சௌத் இந்தியன் சினி , டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் தேர்தலில் நடிகர் "டத்தோ" ராதாரவி தலைமையிலான 23 பேர் கொண்ட குழு மாபெரும் வெற்றி பெற்றது, இதனையடுத்து இன்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள், பெப்சி தலைவர் செல்வமணி தலைமையில் பதவியேற்று கொண்டனர்.
தலைவர் - ராதாரவி, பொதுச்செயலாளர் -T.N B கதிரவன், பொருளாளர் - A. சீனிவாசமூர்த்தி ஆகியோருக்கு இயக்குநர் செல்வமணி பதவியேற்பு செய்து வைத்தார்.
துணைத்தலைவர் பதவிகளுக்கு - K மாலா, M.ராஜேந்திரன், M.நாராயணபாபு, இணை செயலாளர் பதவிகளுக்கு- T கோபி, துர்கா சுந்தர்ராஜன், MSK குமரன் செயற்குழு உறிப்பினர் பதவிகளுக்கு ஷாஜிதா, டி பிரமிளா, யோகேஷ்வரி, பிரதீப், பாரதிராஜா, ஹெச்.ஆர். முரளிதரன்,ஈ.எம்.எஸ்.முரளி, விஜயலக்ஷ்மி, சிபு, கௌதம்குமார், எம். சரவணன் பதவியேற்றனர்.
வெற்றிபெற்றவர்களுக்கு தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம் சார்பிலும், காஸ்ட்யூமர் சங்கத்தினர் சார்பிலும், கலை இயக்குநர் சஙகம் சார்பிலும், டெக்னீஷியன் சங்கத்தினர் சார்பிலும், ஸ்டண்ட் யூனியன் சார்பிலும், சின்னத்திரை சங்கம், இயக்குநர் சங்கம் சார்பிலும், ஸ்டில் போட்டோகிராபர்ஸ் சங்கம் சார்பிலும் மரியாதை செய்யப்பட்டது.
தென்னிந்திய திரைத்துறை தொழிலாள்ர்கள், ஃபெஃப்சி சங்க தலைவர், இயக்குநர் செல்வமணி, வெற்றிபெற்ற சங்க தலைவர் ராதாரவிக்கு மாலையணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இயக்குநர் RK செல்வமணி பேசியதாவது… நடந்து முடிந்த சங்க தேர்தலில் வெற்றி பெற்ற அண்ணன் ராதாரவி, கதிர்,சீனிவாசமூர்த்தி மற்றும் இணை செயலாளர்கள், செயலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்போதெல்லாம் சங்கத்தில் வந்து வேலை செய்யவே பயமாக இருக்கிறது. ராதாரவி அண்ணனை பார்த்து தான் நான் என்னை தேற்றி கொள்வேன். ஆனால் இப்போது அதுவே கடினமாக இருக்கிறது. நாம் பதவிக்கு வந்துவிட்டாலே நாம் மற்றகளுக்கு வேலை பார்க்கும் அடிமை போல் நினைத்து கொள்கிறார்கள். யார் யாருக்கெல்லாமோ பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. இது எதுவுமே வேண்டாம் என்று முடிவு செய்து போகலாம் என்று நினைக்கும்போது, யாராவது" சார் உங்களால் தான் உயிரோடு இருக்கிறேன்" என்று சொல்வார்கள், அதை நினைத்து, திரும்பவும் இந்த இடத்தில் வந்து அமர வேண்டியிருக்கிறது. எங்கள் சங்கத்தில் வரும் சந்தாதொகை சம்பளம் கொடுக்கவே போதாது, இதில் நான் எங்கு ஊழல் செய்ய?... இந்த நிலை தான் எங்கும் உள்ளது. ராதாரவி அண்ணனை எதிர்த்தால் டெபாசிட் காலி என்பது இந்த தேர்தல் மூலம் உறுதியாகியுள்ளது. நல்லது செய்ய நினைப்பவர்கள் மீது பழி தான் விழுகிறது.
ராதாரவி அண்ணன் நான் உதவி இயக்குநராக இருந்த போது என்ன மரியாதை தந்தாரோ இப்போதும் அதே மரியாதை தான். நல்ல மனிதர் அவர். இங்கு நல்ல உள்ளங்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சிறப்பான பணி செய்து சங்கத்திற்கு நல்ல பெயர் வாங்கி தர வேண்டும், நன்றி.
