Breaking News :

Tuesday, April 22
.

தனிக்குடித்தனம் செல்வது ஏன்?


ஒரு பாத்திரம் கூட சரியாக கழுவ தெரியவில்லை, எவ்வளவு தண்ணீர் வீணாக்குகிறாள், இப்படியா சாம்பார் வைப்பாள் என சில வீடுகளில் மாமியார்கள் தங்களது மருமகள்களை குறை கூறுவதை பார்த்திருப்போம்.

குறிப்பாக திருமணம் நடைபெற்ற வீடுகளில் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சினைகள்தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கு. இருந்தாலும், திருமணமான முதல் ஒரு வருடம் பெண்களுக்கு சற்று சவாலான ஒன்றுதான்.

புது வீடு, புது உறவுகள், புதிய நடைமுறைகள் என பலவற்றையும் பழக வேண்டியிருக்கும். அதுவரை தனது வீடுகளில் மகாராணிகளாக இருக்கும் பெண்கள் திருமணம் ஆனதும் எனக்கென ஒரு ஆண், எனது ஹீரோ வந்துவிட்டார் என புது வாழ்க்கைக்குள் நுழைவர். ஆனால், அந்த புது வாழ்வில் வரக்கூடிய சிக்கல்களை கையாளுவதற்கு பெரும்பாலானோர் தயாராவதில்லை.

திருமணமான புதிதில் எல்லா மாமியார்களும் தங்களது மருமகளிடம் மிகவும் பாசமாக இருப்பார்கள். பின்னர் இந்த எண்ணம் தடுமாற்றம் அடைவதால் விரிசல் வரக்கூடும். அதே சமயம் மணப்பெண்ணிற்கும் தனது கணவருடன் அதிக நேரம் செலவிட வேண்டும், கணவரை நன்கு புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும்.

திருமணம் ஆகும் முன் தனது திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகள் பெண்களிடையே அதிகமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பின் சூழ்நிலைகள் முற்றிலும் மாறாக இருக்கும். பின்னர் ஒவ்வொரு ஆண்களும் தங்களது தாய்மார்களைப் பார்த்தே வளர்ந்திருப்பர். பெரும்பாலானோர் இங்கு ஒரு விசயத்தை கவனிக்க மறந்து விடுகின்றனர். தனது தாய் திருமணம் ஆன புதிதில் எப்படி இருந்தார் என அவர்களுக்கு தெரிவதில்லை. 55 வயதில் உள்ள அவரது பக்குவமும், 20 வயதில் உள்ள தனது மனைவியின் பக்குவமும் வேறு என்பதை மறந்து விடுகின்றனர். இவையும் பெண்களிடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்துகிறது.

திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் மூன்று மாதங்கள் என்பது மறக்கமுடியாத ஒன்று. ஆரம்ப காலத்தில் தன்னை எப்படி நடத்துகின்றனர். ஒவ்வொரு விசயத்திற்கும் தன்னை எப்படி எல்லாம் குறை கூறினார்கள் என்பதை எந்த பெண்ணும் மறப்பதில்லை. புதிதாக திருமணம் ஆகும் பெண்கள் மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் பெண்கள் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருந்தனர். அவர்கள் அந்த சூழ்நிலையிலேயே வளர்க்கப்பட்டனர். ஆனால், இந்த காலத்து நிலைமை வேறாக இருப்பதால் குடும்ப உறவுகளுக்குள் ஒற்றுமை இல்லாமல், திருமணமான புதிய தம்பதியினர் சீக்கிரமே தனிக்குடித்தனம் செல்லும் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub