Breaking News :

Thursday, May 01
.

திருநங்கைகள் வாழ்க்கை!


இந்த உலகில் திருநங்கைகள் இன்றும் நேற்றுமாய் பிறந்து வந்துவிட்ட புதியவர்கள் ஒன்றுமில்லை, ஆரம்பகாலம் முதல் இன்றையகாலம் வரையில் திருநங்கைகள் குறித்த இலக்கியப் பதிவுகள் வெளிவந்துள்ளன. ஆனால் இன்றைய காலத்தில் இவர்கள் குறித்த படைப்புகள் நிறைய வெளிவருகின்றன.

புராணக் காலந்தொட்டே இந்து இதிகாசங்கள் எல்லாவற்றிலும் ஆண்கள், பெண்கள், அரவாணிகள் என்ற மூன்று பேரும் இருந்திருக்கிறார்கள். மகாபாரதத்தில் அர்ஜுனன் ஓராண்டு காலம் அரவாணியாக வாழ்ந்ததாக கதை உண்டு, சிகண்டி என்கிற ஒரு அரவாணி பீஷ்மரை கொன்ற ஒரு பாத்திரமும் உண்டு. ஆனால் “மானுடம் என்றதுமே நம் நினைவிற்கு வருவது ஆண், பெண் என்ற இரண்டு பிறப்புக்கள் மட்டுமே.

இங்கு மூன்றாவது பிறவியாக இருக்கும் ஆண் உடம்பில் பெண் மனதையும், பெண் உடம்பில் ஆண் மனதையும் தாங்கி நிற்கும் திருநங்கைகள் நினைவிற்கு வருவதில்லை. தொல்காப்பியம் ஆண் தன்மை நிறைந்த பெண்களை ‘ஆண் அரவாணிகள்’ என்றும் பெண் தன்மை நிறைந்த ஆண்களை ‘பெண் அரவாணிகள்’ என்றும் விளக்குகிறது. நன்னூல் ஆண் அரவாணியை ‘ஆண்பேடு’ என்றும் பெண் அரவாணியை ‘பெண்பேடு’ என்றும் அக்காலத்திலேயே வகைபடுத்தியுள்ளது. அதில் நாம் பெண் அரவாணிகள் வாழ்க்கை நிலை குறித்து அறிவோம். இந்தியாவின் முக்கிய நகரங்களாகிய மும்பை, கல்கத்தா, குஜராத், டெல்லி, சென்னை, கர்நாடகா, ஆந்திரா போன்ற நகரங்களில் திருநங்கைகள் அதிகமாக வாழ்கின்றனர்.

சமூகத்தால் ஒம்போது, அஜக்கு, அலி, கோசா, பேடி, ரெண்டுங்கட்டான், பொட்டையன், அரவாணி என்று பல்வேறு இழிவான பெயர்களால் அழைக்கபட்டவர்கள், இன்றைய கால மாற்றத்தால் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இச்சமூக சூழலில் திருநங்கை என்ற பெயர் சற்று நாகரீகமாகவும் உள்ளது. இப்பெயரின் அர்த்தம் என்னவென்றால் திரு என்ற வார்த்தை ஆணைக்குறிப்பது, நங்கை என்ற வார்த்தை பெண்ணைக் குறிப்பது இதை இரண்டையும் இணைத்து திரு (ஆண்) + நங்கை (பெண்) = திருநங்கை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆண்கள் திருநங்கைகளாகப் பிறந்தது அவர்களின் குற்றமில்லை அவர்களுக்குள் ஏற்பட்டுப்போன ஜீன்களின் மாற்றத்தால்தான், “மனித செல்லிலுள்ள 23 இணை குரோமோசோம்களில் கடைசி 23 வது குரோமோசோம் இணையே ஒருவர் ஆணா அல்லது பெண்ணா என்பதை தீர்மானிக்கிறது. பெண்ணின் கருமுட்டை பெண்பால் தன்மைகளை ஏற்படுத்தக்கூடிய X குரோமோசோம் மட்டும் கொண்டுள்ளது.

