ஒருவாரமா வீட்டுல மகனுக்கும் மருமகளுக்கும் சண்டை. என்னா பிரச்சனைன்னு தெரியல இவளுக்கும் அதைப்புரிஞ்சிக்க முடியல கலியாணம் ஆகி 6 வருசம் கூட ஆகல ஒருமகள் பொறந்தா. ஹனிமூனெல்லாம் போய்ட்டு வந்தாங்க ஆனா இப்ப சண்டை பயங்கரமா இருந்துச்சி. ரெண்டுபேரும் தனித்தனியாப் படுக்குறாங்க. பேசிக்கிறது இல்ல எல்லார் வீட்டுல சண்டைவந்தா என்ன நடக்குமோ அதுதான் இவங்க வீட்டுலயும் நடந்துச்சு.
சொவத்தை பாத்திரங்களை அப்புறம் மககிட்டப்பேசுறமாதிரிதான் பேசிக்கிட்டாங்க. அவ ” இந்தா நான் இன்னிக்கி லேட்டாத்தான் வருவேன் வேலை முடிஞ்சி அப்படியே முனிச்சாலைல இருக்குற எங்கவீட்டுக்குப் போய்ட்டு வருவேன் ஒன்ன ஒங்க அப்பனை வந்து பள்ளிக்குடத்துல இருந்து கூட்டியாராச் சொல்லு” நு மககிட்ட சொல்லுவா அதுக்கு அவன் “ நான் இன்னிக்கி ஆடிட்டிங் இருக்கு எனக்கு வேலை முடியவே ராத்திரி மணி பத்தாயிடும் நான் எக்க உன்னக்கூப்புட்டு வர உங்க அம்மாவையே கூப்பிட்டு வரச்சொல்லு” என்பான்.
இடையில இவ புகுந்து “ நான் வீட்டுல சும்மாதான இருக்குறேன் நான் வேணுமானா போய் கூப்புட்டு வறேன்” சொல்ல அவன்” ஒங்களக்கூப்புட்டு வாரதுக்கே ஆள் வைக்க வேணும் இதுல நீ போய் என்னத்தக்கூப்புட்டு வர? “ ஏன் ஒங்க அம்மா வீட்டுல சும்மாதான இருக்காங்க போய் கூப்புட்டு வரலாமே என்னா கொறைஞ்சா போவாங்க” “ சும்மா எதுனாச்சும் சொல்லனுமேன்றதுக்காகச்சொல்லாத அம்மா வுக்கு இருக்குற பிரச்சனயில இது வேறயா நீ வேணாம்ம்மா அவளே கூப்புட்டு வரட்டும் இல்லாட்டி நமக்குதெரிஞ்ச ஆட்டோகாரர்கிட்ட சொன்னா அவரே கூட்டியாந்து விடுவாரு நீ சிரமப்படவேணாம்”.
“ ஆமா வாங்குற சபளத்துல ஆட்டோக்கு வேற 200 ரூ அழுகனும் ஒழைக்கிறவ்ங்களுக்குத்தான தெரியும் வீட்டுல சும்மா ஒக்காந்துருக்கவங்களுக்கு என்ன தெரியும் கஸ்ட” நு சொன்னா மருமக.
அப்ப மகன் ” அவங்களுக்குகே வயசு 62 ரிட்டயர்டு ஆனவங்க. ஹார்ட் ஆப்பரேசன் பண்ணிருக்கு. ஒரு கிட்னிதான் இன்னோன்ன தங்கச்சிக்குத் தானம் பண்ணிட்டாங்க. டாக்டர் அவங்களை ஸ்ட்ரெயின் பண்ணக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க பண்ணுனா சிரமமாயிடும் அதான் சொல்றேன்” ந்ன்னு சொன்னான் அப்ப அவ ” நீயும் வேலைக்கிப்போற நானும் வேலைக்கிப்போறேன் வீட்டுல சமையல் வேலையை அவங்க பொறுப்பெடுத்துக்கிட்டா நாம மத்த வேலைகளைப் பாக்கலாம் நு சொன்னேன்” இது தப்பா நு கேட்டா.
