நிர்வாண வீடியோ கேட்டு
புள்ளி வைப்பவர்களின் விரல்கள்
ஒருமுறைகூட கூசுவதில்லை
' லிங்க் ப்ளீஸ்' என கெஞ்சும் குரல்கள்
குற்ற உணர்வில்
ஒருமுறைகூட நடுங்குவதில்லை
'இன்பாக்ஸிற்கு' வரச்சொல்லி
பகிர்பவர்களின் கண்கள்
ஒருமுறைகூட அவமானத்தில் தாழ்வதில்லை
காணாத எதைத்தான்
காண விரும்புகிறார்கள்?
எத்தனை எத்தனை
ஆடையற்ற மேனிகளைக் கண்டாலும்
அவர்கள் ஒளியிழந்த கணகள்
ஒரு உடலின் வசீகரத்தை
ஒருபோதும் கண்டதேயில்லை
ஒருமுறையாவது எங்கேனும்
அதைக் கண்டுவிடலாம் என்றுதான்
ஒவ்வொருவராக பின்தொடர்கிறார்கள்
அறியப்பட்ட ஒருத்தியின் ஆடையின்மை
அறியப்படாத ஒருத்தியின் ஆடையின்மையைவிட
பலமடங்கு ஆர்வமுடையதாகிவிடுகிறது
அது பரவுகிறது விஷக் காற்றைப்போல
ஒரு கூட்டுப் பலாத்கார வெறிக்கூச்சலின்
எளிய வடிவம் அங்கே நிகழ்கிறது
யாரோ அதைப் பார்க்கிறார்கள்
யாரோ அதைப் பகிர்கிறார்கள்
அந்த உடல் ஒரு மழைக்கால மின்னல்
அது ஒரு கணம் தோன்றி மறைகிறது
ஒருவராலும் அதைக் கையில் பற்றமுடியாத மின்னல்
தோல்வியுற்றவர்கள்
அடுத்த மின்னலுக்கு காத்திருக்கிறார்கள்
அடுத்த மின்னலுக்கு
அடுத்த மின்னலுக்கு
அடுத்த மின்னலுக்கு
ஒரு மாமிசத் துண்டுக்காக
எத்தனை நா*ய்கள் குரைக்கின்றன
ஒரு நா*ய் புகார் செய்கிறது
" பிரிண்ட் சரியாக இல்லை"
அந்த நடிகை புன்னகையுடன் கூறுகிறாள்
" அடுத்த முறை சிறப்பாகச் செய்யலாம் சகோதரா"
இன்னொரு நடிகை சொல்கிறாள்
" என் உடலை நான் கடந்துவிட்டேன்
நீங்கள் எப்போது கடக்கப் போகிறீர்கள்?"
மொத்த உலகமும்
கசாப்புக் கடையின் கிடங்குபோல காட்சியளிக்கிறது
உரிக்கப்பட்டு தொடங்கும் உடல்கள்
ரத்தக் கவுச்சி வேட்கை
மாம்ச ருசி வேட்கை
ஒரு உடல் எப்போதும்
வெல்ல முடியாததாக இருக்கிறது
அதிலும் ஆடையற்ற ஒரு பெண் உடல்
வெல்லவே முடியாததாக இருக்கிறது
அது ஏதோ ஒரு மர்மத்தை
எப்போதும் ஒளித்துவைத்துக்கொள்கிறது
உடலின்முன் தோல்வியடைபவர்கள்
புள்ளி வைக்கிறார்கள்
சாவித்துவாரங்களில்
தங்கள் கண்களை பதிய வைக்கிறார்கள்
ஆடையற்ற உடல்கள்
ஒரு பனிமூட்டமாக
எங்கும் நிரம்பிக்கொண்டிருக்கிறது
- மனுஷ்ய புத்திரன்