ஆணின் விந்து பெண்பால் தன்மையை ஏற்படுத்தக்கூடிய X குரோமோசோம் அல்லது ஆண்பால் தன்மையை ஏற்படுத்தக்கூடிய Y குரோமோசோம் இரண்டில் ஏதேனும் ஒன்றைக் கொண்டதாக இருக்கிறது. XX என்ற இணைச்சேர்க்கை பெண்ணாகவும் XY என்ற இணைச்சேர்க்கை ஆணாகவும் உருவாகிறது. மரபணு உருவாக்கத்தின்போது ஏற்படும் சில எதிர்பாராத மாற்றங்களால், பெண் கருமுட்டையில் ஒரு X குரோமோசோம் அதிகமாகவோ அல்லது ஆணின் விந்திலிருந்து வரும்  Y குரோமசோமுடன் மேலதிகமாக ஒரு X குரோமோசோமோ அல்லது Y குரோமோசோமோ கருவில் இணைந்துவிட்டால் பிறக்கும் குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாமல் இரண்டுமில்லாமல், பாதிப்பாதி என இரண்டுமாக கலந்து பிறக்கும். அதுவே திருநங்கையாகிறது என்பதே அறிவியல் பூர்வமான உண்மையாகும்.

குழந்தை பிறந்ததும் பிறப்புறுப்புக்களைக் கொண்டு ஆணா? பெணணா? என கண்டுபிடிக்கிறோம். குழந்தைகள் 4, 5 வயதிற்கு வரும்போதே எந்த வகுப்பைச் சேர்ந்தது எனத் தெரிய வரும். உடல் ரீதியாக ஆணாக இருக்கும் ஒரு குழந்தை மனரீதியாகவும் நடத்தையிலும் பெண்ணாக நடக்கும் பட்சத்திலும் அதற்கு அறிவு எட்டி, தான் ஆண் அல்ல பெண்தான் என்பதை உணரும் பட்சத்தில் அந்த பிள்ளை பெண்ணாகவே கருதப்பட வேண்டும், ஆணாக உணரும் பெண் பிள்ளை ஆணாக கருப்பட வேண்டும்  என மருத்துவச் சட்டங்கள் குறிப்பிடுகின்றன.

திருநங்கைகள் ஆண்பாதி பெண்பாதியாய் ஆணவர்கள் என்பதே உண்மை, அதாவது உடலால் ஆணாகப் பிறந்தவர்கள் குரோமோசோம்களின் குறைபாட்டால் பாலின வயதில் மனதளவில் உணர்வுகளால் பெண்ணாக மாற்றம் பெறுகிறார்கள். ஆகவே இவர்களுக்கு திருநங்கை என்ற பெயர் பொருத்தமாகவும் அமைந்திருக்கிறது. இவர்களுக்கு பெண்களைப்போல இருக்க வேண்டுமென்ற ஆசைகள் வந்து விடுவதால், பெண்களைப் போலவே ஆடைகள் அணிவதையும், அலங்காரங்கள் செய்வதையும் அதிகமாக விரும்புகிறார்கள். ஆணினுடை தன்மையிலிருந்து மாறுபட்டு பெண்களைப்போலவே நடை உடைப் பாவனைகளை மாற்றிக்கொள்கின்றனர். இவர்கள் ஆண்களை இன்பத்திற்காகவும், துணைக்காகவும், பாதுகாப்பிற்காகவுமே நாடுகின்றனர்.

குழந்தைகளுக்கு 13, 14 வயதாகும்போது ஆண் உடலில் பெண் வெளிப்பாடுகள் ஏற்படுகின்றன. பெண்களோடு மட்டும் சேருவது, பெண்களைப்போல ஆண்களைக் கண்டால் வெட்கப்படுவது, ஆண்களைக் காதலிப்பது போன்ற உணர்வுகள் அரவாணிகளுக்குள் ஏற்படுகின்றன. 15 வயதில் ஓரளவிற்கு விவரம் வந்துவிடுகிறது. தன்னைப்பற்றி வீட்டிலும் சொல்ல முடியாமல், நண்பர்களிடமும் பகிரமுடியாமல் பறிதவிக்கும் இவர்கள் எடுக்கும் முடிவு ஊரைவிட்டு ஓடி நகர்புறம் தேடி தன்னைப்போன்று உள்ளவர்களிடம் சேர்ந்து கொள்வது. தன்னைப் பற்றி வீட்டிற்கு தெரிந்தால் கொன்றுவிடுவார்களோ, தன் குடும்பத்திற்கு அசிங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து வீட்டிற்கு தன்னைப்பற்றிய விபரங்களைச் சொல்லாமல் மறைத்துவிட்டு மாவட்டம் கடந்தோ மாநிலம் கடந்தோ பெரும்பாலனவர்கள் வாழ்கின்றனர். சிலர் மட்டுமே மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு சொந்த ஊர்களிலேயே வாழ்கின்றனர்.