இவ அப்ப சொன்னா” சரிம்மா நான் சமையலப்பாத்துக்கிறேன் நானும் சும்மாதான இருக்கேன் “ நு சொல்ல அவ “ அதான் ஒத்துக்கிட்டாங்கல்ல இனிமே சமையல் வே;லை எல்லாத்தையும் அதாவது பத்துப்பாத்திரம் தேய்க்கிறது எல்லாம் சேத்து அவங்க பாத்துப்பாங்க.” நு ஒருமாதிரியா சொன்னா “ சரிம்மா நானே பாத்துக்கிறேன் உனக்கு எதுக்கு சிரமம். அது ஒரு சிரமமில்ல நீ வருவதுக்கு முன்னாடி நாந்தானே எல்லாம் பாத்துட்டு இருந்தேன் அது ஒன்னும் எனக்குப்புதுசில்ல” நு சொன்னாள்.
’” ஆமா அம்மா சமையல் சாப்புட்டு நாளாச்சு அம்மா கைப்பக்குவம் உனக்கு வராது அது தனி டேஸ்ட்” நு சொன்னவன்ன அவ சொன்னா தடால்னு “ சரி ஒங்க அம்மா சமையல நல்லா ருசிச்சி ரசிச்சி சாப்பிடுங்க ஒரு வாரத்துக்கு நான் எங்க வீட்டுல போய் ஒரு வாரம் இருந்துட்டு வாறேன்” நு சொல்லிட்டுக் கிளம்பிட்டா.
இப்ப இவகிட்ட மகன்” சரிம்மா பாத்துக்க அவ அவளோட அம்மா வீடுக்குப்போறாளாம். இனி அடுப்படி உன் ராஜ்யியம்தான் ஜமாய். நான் வேலைக்கிப்போய்ட்டு வாறேன் சாயங்காலம் பாப்பாவைபோய் கூப்புட்டு வந்துருங்க” நு சொல்லிட்டு மகளைக்கூப்புட்டுக்கிட்டு பதிலை எதிர்பாக்காமக் கிளம்பிட்டான்.
அவங்க போன கொஞ்சநேரத்துல இவளோட மகள் வந்தாள் இவ ஒரு மாதிரியா இருக்குறதைப்பாத்துட்டு “ என்னம்மா ஒரு மாதிரியா இருக்க என்னாச்சு?” நு கேட்டா “ எல்லா வீட்டுலயும் நடக்குறதுதான் உங்க அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஒரு சம்பளமில்லாத வேலைக்காரி தேவைப்படுறா அதான் விசயம்”.
“ எனக்குத்தெரிஞ்ச வேலைக்காரம்மா ஒன்னு இருக்கு வரச்சொல்லவா?” “ அதுதான் என்னை அப்பாயிண்ட் பண்ணிட்டாங்களே நான் வேலைய ஒப்புக்கொண்டுட்டேன்”.
“ என்னம்மா சொல்ற ஒனக்கு இருக்குற ஒடம்பு கண்டிசனுக்கு எப்புடி நீ வேலை பாப்ப அப்புறம் எதுனாச்சும் ஏடாகூடமா ஆயிடுச்சுன்னா யார் பாக்குறது முடியாதுன்னு அவன் கிட்டச்சொல்ல வேண்டியதுதான எங்க வீட்டுல எல்லாம் மருமமகளா நாந்தான் பாக்குறேன்” “ வேணாம் டி நான் முடிஞ்சவரை பாக்குறேன் முடியலைன்னா போய் சேருறேன் இனி எனக்கென்ன இருக்கு வயசாகிப்போச்சு” ” என்னமோ போம்மா நீ ஆச்சு அவனாச்சு நான் சொல்லி ஒன்னும் ஆகப்போறதில்ல நான் போய்ட்டு வாறேன்” நு சொல்லிட்டு கிளம்பினாள் மகள்.
