேறு வேலையே இல்லை.
அப்படிப்பட்டி குணமுள்ள சீரங்கன் படுத்த படுக்கையாகி சாகும் நிலையில் கிடந்தான். அப்போது அவன் ஊராரை அழைத்தான். சாகும் தருவாயில் உள்ள அவனிடம் இரக்கம் கொண்ட ஊராரும் அங்கு கூடினர்.
அனைவரிடமும் அவன் அழுது கொண்டே “நான் உங்களுக்கு எவ்வளவோ தீமை செய்து விட்டேன். என்னை அனைவரும் மன்னித்துக் கொள்ளுங்கள்.
நான் இறந்தபின்பு நீங்கள் அனைவரும் எனது உடலில் கூரிய ஆயுதங்களால் தாக்க வேண்டும். பின் அனைவரும் சேர்ந்து தரையில் இழுத்துச் சென்று பின்பு சிதையில் தீமூட்ட வேண்டும். அப்போதுதான் எனது ஆத்மா சாந்தியடையும். இது எனது கடைசி ஆசை” என்று கூறினானாம்.
அவன் சில நாட்களில் இறந்து போனான். ஊரார் அவனது விருப்பப்படியே உடலை கூரிய ஆயுதங்களால் தாக்கி கயிறால் பிணைத்து இழுத்துச் சென்று சுடுகாட்டை அடைந்தனர். அப்போது போலீஸ்காரர்கள் வந்து அங்கிருந்த அனைவரையும் கைது செய்தனர்.
ஊராரும் திகைத்தவாறே விசாரிக்க “சீரங்கன் ஊர்காரர்களால் தனது உயிருக்கு ஆபத்து” என்று புகார் கூறியிருந்தார். அதுபடியே நடந்துவிட்டது. எனவே உங்களை கைது செய்கிறோம்” என்றனர் காவலர்கள். அதிலிருந்து ‘செத்தும் கெடுத்தான் சீரங்கன்’” என்ற பழமொழி உருவாகியது.”