சமூகத்தில் திருநங்கைகள் சாதி மத பேதம் கடந்தவர்களாக வாழ்கின்றனர். தெய்வ வழிபாட்டில் தாயம்மா, ஜமாத், குருபாய், அரவாண், மாத்தா ஆகிய தெய்வ வழிபாடுடையவர்களாக இருக்கின்றனர். இவர்கள் பெரும்பான்மையான சமூகத்தால் ஒதுக்கப்படுவதால் ஒரு புது சமூகமாக ஒருங்கிணைகின்றனர். அவர்களுக்கென தனியொரு மொழியிருப்பதாகவும் கூறுகின்றனர். அம்மொழிக்கு எழுத்து வடிவம் இருப்பதாகத் தெரியவில்லை.

திருநங்கைகளுக்கு இச்சமூகத்தில் சொத்துரிமை மறுப்புகள் இருக்கின்றன. இளவயதிலேயே வீட்டைவிட்டு ஓடிவிடும் இவர்கள் தங்கள் வீட்டுச் சொத்துக்களின் மீதுள்ள உரிமைகளை மறந்துவிடுகின்றனர். அப்படியே யாரும் தன் சொத்துக்களைக் கேட்டாலும் அதை வீட்டார்கள் கொடுப்பதில்லை. பிறப்பே தவறாக இருக்கும்போது சொத்துக்களை எப்படி சரியாகப் பயன்படுத்துவார்கள் என்ற பிற்போக்கான எண்ணங்கள் அவர்களின் மனதில் இருப்பதால் திருநங்கைகளுக்கு சொத்துக்களைப் பிரித்துத்தர உடன் பிறந்தவர்கள் மறுக்கின்றனர். இருந்தாலும் தன் உடன்பிறப்புக்கள் நன்றாக இருக்கட்டுமென்ற நல்லலெண்ணத்தோடே இவர்கள் சொத்துக்களைக் கேட்க்க முன்வருவதில்லை. தன் குடும்பம் கடன்பட்டு கஷ்டப்பட்டால் அந்தக் கடனை செலுத்துவதற்கு முன்வருகின்றனர்.

சமூகத்தில் பல்வேறு நிலைகளில் ஒதுக்கிவிடுவதால் அவர்கள் வாழ வழியில்லாமல் தவறான தொழில்களில் அதாவது பிச்சையெடுத்தல் பாலியல் தொழில் செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர். திருநங்கைகளின் சூழலை நேரில் காணும்போது மனம் சற்று குமுறத்தான் செய்கிறது. இரயில்வே நிலையங்களில் இரவுநேரங்களில் பாலியல் தொழிலுக்காக ஆண்களை இவர்களும், இவர்களை ஆண்களும் அழைக்கும் முறைகளைப் பார்க்கும்போது வேடிக்கையாகவும் இருக்கிறது, பரிதாபமாகவும் இருக்கிறது. களஆய்விற்காக சென்றிருந்தபோது அவர்கள் இருந்த அவசரத்தால் எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்பதற்காக அவர்களின் வாடிக்கையாளர்களைப்போல அவர்களை நானும் என் நண்பரும் நெருங்கினோம்.

போகலாமா என்றார் அங்கு நின்றிருந்த திருநங்கை, ம்… என்று நகைத்தபடி எவ்வளவு என்றோம் 1 மணிநேரத்திற்கு ஒருத்தருக்கு 800 ரூபாய் என்றார். இடம் என்றபோது நாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு போகலாம் யாரும் இருக்க மாட்டார்கள் என்றார். போலீஸ் என்றபோது அங்க போலீஸ் எல்லாம் வரமாட்டாங்க நல்ல பாதுகாப்பான இடம், எந்த பிரச்சனையும் இருக்காது என்றார். சரி இன்னிக்கு பணம் கொண்டுவரல நாளைக்கு வரம் உங்க நம்பர் குடுங்க என்று வாங்கிக்கொண்டு வந்தோம். நல்லா சீவி சிங்காரிச்சு பெண்போலத்தான் இருந்தார். அவர்களின் வாழ்க்கை நிலை குறித்த ஆராய்ச்சியை நாங்கள் மேற்கொண்டதால் அவர்களின் மீது அனுதாபங்களும் அக்கரையும் மட்டுமே பொங்கி வலிந்தனவே தவிர மற்ற எந்த எண்ணங்களும் அவர்களின்மீது தோன்றவில்லை.

