மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?

By saravanan

சோயாவை கொதிக்கும் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து 10 முதல் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அந்த நேரத்தில் ஒரு அகலமான பாத்திரத்தில் சப்பாத்தி மாவு சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் தேவையான அளவு உப்பு கலந்து கை பொறுக்கும் அளவிற்கு வெந்நீர் கலந்து மாவை செய்ய வேண்டும்.

வெந்நீர் சேர்த்தவுடன் மாவை முழுவதுமாக பிசைந்து கொள்ளாமல் ஒன்று இரண்டாக பிசைந்து ஒரு பத்து நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து மீண்டும் எண்ணெய் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளலாம். இப்படி இடைவெளி விட்டு மாவு பிசைந்து எடுத்துக் கொள்ளும் பொழுது மாவு மேலும் விருதுவாக இருக்கும்.

மாவு முழுவதுமாக பிசைந்த பிறகு மேலும் அதன் மேல் பக்கமாக எண்ணெய் தடவி பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். அடுத்ததாக நாம் வெண்ணியில் ஊற வைத்திருக்கும் சோயாவை நன்கு தண்ணீரிலிருந்து பிழிந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், நன்கு பழுத்த ஒரு தக்காளி பழம், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, காரத்திற்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய், பட்டை ஒன்று, கிராம்பு ஒன்று, ஏலக்காய் ஒன்று சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

மீண்டும் ஒரு மிக்ஸி ஜாரில் கைப்பிடி அளவு தேங்காய், கைப்பிடி அளவு பொரிகடலை அல்லது முந்திரி பருப்பு, பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி, கசகசா அரை தேக்கரண்டி சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் போது தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

ஒரு குக்கரில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி வெங்காயம் விழுதை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். ஒன்று முதல் இரண்டு நிமிடம் வதக்கிய பிறகு மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் அரை தேக்கரண்டி உப்பு, கைப்பிடி அளவு புதினா இலை சேர்த்து மீண்டும் வதக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் நாம் ஊற வைத்திருக்கும் சோயாவை சேர்த்துக் கொள்ளலாம். சோயா சேர்த்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கரைசலையும் குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் மீண்டும் ஒருமுறை உப்பு சரிபார்த்து குக்கரை மூடிவிட வேண்டும். இரண்டு அல்லது மூன்று விசில்கள் வரை வேக வைத்து இறக்கினால் சோயா குருமா நொடியில் தயார். குக்கரில் விசில் வரும் நேரத்தில் நாம் பிசைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவு சிறு சிறு உருண்டைகளாக மாற்றி மிகவும் லேசாக இல்லாமல் மிதமான அளவு தட்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும் நெய் சேர்த்து இன்னும் பின்னுமாக சப்பாத்தியை வேக வைத்து எடுத்தால் மிருதுவான சப்பாத்தி தயார். இந்த சப்பாத்திக்கு சத்து நிறைந்த சோயா குருமா வைத்து சாப்பிடும் பொழுது இரவு சாப்பாடு மிகவும் திருப்தியாக முடிந்துவிடும்.

இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி ganesanmatrimony.com

.
மேலும்