சம்மேளன செயலாளர் கிரிசன் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்.
சம்மேளன பொருளாளர் திரு.சுவாமிநாதன்," போனமுறையே அண்ணனிடம் நிரந்தர தலைவர் இருக்கும் போது தேர்தலே வேண்டாம் "என்றேன் ஆனால் எதற்காக இப்போது தேர்தல் வைத்தார்கள் என்றே தெரியவில்லை. பரவாயில்லை நம் பலம் தெரிந்துள்ளது. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
இயக்குநர் RV உதயகுமார் பேசியதாவது…
இயக்குநர் சங்கம் சார்பாக வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்றைக்கும் தோல்வி அடையாத ஒருவர் அண்ணன் ராதாரவி. அவர் படத்தில் தான் வில்லன் உங்களுக்கு எல்லாம் நாயகன் அவர். எனக்கும் டப்பிங் யூனியனில் மெம்பராக வேண்டும் என ஆசை, எப்போது வேண்டுமானாலும் வந்து சேர்ந்துகொள் என்று சொன்னார். இன்று சொந்த வாய்ஸில் பேசும் நடிகைகள் இல்லை, அவர்களின் குரல் நீங்கள் தான். நீங்கள் தான் நட்சத்திரங்களை வாழ வைக்கிறீர்கள், அண்ணன் ராதாரவிக்கு எதுவுமே தேவை இல்லை உங்களுக்கு அவர் நல்லது செய்வார். அவருக்கு நான் ஒரு படத்தில் கூட வாய்ப்பு தந்ததில்ல ஆனால் என் மீது அன்பாக இருப்பார். செல்வமணி சூப்பர். அவரே எத்தனை நாள் ஹீரோவாக இருப்பார் வில்லன் வந்து தானே ஆக வேண்டும். அதனால் தான் இயக்குநர் சங்கத்தில் எதிர்ப்பு வந்துள்ளது வரட்டும், அது எல்லாம் அண்ணன் தம்பிக்குள் தான். அண்ணன் ராதாரவிக்கு வாழ்த்துகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
சின்னதிரை ரவிவர்மா பேசியதாவது… டப்பிங் யூனியனின் நிரந்தர தலைவர் ராதாரவி அண்ணனுக்கும் அவருடன் இணைந்து வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இயக்குநர் பேரரசு பேசியதாவது… இந்த சங்கத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றி பெறச்செய்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றியுரை வழங்கிய டத்தோ ராதாரவி பேசியதாவது… நான் குடும்பமாக நினைக்கும் பெப்சியை சேர்ந்தவர்கள் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இன்று பெப்சி நல்ல நிலைமையில் இருக்க செல்வமணி முக்கிய காராணம், அவர் எனக்கு ஒரு அறிவுரை சொன்னார், பிரச்சனை வந்தால் கூப்பிட்டு பேசுங்கள் என்றார் அது தவறு, பிரச்சனை என்பது வந்தவுடன் போய்விடும், அதையெல்லாம் கண்டுகொள்ள கூடாது, பிரச்சனையுடன் உறவாடகூடாது. என்னை எதிர்த்தவர்களால் தான் என் நிலை இங்கு என்ன என்பது, இன்று எனக்கு தெரிந்துள்ளது, அதனால் அவர்களுக்கு நன்றி. நான் சேர்த்தவர்கள் தான் என்னை எதிர்த்து கேஸ் போட்டார்கள், எல்லாமே நான் பார்த்து சேர்த்தவர்கள், இப்போது எங்களை எதிர்த்து நின்றவர்கள் எல்லோருக்குமே டெபாசிட் போய் விட்டது. டைரக்டர் யூனியனிலே பிரச்சனையா? அப்போ டப்பிங் யூனியனிலும் இருக்கும்பா என்கிறார்கள். நாய் குலைக்குதேனு சிங்கம் குலைக்க முடியாது. இதை புரிந்து கொள்ள வேண்டும். இயக்குநர் சங்க தேர்தல் கேள்விப்பட்டு நான் வருத்தப்பட்டேன். செல்வமணி ஜெயிப்பார் கவலைப்பட வேண்டாம், நம்முடன் நிறைய வல்லவர்கள் இருக்கிறார்கள்.இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.