சிறுவயதில் திருநங்கை என்று குடும்பத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் ஊரைவிட்டு விரட்டப்பட்டவர்கள். உறவுகளுக்குத் தெரியாத இடங்களில் வாழ்கின்றனர். ஆண்மகன்களை விரும்பி பெற்று வளர்க்கும் பெற்றோர்களைப் பராமரிக்க இன்றைய ஆண் சமூகம் முன்வருவதில்லை. பல பெற்றோர்கள் ஆதரவற்ற இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது போன்ற நிகழ்வுகளை கண்கூடாகப் பார்க்கும் திருநங்கைகள் தன் பெற்றோர்களுக்கு வயதான காலமறிந்து தங்கள் சொந்த ஊருக்கே திரும்பி வந்து பெற்றோர்களைப் பேணிக்காக்கின்றனர்.

பெரும்பாலான வெளிநாடுகளில் திருநங்கைகள் மிக உயர்ந்த நிலையிலேயே இருக்கின்றனர். அவர்களுக்கென்று பாலின மாற்று அறுவை சிகிச்சை சட்ட பூர்வமாக ஆக்கப்பட்டுள்ளது. அதனால் பெண்ணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை சட்ட பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்ணாக மாறுவது எளிது. இந்த நடைமுறை டென்மார்க், ஹாலந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் உள்ளது. நார்வே நாடு திருநங்கைகளின் சொர்க்க பூமியாகவே உள்ளது. இங்கு சராசரி மனித இனம் போன்றே எல்லா விஷயங்களிலும் திருநங்கைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் அறுவை சிகிச்சை முடிந்த பின்பு பெண் என்ற அடையாளத்துடன் மருத்துவ சான்றிதழ் தருகின்றனர். அதனால் அவர்கள் முன்பு பார்த்த அதே வேலையை மீண்டும் தொடரலாம்.

திருநங்கைகள் அவர்களின் நலன்காக்க அவர்களே கையில் எடுத்த மிகப்பெரிய போராட்டம் என்றால் அது 2004-ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட ரிட் மனுப் போராட்டம்தான் அதில் முன்னின்று எடுத்துச் சென்றவர்கள் திருநங்கை பிரியா பாபுவும் வழக்கறிஞர் ரஜினியும் என்பது மறக்க முடியாதது. வங்கிக் கணக்கு, வங்கிக் கடன், தொலைபேசி இணைப்பு போன்ற சலுகைகளை பெறுவதற்காகவும். குடும்ப அட்டை திருநங்கைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொடரப்பட்டதுதான் ரிட் மனு. ஜுலை 2004-ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் வெளியிட்ட அறிவிப்பில் திருநங்கைகள் அரசு அடையாள அட்டைகளுக்கும் ஆவணங்களுக்கும் விண்ணப்பிக்கும்போது ஆண் அல்லது பெண் என்ற இருபிரிவிலும் தங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

டிசம்பர் 2006-ம் ஆண்டில் இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடைய வேண்டுமென்பதற்காக அரசு இவர்களின் நல்வாழ்விற்கான துணைக் குழுவை அமைத்தது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த சில முக்கிய செய்திகள், திருநங்கைகள் சுய உதவிக்குழுக்களுக்கு சிறு நிதியுதவிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள், பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்கு அணுக போதுமான தகவல்கள், மனநல ஆலோசனை வழங்குவதற்கான பயிற்சி, மாட்ட ஆட்சியரை நேரில் பார்த்து அடையாள அட்டைகள் குறித்த புகார்களைத் தெரிவிப்பது போன்ற முறைகள் செயல்படுத்தப்பட வேண்டுமென்று அந்த அரசாணை தெரிவித்தது.

