Breaking News :

Thursday, January 02
.

திருவண்ணாமலை இடைக்காட்டு சித்தர் சமாதி


இடைக்காட்டு சித்தர் சமாதி

        

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அண்ணாமலையாரின் அருளைப் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது இடைக்காடர் சித்தரின் அருளையும் சேர்த்து பெறுவதாகும். 

 

மூன்றாம் நூற்றாண்டில் அவதரித்ததாக கணிக்கப்பட்டுள்ள இடைக்காடர் சித்தர் சுமார் 600 ஆண்டுகள் வாழ்ந்ததாக சுவடிகளில் குறிப்புகள் உள்ளன.

 

திருவண்ணாமலை ஆலயத்தில் அருள் அலைகள் நிரம்பி இருப்பதற்கு அங்கு அவரது ஜீவ சமாதி அமைந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்றும் திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தர் அருள்புரிந்து வருகிறார். 

 

பொதுவாக பழமையான சிவாலயங்களில் சித்தர்கள் எந்த இடத்தில் அடங்கி இருக்கிறார்கள் என்பது தெரியாது. கருவறையில் சித்தர்கள் அடங்கி இருப்பார்கள் என்று பொதுவாக கூறப்பட்டாலும் அந்த ஜீவ ஒடுக்கத்தை கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

 

இடைக்காடர் திருவிடைமருதூரில் சமாதியில் வீற்றிருப்பதாக போகர் தனது ஜனன சாகரத்தில் கூறியுள்ளார். சிலர் சிவகங்கை இடைக்காட்டூர் ஆழிகண்டீசுவரர் ஆலயத்தில் இடைக்காடர் சித்தர் ஜீவ சமாதி ஆகி இருப்பதாக சொல்கிறார்கள். இந்த ஆலயத்தில் இடைக்காடர் தவக்கோலத்தில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள்.

 

ஆனால் இடைக்காடர் திருவண்ணாமலையில்

தான் அடங்கி இருக்கிறார் என்பது 99 சதவீத சித்த ஆய்வாளர்களின் கருத்தாகும். 

 

நிஜானந்த போதம் என்னும் நூலில் இடைக்காடர் திருவண்ணாமலையில் சமாதி அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆகையால் திருவண்ணாமலையில் இடைக்காடரின் ஜீவ சமாதி உள்ளது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

 

ஆனால் திருவண்ணாமலை தலத்தில் இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி அல்லது ஒளி சமாதி எங்கு உள்ளது என்பதில்தான் மாறுபட்ட தகவல்கள் நீடித்து கொண்டே இருக்கின்றன. திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி 5 இடங்களில் இருப்பதாக பேசப்படுகிறது.

 

1. அண்ணாமலையாரின் கருவறையே இடைக்காடரின் ஜீவ சமாதி என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். திருவண்ணாமலை கோவிலின் கருவறை 4-ம் நூற்றாண்டில் உருவானது. அந்த கருவறை சுற்றுச் சுவர்களில் ஏராளமான ஆடுகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. எனவே அந்த கருவறைக்குள்தான் இடைக்காடர் அடங்கி இருப்பதாக நம்புகிறார்கள்.

 

2. திருவண்ணாமலை ஆலயத்துக்குள் 2-ம் பிரகாரத்தில் நடராஜர் சன்னதி நுழைவாயில் இருபுறமும் இரண்டு பெரிய அறைகள் உள்ளன. வடக்கு புறம் உள்ள அறையின் அருகே ஒரு சுரங்க பாதை செல்கிறது. அந்த சுரங்க பாதை மலைக்குள் ஊடுருவி செல்வதாகவும், அந்த சுரங்கப் பாதைக்குள்தான் இடைக்காடரின் ஜீவ சமாதி இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.

 

3. திருவண்ணாமலை கோவிலின் 3--ம் பிரகாரத்தில் ஒரு மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்துக்கு அருணை யோகீஸ்வரர் மண்டபம் என்று பெயர். அந்த மண்டபம்தான் இடைக்காடர் ஜீவசமாதி என்று சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மண்டபத்தின் கீழ் இடைக்காடரின் சிலை உள்ளது. எனவே அவர் அந்த மண்டபத்தில் சூட்சும வடிவில் புதைந்திருப்பதாக கருதப்படுகிறது. 

