மலைச்சாமிக்கு யோட பொண்டாட்டி பொன்னுத்தாயி எல்லா அம்மாவைப் போலவே அரவணைச்சிப்போற ஆளு . ஆனா மலைச்சாமி அப்புடி இல்ல அவருக்கு சொன்னா சொன்னபடி நடக்கனும். இங்குன இருக்குறத அங்குன தூக்கி வைக்கமாட்டாரு மனுசன். அதிகாரம் தூள் பறக்கும்.
காலையில எந்திரிச்சவன்ன காப்பித்தண்ணி தயாரா இருக்கனும் கைல கொண்டாந்து குடுக்கனும். வேலைக்கிப்போறப்பட்டா துண்ட எடுத்துட்டுத்தயாரா நிக்கனும் அடுப்புல கிடுப்புல எதாவது போட்டேன்னு நின்னா கைல கெடைக்கிறது பறக்கும் மூஞ்சில அத்தன லட்சுமியும் தாண்டவமாடும்.
அவுகளுக்குரெண்டு மகனுக ஒரு மக மகனுக கலியாணம் பண்ணிக்கிட்டு இந்த மனுசன்கிட்ட தப்பிச்சாப்போதுமுன்னு ஓடிட்டானுக. ஏன்னா அவனுகளையும் போட்டு படுத்துவாரு.இத ஏன் பண்ணல அதை ஏன்பண்ணலன்னு பொண்ணு பக்கத்து ஊருல கலியாணம் பண்ணிக்குடுத்துருக்காக கலியாணம் பண்ணிக் குடுத்ததுக்குப் பின்னாடிஇன்னிக்கித்தான் வந்துருக்கா . எல்லார்கிட்டயும் மீசைய முறுக்குறவரு மககிட்ட மாத்திரம் என்னம்மா வாம்மா போம்மான்னு ஒரே பாசம் .
பயலுககூடச் சொல்லுவானுக. எல்லாவீட்டுலயும் ஆம்பளைப்பிள்ளையத் தாங்குறானுக, எனக்குன்னு வாய்ச்சிருக்காரே இவரு கூட எப்புடிம்மா குடும்பம் நடத்துறன்னு அவரு இல்லாதப்பப்சொல்லுவானுக வந்துல இருந்தே ஒரே தாங்குறதுதான். ஒக்கரும்மா சாப்புடும்மான்னு புடிச்சதெல்லாம் வாங்கிப்போட்டாரு, அவளும் சந்தோசமா இருந்தா. அன்னிக்கி விருந்துதான் கடத்தெருவில இருக்குற எல்லாம் வீட்டுக்கு வந்துருச்சு ,
பொண்டாட்டிகிட்ட நல்லா சமைச்சிப் போடு புள்ள எளைச்சிப் போயிருச்சுன்னு மககிட்ட நீ ரெஸ்ட் எடும்மா அம்மா சமைக்கடும்ன்னு கொஞ்சல்வேற மத்தியானம் விருந்து பக்கத்துல ஒக்காந்து பறிமாரச்சொன்னாரு.
மக ஏதாவது சாப்புடும்போது முகம் சுளிச்சா பொண்டட்டிய மொறப்பாரு என்னா சமைச்சிருக்கன்னு. நல்லாருந்தா மீசையத்தடவிக்கிவாரு ஒருவழியா சாப்பாட்ட முடிச்சிட்டு நீ படும்மான்னு சொல்லிட்டு வெளியே போனாரு......