மே 2008-ம் ஆண்டில் நல்வாழ்வுத் துறையின் கீழ் அரவாணிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. அதே மாதம் நிறைவேற்றப்பட்ட ஒரு ஆணை தமிழகக் கல்வித் துறையில் திருநங்கைகளின் இட ஒதுக்கீட்டிற்கு வழி வகை செய்யும் விதமாக அமைந்தது. 2011-ம் ஆண்டு முதல் இனி ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறித்தது. தமிழகத்தில் 2008-ம் ஆண்டு ‘அரவாணிகள் நலவாரியம்’ தோற்றுவிக்கப்பட்ட ஏப்ரல் 15-ம் தேதிதான் திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் திருநங்கைகளை ‘ஆண்’ பரிவில் சேர்க்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. ஆனால் ‘தங்களுக்குத் தனிப்பிரிவு அந்தஸ்து வேண்டுமென்று அவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததால். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணைப்படி அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு திருநங்கைகள் குறித்து ஆய்வு செய்து அவர்களை ‘மற்றவர்கள்’ பரிவில் சேர்க்கலாம் என்று பரிந்துரைத்தது. அதன்பிறகு ஆண்களுக்கு எண் 1 எனவும் பெண்களுக்கு எண் 2 எனவும் திருநங்கைகளுக்கு எண் 3 எனவும் தரப்பட்டது. அதிலும் 3-ம் எண்ணில் குறிக்க சம்பந்தப்பட்டவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே அந்த எண்ணில் சேர்க்கப்படுவார்கள் இல்லையெனில் மற்றவைப் பிரிவில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது.

ஆணாகப் பிறந்து வளர்ந்து பாலின வயதை எட்டும் பருவத்தில் பெண்ணுணர்வாளர்களாக மாறுபட்டுவிடும் பலர் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர். இப்படியான சிகிச்சை அதிக ஆபத்தானது என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர். உயிரைப் பற்றி கவலைப்படாத திருநங்கைகள் அறுவைச் சிகிச்சை செய்துகொள்கிறார்கள்.

ஒருகாலகட்டத்தில் உலகம் முழுவதும் பாலின அறுவைச் சிகிச்சை சட்ட விரோதமானதாக இருந்தது. ஆனால் இரகசியமான முறைகளில் சிலர் இதைச் செய்து கொண்டுதான் இருந்தார்கள். இதை உலகிற்கு பிரபலப்படுத்தியவர் ஜார்ஜ் ஜார்ஜென்சன் சீனியர் என்ற அமெரிக்க இராணுவ வீரர். பிறப்பில் ஆணாகப் பிறந்து சிறுவயதிலேயே பெண்ணுணர்வுகளால் ஈர்க்கப்பட்டு சிறமப்பட்ட இவர். இளவயதில் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்தார்.  கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய இவர் தனக்கு உடல் நிலை சரியில்லையென்று காரணம்கூறி பணி வேண்டாமென்று எழுதிக்கொடுத்தார். அந்த காலத்தில் டென்மார்க்கில் மட்டும் அரசு அனுமதியோடு இந்த ரக அறுவைச் சிகிச்சை முறை நடைமுறையில் இருந்தது. அதை அறிந்த  ஜார்ஜ் ஜார்ஜென்சன் சீனியர் தன்னுடைய  இருபத்தி ஆறாவது வயதில் அங்கு சென்றார்.

தன் ஆசைப்படியே அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அன்றிலிருந்து தனது பெயரை கிறிஜ்டி ஜார் சென்சன் என்று மாற்றிக்கொண்டு பெண்ணாக நாடு திரும்பினார். 1952-ம் ஆண்டு இவரது அறுவைச் சிகிச்சை குறித்து “நியூயார்க் டெய்லி நியூஸ்” தலையங்க பக்கத்தில் செய்தியாக வெளியிட்டது. “முன்னாள் இராணுவ வீரர், அழகான பெண்ணாக மாறினார்” என்பதுதான் தலைப்பு. அந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது. அறுவைச் சிகிச்சைக்கு முன்னர் அவர் ஒரு பெண்ணுடன் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ரிச்சர்டு ரஸ்கின்ட் என்ற ஒரு கண் மருத்துவர் இருந்தார். அவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை பிறந்தபோது தனக்குள்ளாய் இருந்த பெண்ணுணர்வுகளை மாற்றிக்கொள்ள முடியாமல் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு தோற்றத்தில் பெண்ணாக மாறி தனது பெயரை ரீனி ரிச்சர்ட்சன் என்று மாற்றி வைத்துக்கொண்டார். டென்னிஸ் விளையாட்டு வீரரான இவர் பெண்ணாக மாறிய பின் அமெரிக்க ஓபன் பிரிவில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. ஆனால், அவர் முறைப்படி நீதிமன்றத்தை நாடி தனது உரிமையை நிலை நாட்டினார். பின்னர் வெற்றியும் கண்டார். அவர் ஒருமுறை தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நான் பாலின மாற்று அறுவைச்சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறியதற்கு இப்போது வருந்துகிறேன் என்று பதிவு செய்தார்.