 

4. திருவண்ணாமலை மலையின் மேற்கு பகுதியில் இடைக்காடர் ஜீவசமாதி இருப்பதாக மற்றொரு கருத்து உள்ளது. அங்கு பாத வடிவம் உள்ளது. எனவே அதுதான் இடைக்காடர் ஜீவசமாதியான இடம் என்று சொல்கிறார்கள்.

 

5. திருவண்ணாமலை ஆலயத்தில் 6-வது பிரகாரத்தில் பிரம்மலிங்கம் பின்புறம் சுற்றுச்சுவரில் ஒரு பெரிய குகை போன்ற அமைப்பு உள்ளது. 7 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட அந்த இடம்தான் இடைக்காடர் சித்தர் ஒளிசமாதி பெற்ற இடமாக கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அந்த இடம் தான் இடைக்காடரின் ஒளிசமாதி அமைந்து இருக்கும் இடமாக கருதி பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்ல தொடங்கி உள்ளனர்.

 

திருவண்ணா மலையில் இடைக்காடரின் ஜீவசமாதி அமைந்திருக்கும் இடமாக இந்த இடம்தான் சமீபத்தில் அதிகமான ஆய்வாளர்களால் உறுதிபடுத்தப் பட்டுள்ளது. எனவே இந்த இடத்துக்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

 

திருவண்ணாமலை பெரிய தெருவில் இடைக்காடர் சித்தர் குடில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இடைக்காடர் சித்தரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை நிறுவிய கோவிந்தராஜ் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று இடைக்காட்டருக்கு அபிஷேக ஆராதனைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார்.

 

திருவண்ணாமலை ஆலயத்துக்குள் இடைக்காடர் ஒளிசமாதியாக அமைந்திருப்பது பற்றி அவர் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து நிறைய தகவல்களை சேகரித்து உள்ளார். அவர் சொல்கிறார்....

 

இடைக்காடர் சித்தரால்தான் திருவண்ணாமலை கோவில் உருவானது. அதற்கான சான்றுகள் ஆலயம் முழுக்க பரவலாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்துக்குள் இருக்கும் தூண்களில் காணப்படும் சிற்பங்களை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் நிறைய இடங்களில் ஆடுகளின் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பதை காண முடியும். திருமஞ்சன கோபுரத்தில் நிறைய ஆடுகள் சிற்பம் இருப்பதை இப்போதும் பார்க்கலாம்.

 அவையெல்லாம் இடைக்காடரை பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

 

திருவண்ணாமலை 

மலை உச்சியில் இருக்கும் அல்லிக்குளம் அருகேதான் இடைக்காடர் முதன் முதலில் தியானம் செய்த இடம் உள்ளது. ஆண்டுக்கு ஒருதடவை நாங்கள் அங்கு சென்று பூஜை நடத்தி வருவதை வழக்கத்தில் வைத்து உள்ளோம். 

 

திருவண்ணாமலை ஆலயத்துக்குள் கோசாலை அருகே இருக்கும் இடம்தான் இடைக்காடர் ஒளிசமாதி ஆன இடமாகும். அங்கு தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

 

இடைக்காடர் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர். எனவே திருவாதிரை தினத்தன்று பலரும் அங்கு வந்து வழிபடுவதை காணலாம். சமீப காலமாக திருவாதிரை நட்சத்திரகாரர்களும் இங்கு தேடி வந்து வழிபடுகிறார்கள். 

 

இடைக்காடரின் இந்த ஒளிசமாதியில் ஒரே ஒரு நெய்தீபம் ஏற்றி வைத்து மனமுருக வழிபட்டாலே நீங்கள் கேட்டதை எல்லாம் இடைக்காடர் நிச்சயம் தருவார். புரட்டாசி மாதம் திருவாதிரை தினத்தன்று இங்கு பூஜைகள் நடத்தும்போது ஜோதி தானாக எரியும் அதிசயம் நடைபெறும். அதோடு அன்றைய தினம் மழை பெய்யும். இவையெல்லாம் இடைக்காடர் இப்போதும் இருக்கிறார் என்பதற்கான உதாரணங்களாகும்.