“ வந்தது வந்த ஒரு வாய் காப்பி குடிச்சிட்டுப்போயேண்” “ இரும்மா நானே போட்டு எடுத்துட்டு வாறேன்” நு சொல்லிட்டு காப்பி போடப்போனாள். அதுக்குள்ள மாவாட்டி வைக்க ஊறப்போட்டது நெனப்புக்கு வர உரலை கழுவி அரிசியப்போட்டு கிரண்டரை ஓட்டிவிட்டாள் இவள் “ இந்தாம்மா காப்பி” நு சொல்லி இவள்கிட்ட காப்பியக்குடுத்துட்டு அவளும் சாப்பிட்டுக்கிளம்பினாள் இவள் அரிசிஆட்டி எடுத்துட்டு உளுந்தப்போட்டு ஆட்டி மாவெடுத்துவிட்டு உரலைக்கழுவும்போது குளவி நழுவிக்காலில் விழுந்துருச்சு. வலி உயிர்போனது அதை அப்படியே போட்டுவிட்டு மாவை கரைச்சி வைச்சிட்டு வலி அதிகமாகப் படுகையில் போய் படுத்தாள். ஆனால் நல்லா கால் வீங்கிருச்சு வலி உசிறு போனது சரி வலிக்கி ஒரு மாத்திரை போடலாம்னா இவளோட ஒடம்புக்கு இருக்குற பிரச்சனையில டாக்டரைக்கேக்காம மாத்திரை எதுவும் சாப்பிடக்கூடாது.
சரி நு சொல்லிட்டு சுண்ணாம்பையும் சீனியையும் வைத்து அரைச்சி காலிலே பத்துப்போட்டாள். அதுக்குள்ள சாயங்காலம் ஆக பேத்திய கூப்புட்டு வரச்சொல்லி ஆட்டோக்காரனுக்குப் போன்பண்ணினாள். ஆனால் 6மணிக்கே இவளின்மகன் வர அவன் வந்து இவள் காலைப்பாத்துட்டு “ என்னம்மா கால் வீங்கிருக்கு என்ன ஆச்சு டாக்டர் கிட்டபோனியா?” நு கேட்டான்.
அதுக்கு” வேணாம் பத்துப்போட்டுட்டேன் சரியாகிடும் கொஞ்சம் இரு காப்பி போட்டு எடுத்துட்டு வறேன்” நு கிளம்பினாள் அதுக்கு அவன் “ இரும்மா நானே போட்டுக்கிறேன் உனக்கு வேணுமா சேத்துப்போட்டு எடுத்துட்டு வாறேன்” நு கேட்டான் சரின்னு இவள் சொல்ல அவன் போனான.
ஆனால் திடீரென்று இவளுக்கு இடதுகை தோள்பட்டையில் இருந்து வலிக்கத்தொடங்குச்சு.காபியோட வந்த அவன் பாத்துட்டு “ஏம்மா ஒரு மாதிரியா இருக்குற இந்தா காப்பிகுடி” நு குடுத்தான் அப்ப இவள் சொன்னாள் “ இடது தோள்ல ஆரம்பிச்சி கை வலிக்கிது ரொம்பக்கடு கடுன்னு கடுக்குது. தாங்க முடியல” ன்னா அவன் உடனே குடும்ப டாக்டரை போனில் அழைத்து விசயத்தை சொன்னான் ஆனால் அவர் “ இடது கை தோள்பட்டை வலியை லேசா எடுத்துக்க முடியாது ஒடனே ஆஸ்அத்திரிகு கூப்புட்டு வாங்க பாக்கனும் இது சீரியஸ்” நு சொன்னார்.