பெரும்பாலான திருநங்கை குழந்தைகளுக்கு பாலின மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வுகள் இல்லை. அதற்கு காரணம் இந்த சமூகம்தான் இங்கு திருநங்கைகள் குறித்த முறையான கல்விமுறை வேண்டும். இந்த சமூகம், திருநங்கைகள் இருக்கிறார்கள் என்பதையே அங்கீகரிக்காமல் இருக்கிறது. இவர்கள் கோமாளிகள், பாலியல் சுகத்திற்கு அலைபவர்கள் என்ற பார்வைகள்தான் இருந்து வருகிறது. படித்த சிலரின் தேடல்கள் இணையத்தின் மூலமாக விரிவடையும். அதனால் சரியான சிகிச்சை, சரியான மாற்றம் என்று போய்விடுவார்கள். ஆனால் படிக்காத, ஏழைத் திருநங்கைகளெல்லாம் கொஞ்ச கொஞ்சமாக பணம் சேர்த்து எப்படிச் சிகிச்சை செய்ய முடியும் என்று விவரம் தெரியாமல் தவிக்கின்றனர்.

திருநங்கைகளின் மீது அபரீத நம்பிக்கையுடைய பொது மக்கள் தங்களின் வீடுகளை வாடகைக்கு கொடுக்கக்கூட முன்வருவதில்லை. இதனால் திருநங்கைகள் தங்குவதற்கு நிலையான இருப்பிடமின்றி தடுமாறுகின்றனர். அரசு தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் திருநங்கைகளுக்கென இலவச வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கின்றன. ஆனால் பெருகிவரும் திருநங்கைகளின் வளர்ச்சிக்கு அவ்வீடுகள் போதுமானதாக இல்லை.

அரசு நிறுவனங்களிலோ, தனியார் நிறுவனங்களிலோ பெரும்பான்மையாக திருநங்கைகள் பணிபுரிவதாகத் தெரியவில்லை. வேலை கிடைக்காமல் தெருக்களில் அலையும் திருநங்கைகளே அதிகமாக காணப்படுகின்றனர். எங்கேயும் வீட்டு வேலைக்குச் சேர்ப்பதற்குகூட மக்கள் அஞ்சுகின்றனர். சமூகத்தில் எல்லா நிலையிலும் இவர்கள் பின்தங்கியுள்ளனர். தனிமனித வாழ்விற்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இல்லாமல் கஷ்டமான சூழ்நிலைகளோடே தங்கள் வாழ்நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

திருநங்கைகளுக்கு தனக்கென்று ஒரு துணை வேண்டும் என்றும், தனக்கென்று காதலன், கணவன் இருக்க வேண்டுமென்று ஆசைகள் இருக்கிறது. ஆனால் திருநங்கைகளின் வாழ்க்கையில் சோகம் என்னவென்றால் எந்த ஒரு ஆணும் நிரந்தரமாக திருநங்கையோடு இருப்பதில்லை. நிறையத் திருநங்கைகள் ஆண்களால் ஏமாற்றப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் வருகிறார்கள். ஆண்கள் திருநங்கைகளிடம் பழகுவது பணத்திற்காகவும், பாலியலுக்காகவும் மட்டுமே. தனக்கு ஆண் துணை வேண்டும் என்பதற்காக ஆண்கள் என்ன பேசினாலும் எப்படி துன்புறுத்தினாலும் அதைப் பொறுத்துக் கொள்கிறார்கள். ஆண்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி எல்லாவற்றையும் பிடுங்கிவிடுகிறார்கள்.

மும்பை மற்றும் சென்னை போன்ற பல பகுதிகளில் வாழும் அதிமான மக்கள் இன்று திருநங்கைகளை மதிக்கின்ற சூழலுக்கு வந்திருக்கின்றனர். திரைப்பட விழாக்கள், திருமண விழாக்கள், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் விழாக்கள், கடை திறப்பு விழாக்கள் போன்ற விழாக்களுக்கு திருநங்கைகளை அழைத்து ஆசி பெருகின்றனர். திருநங்கைகளிடம் ஆசிபெற்றால் நல்லது நடக்கும் செல்வம் கொழிக்கும் என்று நம்புகின்றனர். எனவே திருநங்கைகளுக்கு சமூகத்தில் நல்ல மரியாதைகள் இன்றைய சூழலில் காணப்படுகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.