ஹார்ட்... W-H-O-L-E ஆக இல்லை, H-O-L-E இருக்கு - காஞ்சி மகான்

By News Room

"ஹார்ட்... W-H-O-L-E ஆக (முழுமையாக, பூரணமா) இல்லை, H-O-L-E இருக்கு என்கிறே?"

 

பெரியவா அனுக்கிரகத்தால்- ஆசிரியரின் பெண்

 

சௌபாக்கியவதியாக இருக்கிறாள்-Whole-hearted ஆக.

 

சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்..

 

"என் பெண்ணுக்கு இருதயத்திலே ஓட்டை இருக்கிறதாம். டாக்டர்கள் சொல்வதைக் கேட்டாலே குலை நடுங்கிறது" என்று முறையிட்டார், பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர்.

 

"அதாவது, ஹார்ட், ஹோலா' இல்லே; அதில் ஹோல் இருக்கு என்கிறே?"

 

ஆசிரியருக்குப் புரியவில்லை. கேள்வி கேட்டுப் பழக்கம்;கேள்வி கேட்கப்பட்டுப் பழக்கம் இல்லை.

 

"ஹார்ட்... W-H-O-L-E ஆக (முழுமையாக, பூரணமா) இல்லை, H-O-L-E இருக்கு என்கிறே?"

 

ஆசிரியர் பெருமூச்சு விட்டார்

 

.(அவரை பெஞ்சு மேல் நிற்கச் சொல்லவில்லை பெரியவா!)

 

"வேறு என்ன வேலை பண்றே?"

 

ஆசிரியர் விழித்தார்."நான் ஆசிரியத் தொழிலைத் தவிர வேறு வேலையும் செய்கிறேன்" என்பது  பெரியவாளுக்கு எப்படித் தெரியும்?

 

'வேறு வேலை எதுவும் இல்லை' என்று பொய் சொல்லி விட்டால் போகிறது! பெரியவாள் குடைந்து கொண்டா இருக்கப் போகிறார்கள்?

 

அந்த தெய்வச் சந்நிதியில் பொய்ச்சொல் வெளியே வர அஞ்சியது போலும்!

 

"தங்கம்,வைரம்...வியாபாரம்..." என்று மென்று விழுங்கினார்.

 

பெரியவாள் கனிவுடன் சொன்னார்கள்.

 

"பெரிய பெரிய வியாதியெல்லாம் கூட தான-தர்மங்கள் செய்தால் போய்விடும் என்று சொல்லியிருக்கு. இங்கு ஏழைகள் வந்து, கல்யாணத்துக்குத் திருமாங்கல்யம் கேட்கிறார்கள். நூற்றெட்டுத் திருமாங்கல்யம் செய்து கொண்டு வந்து கொடு. கேட்பவர்களுக்குக் கொடுக்கலாம்..."

 

அடுத்த மாதமே நூற்றெட்டுத் திருமாங்கல்யம் கொண்டு வந்து சமர்ப்பித்தார்,ஆசிரியப் பணி செய்யும் தங்க வியாபாரி.

 

"Good-hearted-ன்னு இங்கிலீஷிலே சொல்லுவா. நீயும் உன் புத்திரியும் good-hearted!" என்றார்கள் பெரியவாள்.

 

அப்புறம் பெரியவாள் வாக்குக்கு மேலே என்ன மருந்து வேண்டும்?.

 

தேவாமிர்தம் பருகியவனுக்கு பாயசம் எதற்கு?

 

ஆசிரியரின் பெண் சௌபாக்கியவதியாக இருக்கிறாள்-Whole-hearted ஆக

.
மேலும்