இதற்கு பதில், உங்கள் தோழி எந்த நாய்க்கும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் செருப்பைக் கையிலெடுக்க வேண்டும்.. இது தான் பதில். ஆனால் உண்மையான கள நிலவரம் வேறுவிதமாகத் தான் இருக்கும். அந்தக் கணவனை இழந்த சகோதரிக்கு ஆறுதலாக இருக்க வேண்டியவர்களே அத்துமீறுபவர்களாக இருப்பார்கள். இதில் பொருளாதாரச் சுதந்திரம் இல்லாமல் இருந்தால் இன்னும் கொடுமை தான்.
அந்தச் சகோதரிக்கு தோளுக்கு மேல் வளர்ந்த ஆண் பிள்ளை இருந்தால் ஓரளவிற்குச் சமாளிக்கலாம். இல்லையென்றால் அவருடைய தந்தையோ தாயோ உடனிருத்தல் நல்லது. அதே அந்தச் சகோதரி முப்பது முப்பத்தியைந்து வயதுக்குட்பட்டவராக இருந்தால் ஓரிரு ஆண்டுகளுக்குப் பின் மறுமணத்தைப் பற்றிச் சிந்திப்பது நல்லது.
ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல முறையில் ஒரு ஆண் துணை கட்டாயம் தேவை. காலம் முழுவதும் பெற்றோரோ உடன் பிறந்த சகோதரர்களோ துணைக்கு வர முடியாது. நாடி தளரும் போது ஆறுதலாகத் தோள் சாய ஒரு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் கட்டாயம் தேவை.
கணவனை இழந்த அந்தச் சகோதரி முதலில் பொருளாதார வளத்தைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும். நான் என் அலுவலகத்தில் அனைவருக்கும் சொல்வது இது தான். உங்கள் வீட்டுப் பெண்களுக்கு ATM கார்ட் பயன்படுத்துவது முதல், நீங்கள் இல்லாத பட்சத்தில் வங்கி கணக்கில் இருக்கும் தொகையை மாற்றுவது எப்படி?.. இன்ஷ்யூரன்ஸ் கிளைம் செய்வது எப்படி? PF பணத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்?. வீட்டுப் பத்திரத்தை மாற்றுவது எப்படி? போன்ற விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள் என்பேன். நாம் யாரும் 100 வருடம் வாழ்ந்து விட முடியாது. பெரும்பாலும் ஆண்கள் தான் முதலில் சாகிறார்கள். இப்படிச் சொல்வதினாலேயே என்னுடன் பணிபுரியும் பல ஆண்களுக்கு என்னைப் பிடிப்பதில்லை.
மேலே குறிப்பிட்ட விஷயங்களில் தான் கணவனை இழந்த பெண்கள் மிகவும் தடுமாறுவார்கள். இதில் கணவன் பெர்சனல் லோன் ஹவுசிங் லோன் என்று ஏதாவது மிச்சம் வைத்திருந்தால் இன்னும் சிக்கல் அதிகம். அன்பு சகோதரிகளே, தவறான எண்ணத்துடன் எவன் நெருங்கினாலும் செருப்பைக் கையிலெடுக்கத் தயங்க வேண்டாம். உங்களுக்கு ஆறுதல் கூற பள்ளி மற்றும் கல்லூரி காலத்து ஆண் நண்பர்கள் வந்தால், அவர்கள் தம் துணைவியாருடன் வந்தால் மட்டுமே வீட்டிற்குள் அனுமதியுங்கள். இல்லையென்றால் வாசலிலேயே நிற்க வைத்து பேசி அனுப்பி விடுங்கள். தவறாக நினைத்தால் நினைத்து கொள்ளட்டும். நமக்குத் தன்மானம் தான் முக்கியம்.
அன்பு சகோதரிகளே, உணர்ச்சிகளுக்கு முறையான வடிகாலை தேடுங்கள். உங்களைக் கேவலப்படுத்தும் நோக்கில் இதை நான் சொல்லவில்லை. சில நாய்கள் ஆறுதல் கூறுவதைப் போல அத்துமீறும். சில சமயங்களில் என்ன ஏதென்று யோசிப்பதற்குள் எல்லாம் முடிந்து விடும். உயிரே போகும் பசியென்றாலும் மலத்தை உண்ண முடியாது. அதற்கு உண்ணா நோன்பு இருந்து உயிர் துறக்கலாம். முறையற்ற காமம் நம்முடைய வாழ்வு மற்றும் நம்மைச் சார்ந்தவர்களின் வாழ்வையும் சேர்த்து சீரழித்து விடும். இங்கே பல பெண்கள் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டு மானத்தை இழந்து பைத்தியம் பிடித்ததைப் போல நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கேடுகெட்ட சமுதாயம் மனைவியை இழந்த கணவனை மறுமணம் செய்யச் சொல்லி நச்சரிக்கும். ஆனால் அதே அக்கறையைக் கணவனை இழந்த பெண்ணுக்கு காட்டாது. அட பெரும்பாலும் பெண்ணைப் பெற்றவர்களே அக்கறை காட்ட மாட்டார்கள். அந்தப் பெண்ணின் மாமனார் மாமியாரும் அந்தப் பெண் காலம் முழுவதும் தம் இறந்த மகனின் நினைவாகவே வாழ வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். உங்கள் தோழியிடம் அவருக்கான வேலையைத் தேடிக் கொள்ளச் சொல்லுங்கள். அவரால் முடியவில்லை என்றால், உங்கள் நட்பு வட்டத்தில் கண்டிப்பாகச் சில நல்லவர்கள் இருப்பார்கள். அவர்கள் மூலமாக அந்தச் சகோதரி சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
கணவனின் நினைப்பை கட்டாயம் காலம் கரைக்கும். இந்த உலகத்தில் இன்னும் நல்லவர்கள் உள்ளார்கள். விருப்பு வெறுப்பைப் புரிந்து கொள்ள ஒருவன் நிச்சயம் வருவான். ஆனால் தாய் தந்தை சம்மதம் இல்லாமல் பெண் கேட்டு வருபவனை என்றுமே நம்பாதீர்கள்.