திரும்பிவர ஆறுமணியாச்சு. அம்மாவும் பொன்னும் ஒக்காந்து பேசிக்கிட்டு இருந்தாக . அதப்பாத்ததும் இவரும் திண்ணையில் ஒக்காந்தாரு ஒடனே அவரு சம்சாரம் எந்திரிச்சி நின்னது மகளும் நின்னா. நீ ஒக்காரும்மான்னாரு
திடீருன்னு மக அழுதா இவரு பதறிப் போயிட்டாரு. என்னாம்மா அழுகுறன்னு கேட்டாரு. அப்ப அவசொன்னா . அவ புருசன் அம்மாகூட சேந்துக்கிட்டு கொடுமை
படுத்துறான்னா.எல்லாத்துக்கும் குத்தம் கண்டுபிடிக்கிறாரு. எல்லா வேலையும் இவளே செய்யனுமாம் அதிகாரம் தூள் பறக்குதாம் . அடிக்கக்கூட வாராராம்ன்னு சொல்லச்சொல்ல அவருக்கு ரத்தம் கொதிச்சது. அப்புடியா இருக்காருன்னு மொகம் செவந்துச்சு
கலியாணம் பண்ணும்போது பூ மாதிரி வைச்சிக்கிறேம் பொட்டுமாதிரி பாக்குறேன்னு சொல்லிப்புட்டுக் கொடுமப்படுத்துறானுக சே என்ன மனுசனுகன்னு கண்ணுவேற கலங்கிடுச்சு
பாழுங்கெணத்துல கொண்டித்தள்ளிட்ட மோன்னு பதறிப்போயிட்டாரு. அப்ப அவரு சம்சாரம் சொல்லிச்சி புகுந்த வீடுன்னா அப்புடித்தான் இருக்கும் நாமதான் அனுசரிச்சிப்போகனும்ன்னா. இவரு அதெப்படின்னு கோவமாக்கேட்டாரு
சரிம்மா நாளைக்கி வந்து மாப்பிள்ள கிட்டப்பேசுறேன்னாரு சோகமா அப்ப மக சொல்லிச்சி நீங்க சொல்லனும்ன்னு நெனைக்கிறத இப்பசொல்லுங்க ஏதாவது ஏடாகூடமா பேசிடப்போறீங்க ஒன்னுசெய்யிங்க என்னபேசப்போறேன்னு சொல்லுங்கப்பா. பாக்குறேன்னா.
இவரு ஆரம்பிச்சாரு இந்தாரு மாப்பிள்ள என் பொண்ண பூமாதிரி வளத்துருக்கேன் பக்குவமாப்பாத்துக்கங்க ந்னு ஆரம்பிச்சாரு அப்ப கொஞ்சமிருங்கன்னு வீட்டுக்குள்ள போய் எதையோ எடுத்துட்டு வந்தா. இப்ப சொல்லுங்கன்னு . அது ஒரு செல்போன். அதுல படம் புடிச்சா
அம்புட்டுத்தேன் விட்டு விலாசுனாரு ஒழுங்கு மரியாதயா மனுசனா நடந்துக்கோங்க அதான் எல்லாருக்கும் நல்லது. பொண்ணப் பொண்ணா நடத்துங்க அவ ஒங்களோட அடிமை இல்ல ஏடாகூடமா நடத்துனதா கேள்விப்பட்டா அப்புறம் நல்லாருக்கதுன்னு மெரட்டல் மாதிரியும் புத்திசொல்றமாதிரியும் பேசிமுடிச்சாரு.
இப்ப நீங்க பேசுனதக்கேக்குறீங்களான்னு போட்டுக்காமிச்சா. அவரும் மீசைய முறுக்கிக்கிட்டாரு. கேட்டுட்டுசொன்னாரு மாப்புள திருந்திடுவாருன்னு நம்புறேன்னாரு.
இப்ப மகசொன்னா .இது அந்த மாப்பிள்ளைக்கில்ல இந்த மாப்பிள்ளைக்கின்னு அப்பாவோட மீசைய முறுக்குனா . அவருக்கு ஏதோ பொடனில அடிச்சமாதிரி இருந்துச்சு
. அப்ப நீ சொன்னது எல்லாம்ன்னாரு . எல்லாம் ஒங்களைப்பத்திதான். எங்கவீட்டுல தங்கம் அங்க என் மாமியருக்கிற மரியாதையே வேற எனக்கும் அப்புடித்தான் , இது ஒங்களுக்குத்தான் அப்பான்னு கண்ணு கலங்குனா. ஆமாப்பா அம்மா பாவம் அதபோட்டு இந்தப்பாடு படுத்துறீங்களே அதுவும் ஒரு மனுசிதானப்பான்னா
அம்மாவுக்கே கண்ணுகலங்கிடுச்சு மக பண்ண வேலையில
அதைப்பாத்து அவருக்கும் எதோ கண்ணு தொறந்த மாதிரி இருந்துச்சு இந்தகாலத்து பொண்ணுக எப்புடி சாமார்த்தியமா சொல்லவேண்டியத சொல்லிப்புடுறாகன்னு மகளை அணைச்சிக்கிட்டாரு.
பெருமிதமாவும் அப்ப சம்சாரத்தக்கூப்புட்டாரு நீயும் வா ஒக்காருன்னு அவங்க வேணாங்க சொல்லிக்கிட்டே.....பயந்தா
அப்ப மக அவங்ககையப்புடிச்சி ஒக்காரவைச்சா அப்பா பக்கத்துல
அப்ப எல்லார் கண்ணும் கலங்குச்சு.
அ.முத்துவிஜயன்.