தென்னிந்திய மொழிகளைக் கடந்து இந்திப் படவுலகம் வரை முன்னேறி சுமார் ஐநூறு படங்களில் நடித்து முடிந்துவிட்டார் ‘நிழல்கள்’ ரவி.
ஒரேயொரு காட்சியில் வந்துபோகிற கதாபாத்திரம் என்றாலும் அது எனக்கு நெருக்கமானதுதான். எனக்குத் தகுதியான கதாபாத்திரங்களைத்தான் தொடர்ந்து கொடுத்திருக்கிறார்கள். என்றாலும் ஐநூறு படங்களில் ‘நிழல்கள்’, ‘நாயகன்’, ‘மறுபடியும்’, ‘நான் பிடிச்ச மாப்பிள்ளை’ என்று 50 படங்களைத் தனியே எடுத்துவிடலாம் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எனக்கு விதவிதமான கதாபாத்திரங்களைக் கொடுத்து என்னைச் செதுக்கியவர் நடிகர் பாலாஜி. எனது குரல்தான் எனக்கு முதல் வாய்ப்பையே வாங்கிக்கொடுத்தது. கோவையில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு நடிகனாவது என்ற முடிவுடன் சென்னை வந்துவிட்டேன். தி. நகரில் இன்று ரெட் ரோஸ் பில்டிங்காக இருக்கும் வீட்டில் அன்று ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தின் படப்பிடிப்பு. ‘நினைவோ ஒரு பறவை’ பாடல் காட்சியை பாரதிராஜா ஷூட் செய்துகொண்டிருந்தார். மனோபாலா, மணிவண்ணன், ரங்கராஜ் என்று ஏகப்பட்ட உதவியாளர்கள். உதவியாளர் ஒருவரை அருகே அழைத்து “ ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தில் விஜயனுக்குப் பொருத்தமாக இருக்கிறமாதிரி ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் வேணும், தேடிப்பிடிங்க”ன்னு சொன்னார். இதைக் கேட்டுகொண்டிருந்த நான் உடனே இடையில் மூக்கை நுழைத்தேன். “சார் நான் நல்லா டப்பிங் பேசுவேன் சார்” என்றேன். அவரது உதவியாளர்களோ என்னடா இவன், நடிக்க வாய்ப்புத் தேடி வந்துட்டு டப்பிங் பேசறேன் என்று சொல்லி உள்ளே நுழையுறான் என்று ஆச்சரியப்பட்டார்கள். எனது ஆர்வத்தைக் கண்ட பாரதிராஜா “நாளை பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்துடுங்க” என்றார். நான் டப்பிங் தியேட்டரை முன்னே பின்னே பார்த்தது கூட கிடையாது.
மறுநாள் பிரசாத் ஸ்டூடியோ சென்றதும் சவுண்ட் என்ஜினியரிடம் அழைத்துச் சென்று எனக்கு வாய்ஸ் டெஸ்ட் எடுத்தார்கள். கொஞ்ச நேரத்தில் பாரதிராஜா வந்தார். அவரிடம் சவுண்ட் என்ஜினியர் “ எங்க சார் பிடிச்சீங்க இந்தப் பையனை?! நல்ல மெட்டாலிக் வாய்ஸ். கணீர்ன்னு இருக்கு.” என்றார். எனக்கு சந்தோஷத்துல கை கால் நடுங்க ஆரம்பித்துவிட்டது. மறுநாள் பல காட்சிகளுக்கு டப்பிங் பேசிவிட்டேன். அதற்கும் அடுத்த நாள் சென்றபோது எனக்குப் பதிலாக இயக்குநரே டப்பிங் பேசிக்கொண்டிருந்தார். என்னடா இது! முந்தா நாள்தானே நமது குரலை மெட்டாலிக் வாய்ஸ் என்று பாராட்டிக்கொண்டிருந்தார்கள் என்று குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தேன். பிறகு மதிய உணவு இடைவேளையில் டப்பிங் அறையை விட்டு வெளியே வந்தார் பாரதிராஜா. என்னைக் கண்டதும் தோளில் தட்டிக்கொடுத்தபடி “விஜயன் மலையாள ஸ்லாங்கில பேசியிருக்கார். அதை மேனேஜ் பண்ணிப் பேசணும். அதனால நானே பேசிட்டேன். எனிவே.. நீங்க நம்ம படத்துல நடிக்கிறீங்க. படிச்சுட்டு வேலை தேடுற ஒரு பட்டதாரியோட கதை அடுத்த படத்துல நடிக்கத் தயாரா இருங்க” என்றார்.
இப்படித்தான் என் குரல் எதற்காக நான் சென்னைக்கு வந்தேனோ அதை நிறைவேற்றிக்கொடுத்தது. எனது குரலை மீண்டும் அங்கீகரிக்கும் விதமாக ‘பொம்மலாட்டம்’ படத்தில் நானா படேகருக்குக் குரல்கொடுக்க வைத்தார் பாரதிராஜா.
மிகச் சிறந்த இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். அவர்களது விதவிதமான பாணிகளை உள்வாங்கியிருக்கிறேன். நடிகன் என்ற ஒருநிலையோடு திருப்தி அடைந்துபோய்விடுவதில் எனக்கு விருப்பமில்லை. எனவேதான் திரைப்படத்தை இயக்குவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஒரு நல்ல நடிகனால் சக நடிகர்களிடமிருந்து தரமான நடிப்பை வாங்கிவிட முடியும் என்று நம்புகிறேன்.
நிழல்கள் ரவி!