உடனே அவன் இவளை தங்கச்சி அப்புறம் மனைவிக்குத்தகவல் கொடுத்துட்டு ஆஸ்பத்திரிக்கிக் கூப்புட்டுப்போனான் அங்க டாக்டர் சொன்னார்” இது ஹார்ட் அட்டாக் வருவதற்கான அறிகுறி இருந்தாலும் பயப்படத்தேவையில்லை சரியான நேரத்தில் வந்துட்டதால கவுண்டர்ல பணத்தைக்கட்டுங்க ECG scan எல்லாம் எடுக்கனும் சீக்கிரம்போங்க” நு சொல்லிட்டு இவளை லேப்க்குள்ள ஸ்ட்ரெச்சர்ல படுக்கவைச்சி கூப்புட்டுப்போனார்.
வெளிய பாக்கும் போது இவளின்மகன் அழுதுகொண்டிருந்தான் அவனுக்கு இவளின் மகள் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள் அவன் மனைவி அங்கே வர அவளிடம் ஏதோ கத்துவது தெரிஞ்சது. அதற்குள் இவளை உள்ளே கொண்டு போய்ட்டாங்க. இவளும் வேண்டிக்கொண்டாள் “ நான் உன்கிட்ட வந்துட்டாலும் பிள்ளைகளை காப்பாத்து பகவானே” என்று.
உள்ளே எல்லா சோதனைகளும் நடந்தது. ICU பாக்கவே ஒரு மாதிரியாத்தான் இருந்துச்சு. ஆனால் இவளுக்கு பயம் இல்லை ஆனது ஆகட்டும். நமக்கு இனி பொழைச்சி ஒன்னும் ஆகப்போறதில்ல நாம் வேண்டாத ஒருத்தியாகிவிட்டோம் இனி என்ன ஆனா என்ன என்ற மனநிலையில் கண்ணீர் துளிர்த்துச்சு.
லேசாக மயக்கம் வருவதுபோல் இருந்துச்சு. மயங்கிட்டா கண் முழிச்சிப்பாக்கும்போது சுத்தி மகன் மருமகள் மகள் பேத்தி எல்லாம் நின்னுக்கிட்டு இருந்தாங்க .
அப்ப டாக்டர் வந்து சொன்னார்” எல்லா டெஸ்டும் எடுத்துப் பாத்துட்டோம் ஒன்னும் பிரச்சனை இல்லை இன்னும் கொஞ்ச நேரத்துலடிஸ்ச்சார்ஜ் பண்ணிடுவோம் வீட்டுக்க்குப் கூப்புட்டுப் போகலாம் இதுல இருக்குற மருந்து மாத்திரை வாங்கிக்குடுங்க அப்புறம் மிக முக்கியமான விசயம் ரொம்ப வீக்கா இருக்காங்க ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணக்கூடாது முக்கியமா நல்லா ஓய்வெடுக்கனும்”
அப்ப மருமக சொன்னா “ நீங்க சமையல் எதுவும் தொடவேணாம் நானே பாத்துக்கிறேன் நீங்க நல்லா ஓய்வெடுக்கனுமாம்” நு அதுக்கு இவசொன்னா.
“ இனிமே ஓய்வெடுத்து என்ன ஆகபோகுது என்னால முடிஞ்சதை நான் செய்யிறேன். டாக்டர் அப்படித்தான் சொல்லுவாரு அதுக்காக படுத்தேவா கெடக்கமுடியும் நானே பாத்துக்கிறேன்”.
அப்ப மகன் ” "எனக்கு எங்க அம்மா வேணும் அவங்களைத் தொந்தரவு பண்ணாத சும்மா இருந்தாப்போதும் அவங்க வேணும் எனக்கு"ன்னு சொல்லி பச்சப்புள்ளை போல அழுதான். "கவலைப் படாதே எனக்கு ஒன்னும் ஆகாது” சொல்லும்போது இவளுக்கும் கண்ணீர் கன்னத்துல. அ.முத்துவிஜயன்