Fotograf (2015) : பெண்களின் சிற்றின்ப சுதந்திரம்!

By News Room

செக்கோஸ்லோவாக்கியா நாட்டுப் படம். தற்போது இது இரண்டாகப் பிரிந்து செக் மற்றுக் ஸ்லோவாக்கியா என இருநாடுகளாக உள்ளது. உலகப் புகழ்பெற்ற காமிரா கலைஞன், ஓவியன் Jan Saudek-ன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெண் இயக்குநரால் எடுக்கப்பட்ட படம். இயக்குநரின் பெயர் - Irena Pavlásková.

இந்தப் படத்தின் திரைக்கதையை இவர் கதையின் நாயகன் Jan Saudek-உடன் சேர்ந்தே எழுதியிருப்பது ஒரு சிறப்பு.

80 வயதான Jan Saudek இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கலைஞன். இவருக்கு நான்கு மனைவிகள். குழந்தைகள் ஏராளம். இவர் ஒரு செக் நாட்டு படத்திலும் நடித்திருக்கிறார். இவர் ஃபோட்டோகிராபி சம்பந்தமாக பல நூல்களை எழுதியுள்ளார்.

1935ல் பிறந்த இவர் இரண்டாம் உலகப்போரில் இவரது சொந்தங்களில் பலரை இழக்கிறார். இவரும் இவரது சகோதரரும், தந்தையும் போரில் மீண்டவர்கள். இவரது தந்தை யூத இனத்தைச் சார்ந்தவர். இவரது 15வது வயதிலேயே இவர் காமிராவை கையாள்கிறார்.

இவரது தனிச் சிறப்பு பெண்களின் சிற்றின்ப சுதந்திரம் என்ற தலைப்பிலேயே புகைப்படங்கள் எடுப்பது, ஓவியம் வரைவது என்பது. இவரது மாடல்கள் எல்லாம் மிகவும் உடல் பருத்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர் சமீபத்தில் அதாவது 2014ல் 4வது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவரைச் சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது.

இரண்டாம் உலகப் போரின் போது போலீஸின் கெடுபிடிகளுக்கு இடையே இவரது ஸ்டுடியோ பணி நடந்து கொண்டிருக்கும்போது. போலீஸ் நுழைந்து இவரிடமிருந்து ஏராளமான நிர்வாண போட்டோக்களையும், நெகட்டிவ்களையும் கைப்பற்றுகிறது. இவரும் கைது செய்யப்படுகிறார். பிறகு இவரது புகழ் அறிந்து இவரை விடுதலை செய்வதோடு இவரது நெகடிவ்களையும் திருப்பி அளிக்கிறது.

பின்னாளில் அரசே இவரை அங்கீகரித்து இவரை கௌரவிக்கிறது.

ஒரு பெண் ஓவியர் இவரது உதவியாளராக வந்து சேர்கிறார். அவரிடம் மேலும் பயிற்சி பெற்று அவளும் ஒரு காமிரா கலைஞராகவும், ஓவியராகவும் உருவாகிறாள்.

அவளுக்கு இவர் மூலம் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும் ஒரு ஆசை. ஆனால் அதற்கு ஓவியர் சம்மதிக்கவில்லை. ஆனாலும் அவரின் மகனை மணந்து குழந்தை பெற்று அவளுடைய குழந்தைக்கு அப்பா ஆக முடியாவிட்டாலும் அவரை தாத்தாவாக்கிவிடுகிறாள்.

இந்தத் திரைப்படம் அவரது வாழ்க்கையை அப்படியே, மிகவும் துணிச்சலான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. நாயகன் வேடத்தில் நடித்திருப்பவரும் உண்மைக் கலைஞனைப் போலவே மிகவும் தத்ரூபமாக நடித்திருக்கிறார். ஒருவர் வாழும் காலத்திலேயே அவரை ப்பற்றிய ஒரு திரைப்படம் அதுவும் வெளிப்படையாக வந்திருப்பது என்பது முக்கியமானதாகும்.

.
மேலும்