 

திருவண்ணாமலை தளத்தில் இடைக்காடர் செய்திருக்கும் திருப்பணிகள் அளவிட முடியாத அளவுக்கு இருக்கின்றன. கருவறை லிங்கம் 160 அடி ஆழத்துக்கு ஒரே தூணால் அமைந்துள்ளது. இதை ஏற்படுத்தியதே இடைக்காடர்தான். 

 

திருவண்ணாமலையில் மலையை சுற்றி கிரிவலம் வரும்போது இடுக்கு பிள்ளையார் கோவிலை பார்த்திருப்பீர்கள். இந்த இடுக்கு பிள்ளையார் ஏராளமானவர்களின் உடல் பிரச்சினையை தீர்த்து வருகிறார். இதை உருவாக்கியது இடைக்காடர் சித்தர்தான். இதுபோன்று ஏராளமானவற்றை இடைக்காடர் உருவாக்கி தந்துள்ளார்.

 

சித்தப்புருசர்கள் ஒரு இடத்தில் தோன்றி, இன்னொரு இடத்தில் தங்களை அடக்கி கொள்வார்கள். அந்த வகையில் இடைக்காட்டூரில் தோன்றிய இடைக்காடர் திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் அடங்கி அருள் பாலித்து வருகிறார்.

 

இடைக்காடர் நவக்கிரகங்களில் புதன் பகவானை பிரதிபலிப்பவர். எனவே இவரை முறைப்படி வழிபட்டால் ஜாதகத்தில் புதன் பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்ல பலன்கள் கிட்டும். வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், ஆசிரியர்கள் இடைக்காடரை வழிபட்டால் பிரச்சினைகள் நீங்கி பலன் பெற முடியும். இடைக்காடருக்கு பிடித்தது பச்சை நிறமாகும். எனவே அவருக்கு பச்சை நிறத்தில் வஸ்திரம் அணிவித்து வழிபடலாம்.

 

இடைக்காடரை புதன்கிழமை வழிபட்டால் எளிதில் அவரின் அருளை பெற முடியும். அதுவும் அவர் ஒளிசமாதியாகி இருக்குமிடத்தில் புதன்கிழமை வழிபட்டால் பரிபூரண அருளை பெறலாம்.

 

பவுர்ணமி நாட்களில் இப்போதும் இடைக்காடர் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள். நமக்கு எதிரே வலது பக்கமாக அவர் வருவார். எனவே நாம் இடைக்காடரை நினைத்தபடி கிரிவலம் சென்றால் அவரை எந்த ரூபத்திலாவது பார்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

 

இடைக்காடர் இதுவரை ஒரு கோடி தடவைக்கு மேல் கார்த்திகை தீப தரிசனம் செய்துள்ளார் என்று குறிப்புகள் உள்ளன. அப்படியானால் இவர் எத்தனை தடவை கிரிவலம் சென்றிருப்பார் என்பதை யூகித்துக் கொள்ளலாம். அந்த சித்தப்புருஷரின் உடலைத் தழுவி வரும் காற்று நம்மீது பட்டால் நாம் தோஷங்கள் நீங்கி புத்துணர்ச்சி பெற முடியும் என்பது ஐதீகம் ஆகும்.

 

இத்தகைய சிறப்புகள் நிறைந்த இடைக்காடரின் அருளை பெற சில குறிப்பிட்ட வழிபாடுகள் உள்ளன. திருவண்ணாமலை தளத்துக்கு செல்பவர்களில் 99 சதவீதம் பேருக்கு அந்த ரகசிய வழிபாடு இதுவரை தெரியாமலேயே உள்ளது. அதை தெரிந்து கொண்டு இடைக்காடரை வழிபட்டால் இமாலய அளவுக்கு பலன்கள் பெற முடியும்.

 

ஓம் நமசிவாய நமஹ

ஓம் நமசிவாய நமஹ

ஓம் நமசிவாய நமஹ.!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.